Articles

இதயத்தைக் கடிக்கும் காய்ச்சல்

முழங்கால் மூட்டில் வலி மற்றும் வீக்கத்தோடு காய்ச்சல் ஏற்படும். முதலில் ஒரு மூட்டில் வலி வந்து அடுத்த நாள் வலி குறைந்து வேறு மூட்டில் வலி. அத்துடன் காய்ச்சல். இத்தகைய காய்ச்சலுக்கு ருமாடிக் காய்ச்சல் எனப்பெயர். இந்த காய்ச்சலின் போது மூட்டுவலி ஏற்பட்டாலும் மூட்டுகளை அதிகமாக பாதிப்பதில்லை. ஆனால் மறைமுகமாக இதயத்தின் மூன்று அடுக்குகளின் உள்பகுதியான எண்டோகார்டியம், நடுப்பகுதியான மையோ கார்டியம், வெளிப்பகுதியான பெரிகார்டியம் இம்மூன்றுமே பாதிப்படைகின்றன.

பல சமயங்களில் பாதிப்புகள் அதிக மில்லாமல் முற்றிலும் குணமாகிவிட்ட நிலையே காணப்படும். ஆனால் அமைதியாக இதயத்தில் வால்வுகளைப் பாதித்துவிடும். அதில் முக்கியமாக மைட்ரல் வால்வு, அடுத்ததாக அயோர்டிக் வால்வு,. இறுதியாக ட்ரைகஸ்பிட் வால்வு என பாதிப்பு ஏற்படும்.

பெரும்பாலோருக்கு ருமாடிக் காய்ச்சலில் மைட்ரல் வால்வுதான் அதிகமாக பாதிக்கப் படுகின்றன. அதனால் அக்காய்ச்சலை இதயத்தைக் கடிக்கும் காய்ச்சல் என்பர்.

இக்காய்ச்சலுக்கு காரணம் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற பாக்டீரியா, தொண்டை கரகரப்பு அல்லது டான்சில் தொல்லை என ஆரம்பித்து இரத்தத்தில் அதன் பாதிப்பு ஏற்பட்டு இறுதியாக இதயத்தைத் தாக்குகிறது.

பெரும்பாலும் இப்பாதிப்பு ஏற்பட்ட பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரே இதய பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படும்.

மைட்ரல் வால்வு சுருங்கி விட்டால் நுரையீரலிருந்து இதயத்தின் இடது பகுதிக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடுக்கப்பட்டு நுரையீரலில் இரத்தத்தின் அழுத்தம் அதிகமாகி மூச்சுத்திணறல் ஏற்படும்.

ஆரம்பத்தில் கடுமையான வேலையின் போது ஏற்படுகிற இந்த மூச்சுத் திணறல் மேன்மேலும் அதிகமாகி இயல்பான வேலையின் போதும் உண்டாகும். பிறகு நாளடைவில் ஒருசில அடி நடந்தாலே மூச்சுத் திணறும். நோய் முற்றினால் படுக்கையிலிருக்கும்போதே மூச்சுத் திணறும்.

ருமாடிக் காய்ச்சல் வந்தால் அதற்கு முறையான பரிசோதனைகளான ASO அளவு இ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளையும் செய்தால் அதை சரியாக தீர்மானிக்கலாம்.

ருமாடிக் காய்ச்சல் என்பதை உறுதிபடுத்திவிட்டால் மூன்று வாரத்திற்கு ஒருமுறை பெனிடியூர் என்ற பென்சிலின் ஊசியைப் போட்டால் அதனால் ஏற்படுகின்ற இதய பாதிப்பை தவிர்த்துவிடலாம். அந்த ஊசியை சுமார் பத்தாண்டுகளோ அல்லது மருத்துவரின் ஆலோசனைக்கேற்பவோ தொடர்ந்து போட வேண்டும்.

எலிக் காய்ச்சல்

 • எலிக் காய்ச்சல் என்ற நோய் சாதாரண காய்ச்சலாகவோ மிகக் கடுமையான காய்ச்சலாகவோ ஏற்படலாம்.
 • கல்லீரல்/ சிறுநீரகத்தைத் தாக்கி உயிருக்கே ஆபத்துகூட எற்பட செய்யலாம்.
 • வீல்ஸ் (மஞ்சள் காமாலை) என்றமிக மோசமான வியாதியும் இந்தக் கிருமியால்தான் எற்படுகிறது.
 • எலிக் காய்ச்சல் விலங்குகளிடம் இருந்து மிகவும் அதிகமான அளவில் மனிதர்களுக்குப் பரவுகிறது.
 • இந்த நோய், வெப்பம் அதிகமாக உள்ள நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது.
 • மழைக்குப் பிறகு ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, நாய், பூனை, போன்ற விலங்குகளின் சிறுநீர் வழியாக இந்தக் கிருமி பரவுகிறது. விலங்குகள் புல்வெளியில் மேயும்போது சிறுநீர் கழிக்கின்றன. சிறுநீர் கலந்த அந்தப் புல்லைத் தின்னும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றின் உடலுக்குள் கிருமிகள் நுழைகின்றன.

இப்படி நாய், பூனை போன்ற விலங்குகளுக்குப் பரவி அவற்றில் இருந்து மனிதர்களுக்கு இந்தக் கிருமிகள் தொற்றி நோயை  ஏற்படுத்துகின்றன.

நாய், எலி போன்றவற்றிடம் இருந்துதான்  குழந்தைகளுக்கு மிக எளிதில் இந்தக் கிருமி பரவுகிறது.

எலிகளின்  சிறுநீர் கலந்த மண் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் தொழிலாளர் களிடையே இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது. மீன் பிடித்தல் மற்றும் நீந்துபவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பரவும் முறை

நேரடியாகப் பரவுதல்

லெப்டோஸ்பைரா கிருமிகள், தோலில் உள்ள சிறு காயங்கள் மற்றும் உட்புற தோல் எனப்படும் சளிப்படலம் வழியாக உடலுக்குள் நுழைகிறது.

மறைமுகமாகப் பரவுதல்

நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் கலந்த மண், நீர், காய்கறிகளைத் தொடுவதால் தோலில் உள்ள சிறு கீறல்கள், காயங்கள் வழியாக உடலுக்குள் கிருமிகள் செல்கின்றன.

நோய்க் கிருமிகள் இருக்கும் உணவு மற்றும் நீரை உட்கொள்வதாலோ நோய் ஏற்படும்.

விலங்குகளின் சிறுநீர் துளிகள் கலந்த காற்றைச் சுவாசிக்கும் போதும் ஆடு, மாடு, ஆகியவற்றில் பால் கறக்கும் போதும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

கிருமிகள் உடலுக்குள் நுழைந்த 4 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் தோன்றும். சாதாரணமாக பத்து நாட்களுக்குள் அறிகுறிகள் ஏற்பட்டு விடும்.

எலிக்காய்ச்சல் பெரும்பாலும் அறிகுறிகளே இல்லாமல் சரியாகிவிடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் மிகச்சிலரே மூளை பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருப்பார்கள்.

காய்ச்சல் இருவகையில் ஏற்படும் 

 1. மஞ்சள் காமாலை இல்லாத வகை 

ரத்தத்தில் நோய்க் கிருமிகள் பெருகும்போது அறிகுறிகள் ஏற்படும். காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, உடல்வலி, நாடித்துடிப்பு குறைதல், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை.

இவற்றுடன் தலைவலி, கால், முதுகு, வயிறு பாதிப்பு, கண்கள் சிவந்து போதல் மற்றும் கூசுதல், கண்களுக்கு பின்பக்கம் வலி, உடல் முழுவதும் நிணநீர் கட்டிகள் , கல்லீரல், மண்ணீரல் வீங்குதல், சிவப்பு நிறத் தடிப்புகள் போன்றவை ஏற்படும். தொண்டை வலி, நிமோனியா, மூட்டு வலி, இதய பாதிப்பு, விரை வீக்கம் போன்றவையும் ஏற்படும். மூளைக் காய்ச்சலும் ஏற்படும்.

 1. மஞ்சள் காமாலையுடன் கூடிய வகை 
 • முதலில் ஏற்படும் அறிகுறிகள், மஞ்சள் காமாலை இல்லாத எலிக்காய்ச்சல் போல் இருக்கும்.
 • மிக வீரியமான நிலையில் ரத்தம் உறையும் தன்மை குறைந்து ரத்தக் கசிவு ஏற்படும் நிலையில் இதயப் பாதிப்பு ஏற்படும்.
 • சிறுநீரில் ரத்தம், புரதம் மற்றும் காஸ்ட்ஸ் வெளியேறும்
 • சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படலாம்.
 • மூக்கில் இருந்தும் உணவுக் குழாயில் இருந்தும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

பரிசோதனைகள் 

 1. மைக்கேராஸ்கோபிக் அக்ளுடினேஷன் (Microscopic agglutination test)
 2. எலீஸா பரிசோதனை
 3. பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் பரிசோதனை
 4. இம்யூனோ ஃப்ளோரசன்ஸ் டெஸ்ட்
 5. இம்யூனோ கெமிக்கல் டெஸ்ட்

சிகிச்சைகள்

 • பென்சிலின்  (Pencillin G)
 • டெட்ராசைக்ளின்  (Tetracycline)
 • தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மருந்து கொடுத்தால் நோயின் தீவிரம் குறையும்.

நோய் தடுப்பு முறைகள்

 • சிறுநீர் கலந்த அசுத்தமான தண்ணீர் மற்றும் மண்ணைத் தொடக் கூடாது.
 • எலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
 • விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் விலங்கு களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கும் தடுப்பூசி போடவும்.
 • அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் டாக்சிசைக்ளின் மருந்தை வாரம் ஒருமுறை 200 மி.கி என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

சிக்குன்குனியா

சிக்குன்குனியா காய்ச்சல், சிக்குன்குனியா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. ஈடிஸ் ஈஜிப்டி என்ற கொசுவால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்தக் கிருமிகள் மிக அதிக அளவில் பரவுகின்றன. கொசுக்களால் மட்டுமே மனிதர்களிடையே பரவுகிறது. சிக்குன்குனியா காய்ச்சலானது, பாதிக்கப்பட்டவரின் மூட்டுகளைத் தாக்கி முடக்குமே தவிர இறப்பை ஏற்படுத்தாது.

பரவும் முறை

கொசு மூலம் மட்டுமே பரவுகிறது. பெரும் பாலும் மழைக்காலங்களில்தான் பரவும். மனிதர்களின் வசிப்பிடங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பெருகின்றன.

நோய் அறிகுறிகள் :

காய்ச்சல், நடுக்கம், தலைவலி, வாந்தி, மூட்டு வலி மற்றும் வீக்கம், தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், கண் கூச்சம் போன்றவை முக்கியமான அறிகுறிகள்.

காய்ச்சல் மூன்று நாட்களிலேயே குணமாகி விடும். ஆனால் மூட்டு வலி மற்றும் வீக்கம்  மட்டும் பல நாட்களுக்கு நோயாளியின் வயதைப் பொறுத்து ஒன்று முதல் மூன்று வாரங்களுக்கோ அல்லது பல மாதங்களுக்கோ நீடிக்கலாம்..

இந்த காய்ச்சலால் முதுகு வலி, கறுப்பு நிறவாந்தி, மூக்கில் ரத்தம் கசிதல், மூட்டு வலி போன்றவை ஏற்படும்.

கைவிரல் மூட்டுக்கள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால்விரல் மூட்டுக்களைத்தான் இந்தக் காய்ச்சல் மிக அதிகமாகத் தாக்கும்.

பரிசோதனைகள்

 • எலீஸா (Elisa)
 • HI (Heamagglutination Inhibition)
 • காம்ப்ளிமெண்ட் (CFT)
 • RT – PCR

சிகிச்சை

 • காய்ச்சல், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க பாரசிடமால் மருந்தைக் கொடுக்கலாம்.
 • ஆஸ்பிரின், ஸ்டீராய்ட் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
 • சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நல்ல ஓய்வு தேவை. கை கால்களுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்லது.

சர்க்கரை நோய்

உண்ணும் உணவை உடல் குளுகோஸாக (சர்க்கரை) மாற்றுகிறது. பிறகு அந்த சர்க்கரை, இரத்த ஓட்டத்தில் சேர்கிறது. கணையத்தில் சுரக்கின்ற இன்சுலினும் இரத்தத்தில் சேர்கிறது.

இதனால் சர்க்கரையானது அணுக்களின் உள்ளே செல்ல முடியும். பிறகு உயிரணுக்கள் சர்க்கரையை எரித்து, உடலுக்கு எரிபொருளை வழங்குகிறது. அதனால் தான் உடலுறுப்புகள் செயல்படுகின்றன.

சர்க்கரையானது உயிரணுக்களுக்குள் செல்ல முடியாதபோது, இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. இதுவே அதிக இரத்த சர்க்கரை (நீரிழிவு நோய்) எனப்படும்.

முதல் வகை (டைப் 1 ) சர்க்கரை நோய்:

இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள், உயிர் வாழ இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். இல்லை யென்றால் அவர்கள் (மயங்கிய நிலை) எனும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்ற நிலைக்கு போய் விடுவர். அதனால்தான் இது ‘இன்சுலின் சார்ந்துள்ள சர்க்கரை நோய்’ என்பர்.

இந்த நோய் பெரும்பாலும் இளம் வயதில் இருக்கும் போது ஆரம்பிக்கிறது என்றாலும், எந்த வயதினருக்கும் இந்த வகை நோய் ஏற்படலாம்.

இரண்டாம் வகை சர்க்கரை நோய்:

இவ்வகையில் இன்சுலின் உற்பத்தி சீராகவே உள்ளது. ஆனால் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்வதில்லை. அல்லது உற்பத்தி செய்யும் இன்சுலினை போதுமான அளவுக்கு உபயோகித்துக் கொள்வதில்லை. இவ்வகை சர்க்கரை நோய்க்கு சரியான உணவு, உடற்பயிற்சி, மாத்திரை அல்லது இன்சுலின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும்.

அறிகுறிகள் :

இரண்டாம் வகை நோய்க்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றுவதில்லை. அவை படிப் படியாகத் தோன்றும்.

 1. சோர்வான உணர்வு, அசதி
 2. தோல் வறட்சி, அரிப்பு ஏற்படுதல்
 3. கைகள் (அடி) பாதங்கள்உணர்வு குறைந்து போதல்.
 4. கை, கால் நடுக்கம்.
 5. தொடர்ந்து ஆறாத புண், காயம் ஆறுவதில் தாமதம்.
 6. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிக பசி, கண் பார்வை மங்குதல்.
 7. உடல் உறவில் குறைபாடு போன்றவை ஏற்படும்

ஜி.டி.டி பரிசோதனை :

பொதுவாக இரத்தப் பரி சோதனையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் ஜி.டி.டி (குளுக் கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்) செய்து சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.

ஜி.டி.டி பரிசோதனை என்பது மூன்று கட்டமாக மொத்தம் இரண்டு மணி நேரம் செய்யப்படுகிற ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையாகும்.

முதலில் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு. அடுத்து 75 கிராம் குளுக்கோஸ் கலந்த நீரை குடிக்கக் கொடுத்து ஒரு மணி நேரம் கழித்து செய்யப்படுகிற ரத்த சர்க்கரை பரிசோதனை. அடுத்து இரண்டு மணி நேரம் கழித்து இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது ஆகியவை.

ஜி.டி.டி இரத்தப் பரிசோதனை அளவுகள்

ஜி.டி.டி ரத்தப் பரிசோதனையில் வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 120 மில்லிகிராமுக்கு அதிகமாக இருந்தாலே கணையத்தில் போதிய இன்சுலின் சுரக்கவில்லை என்று பொருள்.

இந்த நிலையிலேயே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த தொடங்கி விட்டால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.

ஜி.டி.டி இரத்தப் பரிசோதனையில் இரண்டு மணி நேரம் கழித்து செய்யப்பட்ட சோதனையில் இரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோயை உறுதிப்படுத்தலாம்.

சிறுநீரக பாதிப்பு :

கண்களுக்கு அடுத்ததாக சிறுநீரகங்களை சர்க்கரை நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவையும் இயல்பானதாக வைத்துக் கொள்வது அவசியம்.

எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் (மைக்ரோ அல்புமின் யூரியா சோதனை) சர்க்கரை நோயினால் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆரம்பித்துள்ளதைக் கண்டுபிடித்து விட முடியும். மருந்து சிகிச்சை மூலமே சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.

தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். கால் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறி எனலாம்.

இதய பாதிப்பு :

உடலில் உள்ள கொழுப்பைப் பிரிக்கும் செயல்பாட்டிற்கு இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது.

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிமாக இருந்தால் கொழுப்பு பிரியாமல் கெட்ட கொழுப்பு சத்து (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) அதிகமாகி. இரத்தக் குழாய்களை அடைக்கும். இதற்கு ‘அதிரோஸ்கிளிரோசிஸ்’ என்று பெயர். இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதய ரத்த குழாய்களிலும் இத்தகைய பாதிப்பும் ஏற்படும்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் காரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப் பட்டு வலி உணர்வைத் தெரிவிக்கும் ஆற்றலின் பாதிப்பு ஏற்படும். நோயாளியின் வயதைப் பொருத்து, ரத்த கொழுப்பு சத்து அளவுகள் அதிகமாக இருக்கும் நிலையில் இதயத்தைக் காக்கும் சிகிச்சையும் சேர்த்து செய்யப்படும்.

சரியான காலணி :

ஒரு சிலருக்கு கால் விரல்களின் நுனிப் பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், பஞ்சு மெத்தையில் நடப்பது போன்றஉணர்வு ஆகிய அறிகுறிகள் இருக்கும். கால் நரம்பு, ரத்த குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் தெரியலாம்.

சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்பு ரத்தக்குழாயின் தன்மையை அறிய பரிசோதனைகள் உள்ளன. பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, எம்.சி.ஆர் (மைக்ரோ செல்லுலார் ரப்பர்) அல்லது எம்.சி.பி (மைக்ரோ செல்லுலார் பாலிமர்) சிறப்புக் காலணிகளை அணிவது நல்லது.

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயினால் கால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும். சர்க்கரை நோயைக் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது, சர்க்கரை உள்ளவரின் குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு உணவுமுறை, உடற்பயிற்சிகளைக் கடைப்பிடிப்பது, மருந்துகளை சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து விழிப்புடன் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது ஆகியவை மிக முக்கியம்.

சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களுக்கு இரத்தக்குழாயின் நிலையைப் பொருத்து சிகிச்சையும் மாறுபடும்.

ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படக் காரணங்கள்:

 • வயது ஆக ஆக இரத்தக்குழாய் சுருங்கி அடைப்பு ஏற்படலாம்.
 • பாரம்பரியம்
 • பெண்களை விட ஆண்களுக்கு ரத்தக் குழாய் அடைபடும் வாய்ப்பு அதிகம்.
 • புகைப்பிடித்தல்
 • அதிக இரத்த அழுத்தம்
 • அதிக கொலஸ்ட்ரால்
 • சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதது
 • உடல் பருமன்
 • அதிகமாக மது அருந்துதல்

போன்ற காரணங்களில் இரண்டுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற வாய்ப்பு இருக்கலாம். இவர்கள் மாரடைப்பு தடுப்பு மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை விழித்திரையில் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உணவே மருந்து :

நீரிழிவு நோய் சிகிச்சை முறையில் உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக முக்கியம். இக் கட்டுப்பாட்டினை செய்யாமல் உயர்ந்த ஊசி மாத்திரை சாப்பிட்டாலும் பலன் குறைவாக இருக்கும்.

அரிசி, கோதுமை, ராகி, பார்லி, மக்காச் சோளம் போன்ற அனைத்திலும் 70% மாவுச்சத்து உள்ளது. ஆகவே அவற்றை சரியான அளவில் உட்கொள்ளுதல் அவசியம்.

கலோரி குறைவாக அதே சமயத்தில் புரதம் அதிகமாக உள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். பயறு, பருப்பு போன்றதாவரங்களிலிருந்து கிடைக்கின்ற நார்ச்சத்து தரமானவை யாகவும், சிறப்பானைவையாகவும் இருக்கும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி கொலஸ்டிராலைக் குறைப்பதால், இயற்கையான நார்ச்சத்துள்ள உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றமுழு தானியப் பயறு வகைகள் மற்றும் கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில், கொழுப்பை குறைத்தால் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாவதையும் இரத்தக் குழாய்களில் அடைப்பு உண்டாவதையும் தடுக்கலாம். அந்த வகையில் சமையலுக்குப் பயன் படுத்தப்படுகின்ற எண்ணெய் மிக முக்கியம்.

தாவர எண்ணெய்களை குறைந்த அளவில் உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை மாற்றி மாற்றி உபயோகித்தால் பலன் அதிகம்.

விரதம் இருப்பதை கண்டிப்பாகக் கைவிட வேண்டும். விருந்தும் தவிர்க்கப்பட வேண்டும்.

உணவையும் பல வேளைகளாகப் பிரித்து சிறு சிறு இடைவெளிகளில் உண்ணுவது நலம். உணவில் கலோரி அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். என்ன சாப்பிடுகின்றோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம்.

நீரிழிவும் கர்ப்பமும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறைப் பிரசவத்தில் குழந்தைப்பேறு, கருச்சிதைவு, உடல் ஊனம், குழந்தை இறந்து பிறப்பது போன்ற சிக்கல்கள் இன்சுலின் உபயோகிப்பதால் தற்காலத்தில் குறைந்து விட்டது.

கருத்தரிப்பதற்கு முன்பும் கருவுற்ற பின்பும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். கருத்தரிக்கும் காலங்களில் நோய்த் தொற்று சிறுநீரக பாதையில் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தையின் வளர்ச்சியினை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக் குறைகளைத் தவிர்க்க வேண்டும்.

பிரசவத்திற்கு முன்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களில் சிலருக்கு பிரசவ காலங்களில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு, இது பெரும்பாலும் கருவுற்று 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடியது. பிரசவத்திற்குப் பிறகும் சர்க்கரையின் அளவை கண்காணித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பிரசவத்திற்குப் பிறகு இவர்களுக்கு இன்சுலின் தேவை குறைந்துவிடும். கர்ப்பத்தின் போது ஊசிக்கு பதிலாக மாத்திரையினை மாற்றக் கூடாது.

சிறுநீரில் கீட்டோன் இருக்கிறதா என்பதை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பார்க்க வேண்டும். கீட்டோன் இருந்தால் தேவையான சத்தி உணவில் கிடைக்கவில்லை என்று பொருள்.

கர்ப்பத்தில் உடல் எடை

வாரத்திற்கு 0.2 கிலோ எடை அதிகரிக்கலாம். இந்த எடை அதிகரிப்பு மெதுவாகவும் படிப்படியாகவும் இருக்க வேண்டும். திடீரென்று அதிக எடை இருந்தால் பரிசோதனை அவசியம்.

உணவு :

உணவுக் கட்டுப்பாடு மிகமிக அவசியம். காய்கறிகள், கீரை தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

உடற்பயிற்சி :

மிதமான உடற்பயிற்சி சர்க்கரையை குறைப்பதற்கும் குழந்தை வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது. நன்றாக நடப்பது. வீட்டில் சிறு சிறு வேலைகளைச் செய்வது நல்லது.

நோய் உள்ளவர்களுக்கு மாத்திரையுடன் சேர்த்து உறிஞ்சும் இன்சுலினை கொடுப்பது உபயோகமாக இருக்கும்.

இரத்த தானம்

இரத்ததானம் செய்வோரின் தகுதிகள் :

 • 16 லிருந்து 71 வயது வரையிலுள்ள ஆரோக்கியமான நபர்கள் இரத்ததானம் செய்யலாம்.
 • 16 வயதுகுட்பட்டோர் அவர்களின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய              சான்றிதழை இரத்த வங்கி அதிகாரிக்கு கொடுத்து சம்மதம் பெற வேண்டும்.
 • இரத்ததானம் செய்ய ஆசைப்படும் விரும்புவோருக்கு எயிட்ஸ் அல்லது      இரத்தக் கோளாறுகளோ இருக்கக் கூடாது.
 • முதல் முறையாக இரத்தம் கொடுப் போரின் வயது 65க்குட்பட்டு இருக்க வேண்டும்

இரத்த தானம் செய்வோரின் உடலிலிருந்து எவ்வளவு இரத்தம் எடுக்கலாம்?

சுமார் 450 மி.லிட்டர் அல்லது உடல் இரத்த அளவில் 9% வரையில் எடுக்கலாம்.

மனித உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்?

வளர்ந்த மனித உடம்பில் 5 லிட்டர் இரத்தம் இருக்கும்.

தானம் செய்த அளவு இரத்தம் நமது உடல் மறுபடியும் பெறஎவ்வளவு நாட்களாகும்?

தானம் செய்த அளவு இரத்தத்தை நமது உடல் திரும்பி பெற 80% பிளாஸ்மா 24லிருந்து 28 மணி நேரமும், சிவப்பணுக்கள் 3 லிருந்து 5 வாரமும் பிடிக்கும்.

இரத்த தானத்திற்கு முன்பும் பின்பும் நிறைய நீர் ஆகாரம் குடிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வோர் இரும்பு சத்துள்ள உணவை நிறைய சாப்பிடவேண்டும்.

அடிக்கடி இரத்த தானம் கொடுப்போர் கொடுக்க வேண்டிய இடைவெளி என்ன?

அடிக்கடி இரத்த தானம் கொடுப்போர் 12 வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்தில் 5 முறையோ கொடுக்கலாம்.

இரத்த தானம் கொடுப்பதற்கு முன் உணவை சாப்பிடலாமா?

சாப்பிடலாம். இரத்த தானம் கொடுப்பதற்கு 1 லிருந்து 4 மணி நேரத்திற்கு முன்பாக, சோர்வு அடையாமல் இருக்க நல்ல சத்துணவை சாப்பிடவேண்டும்.

இரத்த தானம் செய்தவர் தானத்திற்கு ஓய்வு எடுப்பது அவசியமா?

இரத்த தானம் செய்யப்பட்ட இரத்த இழப்பை உடலமைப்புகள் சமநிலைப் படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் தானம் கொடுத்தோரின் இரத்தம் கொடுத்த ஒட்டையிலிருந்து இரத்தக்கசிவு நின்று விட்டதாக மருத்துவர் உறுதிபடுத்திய பிறகே, இரத்த தான அறையிலிருந்து வெளி செல்ல வேண்டும்.

இரத்த தானத்திற்கு முன்பாக தானம் செய் பவரின் இரத்த சோதனை ஏன்?

இரத்த தானத்திற்கு முன்பு தானம் கொடுப்பவரின் சிறிதளவு இரத்தத்தை ஹிமோகுளோபின் அளவை ஆராய்வதற்காக அவரின் கைவிரலிலிருந்து மாதிரி சோதனைக்கு எடுக்கப்படுகிறது. இந்த சோதனையால் இரத்ததானம் கொடுப்போர் இரத்த தானம் செய்யக்கூடிய உடல் திறன் பெற்றவரா என்றும், கொடுத்த பிறகும் ஆரோக்கியமாக இருக்கக்கூடியவரா என்று அறியலாம்.

இரத்த தானம் செய்வதால் எய்ட்ஸ் வர வாய்ப்பு உள்ளதா?

கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், ஊசிகள் புதியவை. அதுமட்டுமில்லாமல் இந்த ஊசிகள் மாசற்றவை. ஒரு தடவை மட்டுமே உபயோகப் படுத்தப் படுகின்றன.

ஆகையால், இரத்த தானம் செய்பவருக்கு எய்ட்ஸோ அல்லது மற்ற நுண்ணுயிர்த்தொற்றோ வர சிறிதளவும் வாய்ப்பு இல்லை.

இரத்த தானம் செய்யப்பட்ட இரத்தம் மறுபடியும் சோதிக்கப்படுமா?

கண்டிப்பாக சோதிக்கப்படும்.

 1. நுண்ணுயிர் கிருமி பரிசோதனை
 2. நுண்ணுயிர் ஈரல் அழற்சி,
 3. இரத்த வகை மாறுபாடு.
 4. எய்ட்ஸ் முதலிய குறைகளை ஆய்வு

செய்வதற்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப் படும்.

அதே நேரத்தில் ABO மற்றும் Rhesus வகை ஆய்வுகளும் நடை பெறும்.

இரத்த வகை என்றால் என்ன?

உயரம், கண் நிறம் போலவே இரத்த வகைகளும் பெற்றோரிடமிருந்து மரபு வழி ஏற்பட்டவை.  இவை ABO மற்றும் Rhesus என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. Rhesus வகை பாசிடிவ். நெகடிவ் என்று பிரிக்கப்பட்டன.

இரத்த வகைகளில் மிக பொதுவான Donar மற்றும் பொதுவான Recepient யார்?

இரத்த வகைகளில் மிக பொதுவான Donar O பாசிடிவ். இரத்த வகைகளில் பொதுவான Recepient AB  நெகடிவ்.

யார் யார் எந்த வகை இரத்தத்தை பெறலாம்?

தானம் கொடுத்தவரின் மாதிரி இரத்தமும், பெறு பவரின் இரத்தமும் ஏற்பு பொருத்தம் பார்க்கப் படுகிறது. பொதுவாக நோயாளிகள் தமக்கு பொருந்தும் ABO மற்றும் Rh வகை இரத்தத்தை பெறுவார்கள். நெருக்கடியான நிலைமையில் மாறு வகையாக இருந்தாலும் ஞ வகை இரத்தத்தை பெறலாம்.

மூக்கில் இரத்தம் வருதல்

 • மூக்கிற்கு அடிபடுவதால் மூக்கிலிருந்து இரத்தம் வெளியாகும்.
 • உலர்ந்த காற்று, மூக்கினை நோண்டுதல், வேகமாக ஊதுதல் மற்றும்      அடிபடுவதால் மூக்கிலிருந்து இரத்தம் வரும்.
 • மூக்கிலிருந்து இரத்தம் வருவது, வாந்தியிலோ அல்லது தொண்டையிலோ      வெளிப்படும்.
 • 15-லிருந்து 20 நிமிடங்களுக்கு மூக்கை அழுத்திப் பிடித்தால் போதும் அப்படி      சிகிச்சை அளித்தும் இரத்தப்போக்கு நீடித்தாலோ, மூக்கில் இரத்தம் வருவது      அடிக்கடி நிகழ்ந்தாலோ இரத்தம் தொண்டைக்கு தொடர்ந்து போனாலோ      மருத்துவ சிகிச்சை தேவை,
 • இது சாதாரணமாக சிறுவர்களுக்கு ஏற்படும். பெரியவர்களுக்கு ஏற்பட்டால் இரத்தக் கொதிப்பு நோய், பிற இரத்தக் கசிவு நோய்கள் உள்ளதா என பரிசோதனை தேவை.

பயமுறுத்தும் இரவுக் கனவுகள்

தூக்கத்தில் திடீரென விழித்தெழுதல்

சிறுவர்கள் கனவு கண்ட அடுத்த நாள் விளக்கமாக கனவினை விவரிப்பார்கள். இரவில் தூங்குவதற்கு மறுப்பார்கள் இத்தகைய பயமுறுத்தும் கனவுகள், மன இறுக்கம், அல்லது காய்ச்சல் நேரங்களில் தான் அதிகமாக ஏற்படும்.

பய உணர்ச்சி மற்றும் பயமுறுத்தும் கனவுகள் அடிக்கடி வந்தாலோ மன இறுக்கமான சூழ்நிலைகள் இருந்தாலோ மருத்துவ ஆலோசனை தேவை.

பயண நோய்

(வாந்தி, தலை சுற்றல், மயக்கம்)

 • நீண்ட பேருந்து வண்டிகளில் (கார், பஸ்) போவ தாலோ ஊஞ்சலில் ஆடுவதாலோ ஏற்படக் கூடிய சுற்றும் அசைவுகளால் ஏற்படும் வாந்தி உணர்வு அல்லது வாந்தி எடுத்தலை பயணநோய் எனலாம்.
 • சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக ஏற்படும்
 • வாந்தி வரும் உணர்வு, வாந்தி
 • வெளிறிப் போதல்
 • வியர்த்து உடல் ஜில்லிட்டுப் போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
 • பயண வண்டியில் குறைவான அசைவு எங்கு இருக்கிறதோ அங்கு உட்கார வேண்டும். காரின் முன் இருக்கை, ஆகாய விமானத்தில் இறக்கைப் பகுதி, படகில் பின் இருக்கையிலும் உட்கார வைக்க வேண்டும்.
 • வண்டி நகரும் போது முன்புறமாக பார்க்க வேண்டும். பக்கவாட்டில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
 • ஊர்திகள் நகரும் போது படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • பிரயாணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தினை கொடுக்க வேண்டும்.

பொன்னுக்கு வீங்கி (மண்ணாங்கட்டி அம்மை)யால் ஏற்படும் மலட்டுத் தன்மை

இது வேகமாக பரவும் வைரஸ் தொற்று நோய், இது உமிழ்நீர் சுரப்பியினை வீங்கச் செய்யும்.

பொன்னுக்கு வீங்கி எனும் இந்த ‘பரோடிட் அழற்சி நோய்’ இன்றைய கால கட்டத்தில் அதிகம் இல்லை. ஏனெனில், தடுப்பு ஊசிளை போட்டு விடுவதால் இது வருவது இல்லை.

தடுப்பூசி போட்ட குழந்தைக்கு பரோடிட் (உமிழ்நீர் சுரப்பி இருக்கும் இடத்தில்) வீக்கம் ஏற்பட்டால் அது மற்ற வைரஸ் கிருமிகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ ஏற்படக்கூடும்.

காதுகளுக்கு முன்புறமாக ஒரு பக்கமாகவோ அல்லது இரண்டு பக்கமாகவோ வீக்கம், லேசான காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள்.

ஆண்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் உடனடி ஸ்டீராய்டு சிகிச்சை அவசியம். அதன்மூலம்  மலட்டுத்தன்மை சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.

விரை சுருண்டு விடுதல்

விரை சுருண்டு விடுவதற்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை

அறிகுறிகள்

 • கடுமையான விரைப்பை வலி திடீரென தோன்றுதல் அல்லது தொடைப்பகுதியில் வலி.
 • வாந்தி வரும் உணர்வு, வாந்தி
 • வீங்கிய விரைப்பை போன்றவை.
 • திடீரென ஏற்படுகின்ற இந்த பாதிப்பை ஆறு    மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்து முறுக்கிய விரையை சரி செய்ய வேண்டும்.

Advertisements