Editorial

மனச்சிதைவு!

மனச்சிதைவு : உண்மை விபரம்

மனச்சிதைவு என்பது என்ன?

மனச்சிதைவு என்பது ஒரு நாட்பட்ட, தீவிரமான மற்றும் செயலிழக்கச் செய்யும் மனம் சார்ந்த கோளாறு.

இது ஒருவர் புரிந்துகொள்வதில், உணர்தலில் சுவைகளில் மற்றும் நுகர்வதில் மாற்றங்களுக்கு காரணமாகலாம். நோயாளிகள் சமூகத்திலிருந்து விலகி இருப்பார்கள். சில சமயங்களில், அவர்கள் குழப்பமுடையவர் களாக இருப்பார்கள்.

இந்த நோய் ஒருவருடைய வாழ்க்கையில் எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. மற்றும் ஒருவருடைய தெளிவாக சிந்திக்கும் திறனை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில், முடிவுகளை எடுப்பதில் மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவற்றில் எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மனச்சிதைவின் சிகிச்சைக்காக வெவ்வேறுவகை மனக்குழப்பநீக்கி மருந்துகள் கிடைக்கின்றன.

இந்த மருந்துகளுடன் சேர்த்து, மனச்சிதைவின் சிகிச்சைக்காக சமூக உளவியல்சார் சிகிச்சையும் பயன்படுத்தப் படுகிறது.

மனநலம்!

உறக்கம், உற்சாகம், நிறைவான உணவு – இம்மூன்றும் நலமான மனத்திற்கு அடிப்படை.

நாகரீக காலத்தின் வேகத்தில் பலருடைய உறக்கமும் அடித்து போய் விட்டது.

அதனால்தான் இன்று அதிக அளவு தூக்க மாத்திரைகளும் மது மற்றும் போதை பொருட்களும்.

அமைதியான உறக்கமே மனதிற்கு சக்தியைக் கொடுக்கும்.

ஆசை அச்சம் கோபம், எதிர்பார்ப்பு, ஏக்கம் – போன்றவை அதிகமாகும் போதும் தூக்கம் குறைந்துவிடும்.

உடல் வலி, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, நாளமிலாச் சுரப்பிகளின் குறைபாடு உணவு மாற்றங்களும் உறக்கத்தை பாதிக்கும்.

அமைதியில்லா தூக்கத்தில் அவதிப் படுவோரையும், மனநோயில் தவிப்போரையும் திருஷ்டி, சூன்யம், கிரக தோஷம், ஏவல், பேய், பிசாசு, மந்திரம் போன்ற எண்ணற்ற வியாபார தந்திரங்கள் அறியாமையின் அளவுகோள்கள்.

மன பாதிப்பும் மற்ற உடல்நோயைப் போன்றதுதான். மன பாதிப்படைந்தால் சமூக நாணம் (Stigma) தேவையில்லை.

ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் விரைவில் பூரண குணமாகும். எளிமையாக கட்டுப்படுத்த முடியும்.

சிரிப்போ சிரிப்பு

நாகரீக வாழ்க்கையின் வேகத்தில் மனிதன் இழந்த முக்கிய அம்சம் சிரிப்பு.

சிரிக்கும் போது உடலில் என்டார்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து உடலின் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. அதனால் கிருமி தாக்குதல் மற்றும் புற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது.

குழந்தையாக இருக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்தோம். அறிவு வளர வளர நாம் சிரிப்பதைக் குறைத்துக் கொண்டோம். நாளடைவில் மறந்தே விட்டோம்.

சிரிப்பதற்கு என்ன இருக்குது என்பார்கள் சிலர். சிரிப்பதற்கு எதுவும் வேண்டாம். முதலில் போலியாக சிரிக்கவும், பின் இயல்பான சிரிப்பு வந்துவிடும்.

சிரிப்புப்பரிசு மனிதனுக்கு மட்டும் இயற்கை அளித்த வரம். எதையும் தொடர்ந்து உபயோகப்படுத்தினால் அதிகமாகும். தொடர்ந்து நடந்தால் மகிழ்ச்சியும் நலமும் கூடிக்கொண்டே வரும்.

சிரிப்பவரைப் பார்க்கத்தான் மனிதர்கள் விரும்புவார்கள். உம்மணா மூஞ்சிகளைத் தவிர்ப்பார்கள்.

சிரிப்பு மருந்து மிகவும் சிறந்தது. எண்ணற்ற நோய்களைத் தவிர்க்கும். குணமாக்கும்.

சம்மர் ஸ்பெஷல்

ஒரு நாளுக்கு சிறுநீரின் அளவு 400 மிலிக்குக் கீழாகக் குறைதல், குமட்டல், வாந்தி, மயக்கம், தலைவலி, இடுப்புவலி போன்றவை சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், அதிக புரத உணவு மற்றும் கொழுப்பு உணவுகளை உண்ணுதல், நீடித்த சர்க்கரை நோய், கொழுப்பு நோய், சிறுநீரக நோய் உள்ளோர், இளம் வயதில் சர்க்கரை நோய் – போன்றவை சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கும்.

நீண்ட காலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வருடம் ஒருமுறையாவது சிறப்பு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறப்பு சிறுநீர் பரிசோதனை என்பது சிறுநீரில் மைக்ரோ அல்பியூமினூரியா எனப்படும் சோதனை.

சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுகிற அபாயம் உள்ளது.

சிறுநீரகம் செயலிழந்து விட்டால் இரத்த ஓட்டத்தில் படிந்துபோன கழிவுகளையும் அசுத்தங்களையும் வெளியேற்ற தீவிர சிறுநீரக சிகிச்சை தேவைப்படும். இது டயாலிஸில் எனப்படும்.

நவீன மருத்துவம்

நவீன மருத்துவத்தில் எண்ணற்ற புதிய யுக்திகள் உருவாகியுள்ளன. மனித வாழ்வை நூறாண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு உறுப்பு (சிறுநீரகம், கல்லீரல், இதயம்) செயல் இழந்துவிட்டால் அதை மாற்றிக் கொள்ள முடியும். பரம்பரை நோய்களை ஜீன் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். இப்படி பற்பல மருத்துவ அற்புதங்கள் நடந்தாலும் சரியான உணவு, சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்களினால் பல நோய்களை தவிர்க்கலாம். முற்றிலும் குணமாக்கலாம்.

 • இன்று மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். நிறைய விதங்களில் சாப்பிடவும், உணவில் ஈர்ப்பு உண்டாகின்ற சுவைகளும், செயற்கை உணவுகளும், விதவிதமான மாமிச உணவு களும் அதிகமாகி விட்டன. மாதத்தில் என்றோ ஒருநாள் இனிப்பு மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்ட நிலைமாறி தினமும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடும் நிலை. இதனால் சிறுவர் முதல் முதியோர் வரை அதிகமாக சாப்பிட்டு தன் சொந்த உடலைத் தூக்கவே சிரமப்படுகிறார்கள்.
 • உடல் அதிக எடைக்கு இரைப்பை பைபாஸ் சிகிச்சையில் இரைப்பையின் அளவைக் குறைத்துவிட்டு, உணவு செல்லும் குடலின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும். அதனால் சாப்பிடும் அளவும், உணவில் இருந்து ஊட்டச் சத்து கிரகிக்கும் அளவும் குறைவாக இருக்கும்.
 • இந்த குறைபாட்டை நீக்கிய புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சையில் இரைப்பை அளவு மட்டுமே குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவை சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில் உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.
 • அளவான உணவு, போதுமான உறக்கம், மிதமான உடற்பயிற்சி போன்றவற்றில் உறுதியாக இருந்தாலே போதும். உடல் பருமன் வராமலே தடுக்க முடியும். எந்த சிகிச்சையும் தேவையில்லை.

நல்ல மருத்துவர் யார்?

நோயாளிகளை அன்புடன் வரவேற்பார்.

மரியாதையுடனும், கண்ணியத்துடனும் சிகிச்சை அளிப்பார்.

அறிகுறிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் முழுமையாக நோயைத் தீர்க்க சிகிச்சை தருவார்.

நோயாளியின் திறமையையும் புரிந்துகொள்வார்.

சொல்வதைக் கவனமுடன் கேட்டு, நோய், உடல்நலம் பற்றிய உண்மை விவரங்களைத் தெரிவித்து, நோயாளியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்.

தேவைப்பட்டால் அவரே உங்கள் வீட்டுக்கு வருவார், அல்லது வேறு ஒரு மருத்துவரை அனுப்பி வைப்பார்.

கடினமான மருத்துவ சொற்களை விளக்குவதற்காக வரைபடங்களைப் பயன்படுத்துவார்.

நோயைக் கண்டறிதல், மருத்துவ நடைமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் உடல் நலம் என அனைத்தையும் விளக்குவார்.

மாற்று மருத்துவம் குறித்து வெளிப்படையாகப் பேசுவார். தேவை ஏற்பட்டால் அந்தச் சிகிச்சையை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பார்.

நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்டு, தனக்குச் சமமானவராக எண்ணுவார்.

வாங்கக்கூடிய விலையில் மட்டுமே மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

தகவல்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்வார் (புத்தகங்கள், பத்திரிகைகள், இணையதளம்)

உங்கள் உடல் நிலை அல்லது மருத்துவப் பரிசோதனை குறித்த கூடுதல் தகவல் தேவைப்பட்டால், அதற்காக உங்களை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்.

காய்ச்சலைத் தடுப்போம்!

காய்ச்சல் என்பது நோயல்ல. நோயின் ஒரு அறிகுறி. காய்ச்சலை உண்டாக்குவது கிருமிகள்தான். சரியான சுகாதார வழிகளைக் கடைப்பிடித்தால் காய்ச்சலைத் தடுக்கமுடியும். குறிப்பாக பன்றிக் காய்ச்சலைத் தடுக்க பல்வேறு வித எச்சரிக்கைகள் தேவை.

 • நோய் வந்திருக்குமோ என்று சந்தேகப் படக்கூடியவர், நோய் இருக்கலாம் மற்றும் நோய் தாக்கி இருக்கிறது என்று உறுதியானவர்களுக்கு கண்டிப்பாக மருந்து கொடுக்க வேண்டும்.
 • நோய் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களைப் பழகிய இறுதி நாளில் இருந்து ஏழு நாட்கள் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.
 • நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் மாஸ்க் அணிய வேண்டும்.
 • ஆம்புலன்ஸில் வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.
 •  ஆம்புலன்ஸ் டிரைவர்களை மூன்று மடிப்பு சர்ஜிகல் மாஸ்க் அணிய வேண்டும்.
 • நோயாளியை மருத்துவமனையில் சேர்த்த உடன், ஆம்புலன்ஸ் உள்ளேயும் வெளியிலேயும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருள்களையும் சோடியம் ஹைப்போகுளோரைட் / குவார்டனரி அமோனியம் காம்பவுண்ட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 • கையை நன்றாகக் கழுவிய பிறகே நோயாளியைத் தொடவேண்டும் நோயாளியைத் தொட்ட பிறகும் கை கழுவ வேண்டும்.
 • நோயாளிகள் தங்கிய அறையை சில நாட்களுக்குத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.
 • எந்தப் பொருளையும் கையுறை அணிந்து தான் எடுக்க வேண்டும்.
 • பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தங்கி இருக்கும் அறையில் உள்ள பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள அல்லது வெளியேற்ற வேண்டும்.

சர்க்கரை நோயும் யோகா பயிற்சிகளும்

யோகா பயிற்சியின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலங்கள் கணையத்தை இயக்குவதற்கும், இன்சுலினையும், குளுக்கோகானையும் வெளிப் படுத்துவதற்கும் யோகா உதவும்.

யோகா செய்வதால் தன்னிச்சையாக செயல் படும் நரம்பு மண்டலங்களின் செயல்திறன் குறைந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைப் படுத்தப்படுகின்றது.

ஆகவே தினமும் ஆசனங்கள், பிராணாயாமம், சுதர்சனகிரியா ஆகியவற்றை செய்வதன் மூலம் கட்டுப் பாட்டிற்குள் வைக்கலாம்.

தியானம் செய்தால் மனம் அமைதி அடைந்து, மன உளைச்சல் குறைந்து புத்துணர்வு எற்படும். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற நோய்கள் குணமடைகின்றன.

தியானத்தின் பயனாக இரத்த நாள அடைப்புகள் அகற்றப்பட்டு இதய துடிப்பு குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்.

தியானம் செய்வதனால், உடலில் உள்ள கார்டிசால் அளவு அதிமாகாமல் மன உளைச்சல் குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது.

கணையத்தைப் பலப்படுத்தி இன்சுலின் அளவை அதிகப்படுத்துதல் தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

நூறாண்டு வாழ முடியும்!

நவீன வாழ்க்கையின் உணவு பழக்க வழக்கம், சுற்றுப்புறம், வேலைமுறை, மனித உறவுமுறை, பெருகிவரும் சமுதாய தீய சக்திகள் போன்றவற்றால் பல பாதிப்புகள்.

யாருக்கு வேண்டுமானாலும் எந்த நோய் வரலாம் என்ற நிலை. ஆனாலும் அதைக் கண்டறிய நவீன மருத்துவ பரிசோதனைகள், தொழில் நுட்பங்கள், நவீன கருவிகள், அதைக் குணப்படுத்த நவீன மருந்துகள், அறுவை சிகிச்சைகள் என மருத்துவம் பெருமளவில் வளர்ந்து விட்டது.

தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாமையால் சாதாரணமாக குணமாகக் கூடிய அல்லது தடுக்கக்கூடிய நோய்களை வளரவிட்டு, அவதிப்பட்டு, பெரிய அளவு செலவு செய்யவேண்டிய நிலை. சில சமயங்களில் உயிர் ஆபத்து ஏற்பட்டு குடும்பமே தவிக்கும் நிலை.

ஒவ்வொரு மனிதனும் நூறாண்டு வாழ முடியும் என்ற கோணத்தில் வளரும் இன்றைய மருத்துவம் மாத இதழ் வாசகர்களின் ஆதரவால் பதினாறு ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

கருத்தரிப்பதற்கு முன்பு உடல்நலம் பேணுதல்

கருத்தரிப்பதற்கு முன்பு உடல் எடை மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்தால், கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். சரிவிகித உணவும், சரியான உடற் பயிற்சிகளை இடைவிடாது செய்தலும் உடல் எடையை சரியாக வைத்திருக்க உதவும்.

உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால் கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் நமது இதயத்திற்கும் வேலைப் பளு கூடுகிறது. மிகவும் உடல் பருமனாக உள்ள பெண்கள் கருத்தரிக்கும்போது கருவில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகின்றன. பெரிய உடலமைப்பை உடைய பெண்களது கருவில் உருவாகும் குழந்தைகளும் பெரிய குழந்தைகளாக இருக்கும். எனவே அவை பிறக்கும் போது, பிறப்புக் குழாயின் மூலம் வெளிவருவது கடினமாகி சிசேரியன் மூலம் குழந்தையை எடுக்க வேண்டிய சூழ்நிலை பல சமயங்களில் ஏற்படுகிறது.

உடல் எடை மிகவும் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இத்தகையவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல சமயங்களில் “பிறக்கும் சமயத்தல் எடை மிக குறைவாக” உள்ளன. இதனால் பிரசவ காலத்திலும் பிறப்பிற்குப் பின்பும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

கருத்தரிக்கும் காலத்தில் சரியான உடல் எடையைப் பெற உங்களுடைய உணவைத் திட்டமிடுவது அவசியம். சாதாரணமாக ஒரு பெண்ணிற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2000 கலோரிகள் தேவைப்படுகின்றன். நிறைய பழங்களையும், பச்சைக் காய்கறிகளையும். கொண்டைக் கடலை, ராஜ்மா போன்ற முழு தானியங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.  கொழுப்பு சத்து நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்பு சத்துடைய பால், தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம், வழக்கமாகவே சரிவிகித உணவு உண்பவராக இருந்தால், நீங்கள் கருவுற்றிருக்கும் போது உங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் கலோரிகள் மற்றும் கூடுதல் ஊட்டச் சத்துக்களுக்கேற்ப உங்கள் உணவில் சிறுசிறு மாற்றங்களை மிக எளிதாகச் செய்துவிடலாம். இவற்றுடன் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களாவது நல்ல சுறுசுறுப்பான நடைப் பயிற்சியும் அவசியம். இதை வாரத்திற்கு 4 அல்லது 5 நாட்களுக்காவது மேற்கொள்ள வேண்டும்.

Advertisements