Articles

ஒருகோடி குடிமக்கள்

 • சமீபத்திய ஆய்வுகளின்படி தமிழ் நாட்டிலுள்ள 7 கோடி மக்களில் ஒரு கோடி பேர் தினமும் மது அருந்துகிறார்கள். சிறுவர்கள் மற்றும் பெண்களும் கூட. ஒரு சமுதாயத்தில் போதையில் சுய அறிவை இழந்து கோடிக் கணக்கானோர் செயல்பட்டால் எத்தனை சீரழிவுகள் ஏற்படும்? மதுவைத் தொடர்ந்து குடிப்பவர்களின் கணையம், கல்லீரல், குடல்கள் போன்ற எல்லா உறுப்புகளுமே சில ஆண்டுகளில் கெட்டுவிடும்.
 • கணைய அழற்சி பிரச்னையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆரம்பத்தில் மேல் வயிறு வலிக்கும். முதுகிலும் வலி ஏற்படும். பின்னர் முதுகை வளைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்குமே என்ற அளவுககு வலி அதிகமாகும். வாந்தி வரும்.
 • இதில் இரண்டு வகையான அறுவை சிகிச்சை முறை உள்ளது. நோயாளிக்கு ‘எண்டாஸ்கோபி’ மூலமாக இரைப்பையில் சிறு துளை போட்டு கணையத்தில் இருக்கும் தொற்றை வெளியேற்ற முடியும். சிலருக்கு லேப்ராஸ்கோபி மூலம் விலா எலும்புகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய துளை போட்டு தொற்றுகளை வெளியே எடுப்பர்.
 • இடது பக்கம் விலா எலும்புக்கு கீழ் பக்கம் ஸ்கேன் செய்து அதன் அடிப்படையில் கணையத்தின் அழுகிய பகுதியை சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றுவர். இதனால் நோயால் மிகக் கடுமையான பாதிப்படைந்தவருக்கு மிகப் பெரிய அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது.

கவர்ச்சியான முகத்தோற்றம்

 • மாற்றுப் பல் கட்டும் மருத்துவம் இன்றைக்கு மிகவும் எளிது.
 • பல் உடைந்தாலோ, பல் விழுந்த இடத்தில் புதிய பல் தேவை என்றாலோ, அவற்றுக்கு புதிய பல் பொருத்தலாம். பல்லின் நிறம் அல்லது வடிவம் பிடிக்காதவர்களும் இப்போது செயற்கைப் பல் பொருத்திக் கொள்ளலாம்.
 • கேட் கேம் (Computer Aided Design and Computer Aided Machining CAD CAM) தொழில்நுட்பம் வந்து விட்டது. கம்ப்யூட்டர் உதவியுடன் செயற்கை பல் தயாரிப்பதுதான் கேட் கேம்.
 • பல்லின் நிறம், எலெக்ட்ரானிக் ஐ என்ற கருவியின் மூலம் மிகத் துல்லியமாகப் படம் எடுக்கப்படும். இந்தக் தகவல்கள் கம்யூட்டருக்கு அனுப்பப்படும். கம்யூட்டரில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல் தோற்றம், அமைப்பு உள்ளிட்டவற்றைப் பார்த்து, திருத்தங்கள் செய்வர். பின்னர் பல்லின் நிறம், தடிமன், எந்த வகையான மெட்டல் என்பதைத் தேர்வு செய்து இணையம் மூலம் பல் தயார் செய்யும் மையத்துக்கு அனுப்பி அவர்கள் பல்லைத் தயார் செய்து ஓரிரு மணி நேரத்தில் அனுப்புவர். அதன் பிறகு அதை எளிதில் பொருத்தி விடலாம்.
 • தற்போது சிர்க்கோனியம் என்றமெட்டல் அறிமுகம். நிறம், தரத்தில் இந்த மெட்டல் அசல் பல்லைப்போலவே இருக்கும். கேட் கேம்  தொழில்நுட்பத்தில் மனிதத் தவறுகளுக்கு வாய்ப்பே இல்லை.
 • பொதுவாக பல் உடைந்தால், விழுந்தால் அவர் களுக்கு நான்கு அல்லது ஐந்து வகைகளில் இந்த செயற்கைப் பல் கட்டப்படுகிறது. ஒரு பல் விழுந்துவிட்டது என்றால், அதற்கு வலது, இடது பக்கத்தில் உள்ள நல்ல பல்லை கொஞ்சம் டிரிம் செய்து, மேல் சொன்ன முறைகளில் பல் செய்து பொருத்துவர். இது பிரிட்ஜ் மாடல். இதில் பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கை பல் இருப்பதால், அந்தப் பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்த முடியாது.
 • பல பற்கள் மாற்றவேண்டும் என்றநிலையில் உள்ளவர்களுக்கும் இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்போடு பல் உள்ளதோ அதைப் போன்று செயற்கையாக ஸ்குரு (இம்பிளான்ட்) போட்டு செய்யலாம்.

காலில் சுருண்டு விட்ட இரத்தக் குழாய்கள்

 • கால் வலி, கால் சோர்வு, கால்களில் இரத்தக்குழாய் சுருங்கிப்போதல் போன்ற பிரச்சனைகளால், இந்தியாவில் கிட்டத் தட்ட 15 சதவிகிதம் பேர் இத்தகைய ‘வேரிகோஸ் வெயின்’ பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
 • நம் உடல் முழுக்க இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை இதயத்தில் இருந்து வரும் நல்ல இரத்தத்தை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், செலுத்து கின்றன. கெட்ட இரத்தத்தை இதயத்திற்கும் கொண்டு செல்கின்றன.
 • கெட்ட இரத்தக் குழாய்களில் முழங்கால் மூட்டுக்கு கீழ் இரண்டு இடங்களிலும் அடி வயிற்றிலும், மூட்டுக்குப் பின்புறமும் வால்வுகள் உள்ளன. ரத்தம் மேலே செல்லும்போது இந்த வால்வுகள் திறந்து இரத்தம் பாய அனுமதிக்கும். இரத்தம் கீழேயே இறங்க முற்பட்டால் மூடிக் கொள்ளும். இந்த வால்வுகளின் செயல்பாடு பாதிக்கப்படும் போதுதான், வெரிகோஸ் வெயின் நோய் ஏற்படுகிறது.

யார் யாருக்கு பாதிப்பு?

 • மரபியல் ரீதியாக பாதிக்கப்படலாம். நீண்ட நேரம் நிற்பவர்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். முதன் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இந்த வால்வு பாதிப்பு ஆக வாய்ப்பு அதிகம்.
 • இதனால் அரிப்பு, கால் வலி, வீக்கம் இருக்கும். கணுக்காலின் உட்பகுதியில் புண் வரும். கெட்ட இரத்தம் கீழேயே தங்குவதால், அந்த இடத்தல் ஹீமோகுளோபின் வெளியே வந்து, புண் உள்ள இடத்தின் தோலில் படியும். ஹீமோகுளோபினில் இரும்புச் சத்து உள்ளது. அதனால், அந்த இடம் கறுப்பாக மாறிவிடும். அவ்விடத்தில் அரிப்பு ஏற்படும். சொறிந்தால், புண் ஏற்படும். அந்தப் புண் ஆறுவது மிகக் கடினம்.
 • இப்படி உண்டாகும் புண் பெரிதாகி, எலும்பு வரை ஊடுருவி நோய்த் தொற்று உண்டாகும். இந்தத் தொற்று, சிறுநீரகம், கல்லீரல் போன்ற மற்ற உறுப்புகளையும் தாக்க வாய்ப்பு உள்ளது.
 • வேரிகோஸ் வெயினில் உள்ள கெட்ட ரத்தம் உறைந்து உள் இரத்தக்குழாய் வழியாக இதயத்தை அடைந்தால், உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம்.
 • இந்தப் பிரச்னைக்கு திறந்த முறை அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருந்தது. இப்போது சாவித்  துவார அறுவை சிகிச்சை போன்று லேசர் மற்றும் ரேடியோ ஃபிரீக்வன்ஸி அபலேஷன், ஸ்கிலிரோதெரபி போன்ற புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன.
 • வேரிகோஸ் வெயின் பிரச்சனையை ஆரம்பத்தில் கண்டறிந்தால், மருந்து மாத்திரை கொடுத்தே குணப்படுத்தலாம். கம்ப்ரஸ் ஸ்டாக்கிங் என்ற சாதனம் உள்ளது. நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், இதைக் காலில் அணிவதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

மறந்துவிட்ட பண்புகளும் மாறிவிட்ட வாழ்க்கையும்

 • வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்று இளம் வயதினருக்கும் திடீர் மாரடைப்பு வருகிறது. நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் வேறு யாருக்காவது இதயப் பிரச்னைகள் இருந்தால், மற்றவர்களும் முன்கூட்டியே பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.
 • மார்பு வலி வந்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்வது அவசியம். திடீர் மாரடைப்பில் இருந்து உயிரைக் காப்பாற்ற, இப்போது நிறையவே வரப் பிரச்சாத சிகிச்சைகள் இருக்கின்றன. மாரடைப்பு பிரச்னையில் நேரம்தான் மிகவும் முக்கியம். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெறுகிறோமோ, அந்த அளவுக்கு இதயச் தசைகளைக் காப்பாற்றி, உயிரையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 • கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு வந்தால் அந்தோ பரிதாபம் நிலைதான். தற்போது அதை முற்றிலும் குணமாக்க முடியும். மாரடைப்பு வந்தவர்கள் எந்த நேரமும் உயிர் துறக்க நேரிடலாம் என்றநிலை மாறி அவர்களும் நூறாண்டு வாழமுடியும் என்ற நிலை உண்டாகி விட்டது.
 • இதயத்தில் ஓட்டை இருந்தால் அதை இழுத்து வைத்துத் தைப்பது கிடையாது. உலோக தகட்டை வைத்து மூடுவர். சுருட்டும் தன்மையிலான உலோகத் தகடு வந்துள்ளது. இதயத்தின் உள்ளே சென்றதும் அது விரிந்து அந்த இடத்தை முடிக்கொள்ளும்.
 • ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்படி மிகக் குறைவான அளவே மார்பில் சிறிய துளையிட்டு அதன்வழியே ஷேப் மெமரி அலாயை உள்ளே செலுத்தி ஓட்டையை அடைத்து விடுவர்.
 • ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம் இதய பைபாஸ் அறுவை சிசிச்சை, வால்வு பழுது பார்த்தல் மற்றும் வால்வு மாற்றம், சில பிறவி இதயக் குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற பல சிக்கல்களை எளிதில் களைய முடியும்.

எலும்பு புற்று நோய்க்கு ஊனமில்லாமல் சிகிச்சை

 • மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் சமீபத்திய மகத்தான கண்டுபிடிப்புதான் கஸ்டம் ஃபிட் தொழில்நுட்பம்.
 • ‘கஸ்டம்ஃபிட்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் அறுவை சிகிச்சை நேரம் பாதியாகக் குறைந்துவிட்டது. இதன்படி மூட்டு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து இந்த புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக எலும்பின் அமைப்பு எடை விகிதம், பாலினம், வயது, மூட்டின் ஒழுங்கமைப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நோயாளியின் மூட்டினை படமாக வரைந்து அனுப்புவார்கள், இறுதியில் நோயாளியின் மூட்டு போன்ற பிளாஸ்டிக் மோல்டு ஒன்றைத் தயார் செய்து கொடுப்பார்கள். புற்றுநோய் பாதித்த எலும்பின் பகுதியை அகற்றிவிட்டு, இதைப் பொருத்திவிட்டால் (கைகால்களை அகற்றாமல்) புற்றுநோயை பூரணமாக குணப்படுத்தலாம்.

கல்லீரல் புற்றுநோய்க்குத் தீர்வு

 • இந்தியா உள்ளிட்ட தென் ஆசியப் பகுதிகளில் கல்லீரலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஹைபடைடிஸ் வைரஸ் ‘பி’ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இதனால் ஏற்படும் கல்லீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட முடியும். நோயின் பாதிப்பு அதிகம் என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.
 • கல்லீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகச் சிலரே, பெரும்பாலும் நோய் மிகவும் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
 • செலக்ட்டிவ் இன்டர்னல் ரேடியேஷன் தெரபி என்ற புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.
 • பொதுவாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருந்துதான் கதிர்வீச்சு செலுத்தப்படும். அதனால், கதிர் வீச்சு செல்லும் பாதையில் உள்ள நல்ல திசுக்களும் பாதிக்கப்படும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் அந்த பிரச்சனை இல்லை.
 • இவை நேரடியாக புற்றுநோயால் பாதிக்கப் பட்ட பகுதியைச் சென்று தாக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் கல்லீரல் புற்றுநோய் பாதித்த பகுதிக்கு ரத்தம் செல்வது தடுக்கப்படுவதுடன், புற்றுநோயின் டி.என்.ஏவைத் தாக்கி அழித்து விடும். இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மலேரியா

மலேரியா என்ற நோய், பிளாஸ்மோடியம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. இது ‘அனோபிலஸ்’ என்ற பெண் கொசுக்களால் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.

நான்கு வகைகளாக இந்த நோய் பரப்பப் படுகிறது. கொசுக்கள் மூலமாகவும், மலேரியா கிருமிகள் உள்ள ரத்தம் கொடுப்பதாலும், ஊசி மூலமும், பிறக்கும் குழந்தைக்கு தாயிடம் இருந்தும் இந்த நோய் பரவுகிறது.

மூளையைத் தாக்கும் மலேரியா, ரத்த சோகை ஆகியவற்றால் 25 சதவிதக் குழந்தைகள் இறக்கின்றன. மிகவும் மோசமான மலேரியா காய்ச்சலால் 10 முதல் 30 சதவீதக் குழந்தைகள் இறக்கிறார்கள்.

நோய் உண்டாகும் விதம்

பிளாஸ்மோடியத்தில் பல வகைகள் உள்ளன. இது மனித உடலிலும், கொசுவின் உடலிலும் வளரும்.

இந்த மலேரியா கிருமிகள் மனித உடலில் கல்லீரல் மற்றும் ரத்த சிவப்பு அணுக்களிலும் வளரும்.

பெண் கொசு கடித்தவுடன் ரத்தத்தில் பிளாஸ்மோடியம் கலக்கிறது. இது உடனே கல்லீரலில் உள்ள திசுக்களுக்குச் சென்று, வளர்ந்து பெருகி, பிறகு சிவப்பு அணுக்களில் இருந்து வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது காய்ச்சல் ஏற்படுகிறது.

மலேரியாவில் முதல் நிலையில் எந்தவித அறிகுறிகளும் ஏற்படுவதில்லை. தலைவலி, பசியின்மை, உடல் வலி, நெஞ்சு வலி, வயிற்று வலி மற்றும் மூட்டு வலி போன்றவை இருக்கும். காய்ச்சல் வரும் நேரங்களில் உடல் சூடு, நடுக்கம், வியர்வை, தலைவலி, உடல்வலி, முதுகு வலி, வயிற்று வலி, குமட்டல் வாந்தி, பேதி, உடல் வெளிறிப்போதல் போன்றவை இருக்கும்.

கல்லீரல் – மண்ணீரல் வீக்கம், ரத்த சோகை, வெள்ளை அணுக்கள் குறைதல் மற்றும் பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டை அணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகளும் இருக்கும். மிக மோசமான மலேரியாவால் நினைவு இழத்தல், கை கால் வெட்டுதல், மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மாற்றம், ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்தசர்க்கரை அளவு குறைதல், பொட்டாசியம் அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டு நோயாளி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம். ரத்தத்தை ஒரு கண்ணாடி ஸ்லைடில் அடர்த்தியாக விட்டு பரிசோதித்தால் மலேரியா இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சிகிச்சை

 • குளோரோகுயின் மற்றும் பிரைமாகுயின் மருந்துகள்.
 • கொசுவை ஒழிப்பதுதான் மலேரியாவை தடுக்கும் முக்கிய நடவடிக்கை.
 • எப்போதும் சட்டை போட்டுக் கொண்டிருத்தல், கொசு எதிர்ப்பு மருந்துகளைத்தடவிக் கொள்ளுதல், கொசுவலை, கொசுவர்த்திச் சுருள் பயன்படுத்துதல்.
 • தேங்கியிருக்கும் தண்ணீரில் எண்ணெய் மற்றும் பாரீஸ் கிரீன், டெமிபாஸ் மருந்துகளைத் தெளித்தல்
 • சரியான தண்ணீர் வடிகால் ஏற்படுத்துதல்
 • நீர் நிலைகளை ஆழப்படுத்துதல் போன்றவை.

டைபாய்டு

‘சால்மோனல்லா டைபி’ என்ற பாக்டீரியாவால் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. தொடக்கத்தில் சாதாரண நோயாகவே தெரியும். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். அப்போது இதயத் துடிப்பு குறையும். நிணநீர் சம்பந்தப்பட்ட  திசுக்கள் பாதிப்படையும்.

பாக்டீரியாவைப் பரப்பும் பொருள்கள் 

மலம் மற்றும் சிறுநீர் மூலமாக இந்த நோய் பரவுகிறது. பாக்டீரியா கலந்த தண்ணீர், உணவுப் பொருட்கள், நன்கு கழுவாத கை விரல்கள் மற்றும் ஈக்கள் மூலமாக இந்த நோய் பரவும்.

உணவுப் பொருள்களிலும் இந்த கிருமிகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன. மோசமான உணவு, மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பது, திறந்த வெளியில் சிறுநீர், மலம் கழித்தல், கையைக் கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றால் டைபாய்டு நோய் பரவும்.

நோய் ஏற்படும் விதம் 

சுத்தம், சுகாதாரம் இல்லாமல் தயாரித்து விற்கப் படும் உணவு பொருள்கள் மூலமாகவும், அசுத்தமான குடிநீர் மூலமாகவும் நோய்க் கிருமிகள் பரவி டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது.

வாய் வழியாக உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகள் நேராகக் குடல் பகுதிக்குச் செல்கிறது. பிறகு நிணநீர் மண்டலத்திலும், அடுத்து ரத்தத்திலும் கலக்கிறது. ரத்தத்தில் உள்ள ரெடிகுலோ எண்டோதீலியல் செல்களில் பல்கிப் பெருகின்றன.

இவை, குடலில் உள்ள பேயர்ஸ் பேட்சஸ் என்றதிசுவை அதிகமாக வளர்ச்சி அடையச் செய்து குடல் புண்ணை ஏற்படுத்துகிறது. அது அதிகமாகி குடலில் ஓட்டையை ஏற்படுத்துகிறது. மண்ணீரல், கல்லீரல் போன்றவற்றையும் இந்தக் கிருமிகள் தாக்குகின்றன.

அறிகுறிகள் 

 • டைபாய்டு காய்ச்சலால் சிலருக்கு வாந்தி, பேதி ஏற்படலாம். ரத்தத்தின் உறையும் தன்மை குறைவதால் ரத்தம் வெளியேறுதல் போன்றவற்றால், ஒரு வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்டு தீவிரமானால்  ஆபத்தாகிவிடும்.
 • டைபாய்டு காய்ச்சலால் நாடித்துடிப்பு குறைந்து போகும். நரம்பு மண்டலம் பாதிக்கப் படலாம். உணவுக் குழாயில் ரத்தக் கசிவு ஏற்படலாம். காய்ச்சலுடன் உடல் வலி, வயிற்று வலி, கல்லீரல் – மண்ணீரல் வீங்குதல், பசியின்மை போன்றவை ஏற்படலாம்.
 • குழந்தைகளுக்கு, முதலில் பேதியும் பிறகு மலம் இறுகியும் போகும். தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்படும்.
 • 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் மார்புப் பகுதியிலும், வயிற்றிலும் இந்த தடிப்புகள் ஏற்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
 • காய்ச்சல் ஏற்பட்ட இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் காய்ச்சல் தானாகவே குறைந்துவிடும்.

டைபாய்டு பாதிப்புகள்

 • வயிற்றில் ரத்தக்கசிவு
 • குடலில் ஓட்டை: குடலில் ஓட்டை விழுந்தால் நோய்க் கிருமிகள் பரவி, நாடித்துடிப்பு அதிகமாகி, ரத்த அழுத்தம் குறைந்து, வயிற்றில் வீக்கம் ஏற்படும். வயிற்றில் தசைப்பிடிப்பு அல்லது இறுக்கம் உண்டாகும்.
 • இதயத்தில் அலர்ஜி.
 • நரம்பு மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு நினைவு மழுங்கி, மூளையில் உள்ள நீரின் அழுத்தம் அதிகமாகலாம்.
 • காது கேட்காமல் போகலாம்.
 • சிறுநீரகம் பாதிக்கப்படலாம்
 • சிறுநீரகத்தில் சீழ்க்கட்டி ஏற்படலாம்.
 • மூளைக்காய்ச்சல், இதயபாதிப்பு, ஆண்களின் விதைப்பைகளில் பாதிப்பு, நிணநீர்க் கட்டிகளில் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

பரிசோதனை

 • ரத்தத்தில் இருந்து டைபாய்டு பாக்டீரியாவைப் பிரித்து எடுத்து பரிசோதனை செய்யலாம்.
 • ரத்தப் பரிசோதனையில் 20,000 – 25,000  என்ற அளவில் வெள்ளை அணுக்கள் இருந்தால் டைபாய்டு இருப்பது உறுதி செய்யப்படும். பெரியவர்களுக்கு வழக்கமான எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டை அணுக்கள் குறைவாக இருக்கும்.
 • வைடால் பரிசோதனையை ஒரு வாரத்திற்குப் பிறகு செய்யலாம்.
 • பிசி.ஆர் என்ற பரிசோதனையில் டைபாய்டு காய்ச்சலை எளிதாகவும் விரைவாகவும் கண்டு பிடிக்க முடியும்.

தீர்வு

 • தொடர்ந்து வாந்தியோ, பேதியோ, வயிற்று வீக்கமோ ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
 • முழுமையான ஓய்வு தேவை.
 • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • 6 மணிக்கு ஒரு முறை பாராசிடமால் மாத்திரை.
 • தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, செப்டிரியாக் சோன் கொடுக்க வேண்டும்.
 • குழந்தைகள் மயக்கமாகவோ, ஷாக்கிலோ இருந்தால் தீவிர சிகிச்சை தேவை.
 • டைபாய்டு காய்ச்சல் மிக வேகமாகவும் எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவக்கூடியது. அதனால், நோய் தாக்கியவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.
 • உடலையும், உடுத்தும் துணிகளையும், சாப்பிடும் உணவு வகைகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுதல்.

நோய் வராமல் தடுக்கும் முறை 

 • சோப்பை உபயோகித்துக் கை கழுவுவது மிகவும் முக்கியமான தடுப்பு முறையாகும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்திருத்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீரைப் பயன் படுத்துதல், உணவுப் பொருள்களை மூடி சுத்தமாக வைத்திருப்பது போன்றவை.
 • தடுப்பூசி போட்டுக் கொள்வதும் நல்லது. தடுப்பூசி, 100 சதவீதம் நோயைத் தடுக்கா விட்டாலும் நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
 • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியை மீண்டும் கொடுக்க வேண்டும்.

மூளைக் காய்ச்சல்

மூளைக்காய்ச்சல், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடிய தொற்று நோய். நெசிரியா மெனிஞ்சைட்டிடிஸ் என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது. இந்தக் கிருமிகள் மூக்கிலும் தொண்டையிலும் அதிக அளவிலும், வேகமாகவும் வளரக்கூடியது.

பாக்டீரியா இருக்கும் இடங்கள் 

பொதுவாக மூக்கு மற்றும் தொண்டையில் இந்த பாக்டீரியா கிருமிகள் இருக்கும்.

பாதிக்கப்பட்டவரின் மூக்கில் இருந்து ஒழுகும் தண்ணீர் மற்றும் தும்மும்போது வெளிப்படும் எச்சில் துளிகள் மூலமாக மற்றவர்களுக்கு இந்த பாக்டீரியா கிருமிகள் பரவி நோயை ஏற்படுத்துகின்றன.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பள்ளிகள், அகதி முகாம்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இந்த நோய் பாதிப்பு அதிகம்.

நோய் அறிகுறிகள் 

தொண்டை வலி, காய்ச்சல், வாந்தி, பேதி, உடல் வலி, தலை வலி, தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், கால், கை வலி, நடக்க முடியாமை, கை, கால்கள் சில்லிட்டுப் போதல் மற்றும் உடலின் நிறம் மாறுதல் போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

மிக மோசமான மூளைக்காய்ச்சல்:

இந்த நோய் உள்ளவர்களுக்கு, சில மணி நேரங்களில் மிக மோசமான செப்டிக் ஷாக் ஏற்பட்டு, தோலில் ரத்தம் கசியும்.

இழ்ன் பிறகு ரத்தம் உறைதல் ஏற்படும். ரத்த அழுத்தம் குறையும்.

அட்ரீனல் சுரப்பியில் ரத்தக் கசிவு, சிறுநீரகப் பாதிப்பு, இதய செயலிழப்பு, நினைவிழத்தல் போன்றவை உண்டாகும்.

தலைவலி, கண் கூச்சம், வாந்தி, கழுத்து விறைப்பு, வலிப்பு, கை கால் விழுதல், மூளையில் நீர்க்கோர்த்தல், காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைதல், தோலில் ரத்தக் கசிவு, பேதி, மூக்கில் இருந்து மூளையின் நிணநீர் வடிதல், மூட்டு வீக்கம், நிமோனியா காய்ச்சல், இதயத்தில் சீழ் பிடித்தல் போன்றவை ஆபத்தானவை.

பரிசோதனைகள்

 • நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை ரத்தம், மூளை நீர் மற்றும் எலும்பு மூட்டில் உள்ள நீரில் இருந்து பிரித்து எடுத்துப் பரிசோதித்தல்.
 • லாடெக்ஸ் அக்லுடினேஷன் பரிசோதனை (Latex aggulitination test)
 • ரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் குறைவு, அல்லது அதிகரிப்பு
 • ஆல்புமின் குறைவு
 • கால்சியம் குறைவு
 • சி-ரியாக்டிவ் புரோட்டீன் அதிகமாகுதல்.
 • ரத்தம் உறையும் நேரம் அதிகமாகுதல் போன்றவை

சிகிச்சை

 • பென்சிலின் (Pencillin – G)
 • செபோடாக்சீம் போன்ற மருந்துகள் பயன்படும்.

நோய் தடுப்பு

இதன் தடுப்பூசியை, குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் ஆரம்பித்து மாதம் ஒரு முறை என மூன்று தடவை கொடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல், ஆர்த்ரோபோட் என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. உடல் வலி அல்லது மூட்டு வலி, தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நெறி கட்டுதல் இதன் அறிகுறிகள்.

டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல், மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகத் தீவிரமான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தத்தில் உள்ள புரோட்டீனை வெளியேற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஈடிஸ் ஈஜிப்டி என்ற கொசுவால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நகரப் பகுதிகளில்தான் இந்தக் கொசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூடாமல் வைக்கப் பட்டிருக்கும் சுத்தமான தண்ணீரிலும், தேங்கி இருக்கும் சுத்தமான மழை நீரிலும் இந்த கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

இரண்டாவது முறையாக ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல், காம்ளிமெண்ட் என்றசிஸ்டத்தை தூண்டுகிறது. இது ரத்த நாளத்தில் உள்ள எண்டோதீலியம் செல்களைத் தாக்கி ரத்தத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை வெளியேற்றிவிடுகிறது.

டெங்கு காய்ச்சலால் ரத்தக் கசிவு அதிகமாக முக்கியக் காரணங்கள். 

 1. ரத்த நாளங்களில் உறைதலில் ஏற்படும் கோளாறு.
 2. ஈரல் கெட்டுப் போதல்
 3. ரத்தத்தில் உள்ள பிளேட்டிலெட்ஸ் எனப்படும் தட்டை அணுக்கள் குறைந்து போதல்.

டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சலால் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் உள்ள நீர். உப்புகள், புரோட்டீன், சிவப்பு அணுக்கள் போன்றவை வெளியேறி விடுகின்றன. இதனால் ரத்தம் கெட்டியாகி விடுகிறது. மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தும் குறைகிறது. இதயம் அதிகமாக வேலை செய்கிறது. திசுக்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. உடலில் சோடியம் அளவு குறைந்து போகிறது.

மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதாலும், உணவுக் குழாயில் ரத்தம் கசிவதாலும் சில சமயங்களில் இறப்பு எற்படலாம். இதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்களில் ரத்தம் கசிதல், இதயச் சவ்வுகளில் ரத்தம் கசிதல் போன்ற பாதிப்புகளும் இருக்கும்.

சில நேரங்களில் நுரையீரல், அட்ரீனல், ஈரல், மூளை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படும். ஈரல் வீக்கம் உண்டாகும்..

அறிகுறிகள்

உடலுக்குள் டெங்கு வைரஸ் கிருமிகள் நுழைந்த 1 – 7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் வயதிற்கு ஏற்ப மாறுபடும். தொண்டை வலி, மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், லேசான இருமல் உண்டாகும். காய்ச்சல், தலை வலி, முதுகு வலி போன்றவை காய்ச்சலுக்கு முன் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட 24 – 48 மணி நேரத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் உருவாகும்.  உடல் வலி, மூட்டு வலி ஏற்பட்டு அதன் தீவிரம் அதிகரிக்கும். குமட்டல், வாந்தி, நெறி கட்டுதல் மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும்.

டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல் 

இரண்டாவது முறையாக டெங்கு வைரஸ் தாக்கும் போது இந்தப் பாதிப்பு ஏற்படலாம். முதல் தடவை இந்த வைரஸ் தாக்கும்போது நோயாளியின் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. இரண்டாவது தடவை தாக்கும்போது உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது.

வைரஸ் தாக்கிய 4 முதல் 6 நாட்களுக்குப் பிறகு , முதல் நிலையாக காய்ச்சல், உடல் வலி, வாந்தி, தலைவலி, பசியின்மை, இருமல் போன்றவை ஏற்படும்.

இரண்டாவது நிலையில் நோயாளி, கை, கால்கள் சில்லிட்டுப் போகும். உடல் சூடாக இருக்கும். முகம் சிவந்து போகும்.  வியர்வை அதிகரிக்கும். பாதிக்கப் பட்ட குழந்தைகள் மிகவும் பரபரப்பாகவும், எரிச்சலுடனும் இருப்பார்கள். நெஞ்சுக்கு அடியில் வலி உண்டாகும்.

முன் நெற்றி மற்றும் கை, கால்களில் கொசுக்கடி போன்ற சிறிய சிறிய ரத்தக் கசிவுகள் ஏற்படும். பெரிய அளவில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். உடல் முழுவதும் சிவந்த மற்றும் சிவந்து தடித்த புள்ளிகள் உண்டாகலாம்.

வாயைச் சுற்றியும், கை கால்களும் ஊதா நிறத்தில் மாறலாம். குழந்தைகள் சிரமப்பட்டு மிக வேகமாக மூச்சு விடுவார்கள். நாடித்துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும். ஈரல் வீங்கிப் போகும்.

டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்ற நிலையில் உணவுக் குழாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தியும், மலம் கறுப்பாகவும் வெளியாகும்.

டார்னிகுட் பரிசோதனையில் 2.5 செ.மீ சதுரப் பரப்பில் 20-க்கும் மேற்பட்ட ரத்தப் புள்ளிகள் இருந்தால், இந்த நோய் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தாலும் நோய் இருப்பது உறுதி. 

 • சிறிய அளவில் ரத்தப் புள்ளிகள்
 • பெரிய அளவில் ரத்தப் புள்ளிகள்
 • மிகப்பெரிய ரத்தக் கசிவு
 • மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
 • ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்
 • ரத்த வாந்தி அல்லது மலம் கறுப்பாகவோ, ரத்தமாகவோ வருதல்.

பரிசோதனைகள் 

 • ரத்தத்தில் உள்ள எல்லா அணுக்களும் குறைதல்
 • வெள்ளை அணுக்கள் தொடர்ந்து குறைவாக இருப்பது
 • ரத்தம் உறைதலுக்குக் காரணமான தட்டை அணுக்கள் குறைதல்
 • டார்னிகுட் பரிசோதனையில் ரத்தக் கசிவு தென்படுவது
 • அசிடோஸிஸ்
 • ரத்தம் கெட்டியாதல்
 • ரத்தத்தில் ஈரல் என்ஸைம் அளவு அதிகரித்தல்.
 • ரத்தத்தில் உள்ள புரோட்டீன் அளவு குறைவது
 • ரத்தக் கசிவு நேரம் நீண்டு கொண்டே இருப்பது.
 • நெஞ்சு எக்ஸ்ரேயில் நுரை யீரல் ஜவ்வுகளுக்கு இடையில் நீர் காணப்படுவது.

சிகிச்சை 

 • நோயாளிகளை ஒய்வில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
 • காய்ச்சல் குறைய மாத்திரை மற்றும் வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியைப் பயன்படுத்தலாம்.
 • எக்காரணம் கொண்டும் ஆஸ்பிரின் மருந்தைக் கொடுக்கக் கூடாது.
 • வாந்தி, சாப்பிட முடியாமை, மிக அதிகமான வியர்வை, பேதி போன்றவை இருந்தால். வாய் வழியாக உப்பு – சர்க்கரைக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.
 • நாடித் துடிப்பு, மூச்சு விடுதல், ரத்த அழுத்தம் மற்றும் நீர், உப்பு வெளியேற்றம் ஆகியவற்றை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
 • ரத்தம் கெட்டியாகும் தன்மையை பரிசோதித்து அடிக்கடி அறிந்து கொள்ள வேண்டும்.
 • உடல் ஊதா நிறமாக மாறினாலே, மூச்சு விட கஷ்டப்பட்டாலோ, ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.
 • சிரை வழியாக சலைன் கொடுக்க வேண்டும்.
 • ரத்தக் கசிவு ஏற்படும்போது புதிய ரத்தம் அல்லது தட்டை அணுக்கள் உள்ள பிளாஸ்மாவைக் கொடுக்கலாம்.
 • மருந்து கொடுத்த பிறகும் ஷாக் சரியாகா விட்டால் புதிய ரத்தம் செலுத்த வேண்டும்.

Advertisements