Articles

அதிக உடல் எடை

மார்பின் சுற்றளவையும் வயிற்றின் சுற்றளவையும் அளந்தோமானால் மார்பின் அளவு வயிற்றைவிட 6 செ.மீ.க்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல் மார்பின் அளவை விட வயிற்றின் சுற்றளவு அதிகமாக இருக்குமானால் அவர் நிச்சயமாக உடல் பருத்தவர்.

மற்றொரு எளிமையான வழி. ஒருவர் நேராக நின்று முதுகை வளைக்காமல் மார்பு மீது முகத்தைப் பதித்து கால் விரல்களைப் பார்க்கவேண்டும். அவ்வாறு கால் விரல்களைப் பார்க்க முடியாமல் அவருடைய வயிறு தடுத்தால் உடல் பருத்தவர் எனலாம்.

சிலருக்கு உடல் எடை சராசரி அளவிற்கு இருந்தாலும் வயிறு தொந்தியாக இருந்தால் (வயிற்றின் சுற்றளவு மார்பை விட அதிகமாகக் காணப்பட்டால்) அவரும் பருமனானவர் தான்.

வயிற்றின் சுற்றளவு பெண்களுக்கு 89 செ.மீக்கு மேலும், ஆண்களுக்கு 102 செ.மீக்கு மேலும் இருந்தால் ஆபத்தான அளவு எடை உள்ளவர்கள்.

ஒருவருக்கு சராசரி எடையைவிட இருபது சதத்திற்கு மேல் அதிகமான எடை இருந்தால் அவர் அதிக எடையானவர். நாற்பது சதத்திற்கு மேல் அதிகமான எடை இருந்தால் அவர் அபாய எடை உள்ளவர்.

ஆப்பிள் தொந்தியும், சுரைக்காய் தொந்தியும்

சிலருக்கு அதிக எடையின் போது வயிறு மட்டுமே பருத்து தொந்தியாகும். இது ஆப்பிள் வகை. இவர்களுக்கு வயிறு மட்டும் பருத்துக் கொண்டேவரும். ஆனால், சிலருக்கு இடுப்பிலும் தொடைகளிலும் பருத்து விடும். இது சுரைக்காய் வகை.

எல்.ஐ.சி. அளவுகோளின்படி

பெரியவர்களுக்கான சரியான எடை

(30 முதல் 35 வயது வரை)

உயரம்(செ.மீ)   ஆண்களுக்கு (கிலோ) பெண்களுக்கு  (கிலோ)

     145        –               46.0

     148        –               46.5

     150        –               47.0

     152        –               48.5

     156        –               49.5

     158        55.8            50.4

     160        57.6            51.3

     162        58.6            52.6

     164        59.6            54.0

     166        60.6            55.4

     168        61.7            56.8

     170        63.5            58.1

     172        65.0            60.0

     174        66.5            61.3

     178        69.4            65.3

     182        72.6            –

     184        74.2            –

இந்தியரின்  சராசரி உடல் எடை 70 கிலோ. முப்பது வயதிற்குள்ளவர்களுக்கு இந்த அட்டவணையில் உள்ளதை விட 10% அதிக எடை இருக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்த எடையிலிருந்து 10% குறைவான எடை இருக்க வேண்டும்.

சரியான உடல் எடை?

ஒருவரின் உயரத்தை அங்குலத்தில் அளந்தால் எத்தனை வருகிறதோ அதே அளவு எடை கிலோவில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் 5 அடி 6 அங்குலம் உயரமென்றால் 56 கிலோ எடை இருப்பது சரியாகும்.

உயரத்தை செ.மீ. அளந்தால் வருகின்ற எண்ணிக்கையில் 100ஐ கழித்தால் அதுவே ஒருவருக்கு அளவான எடையாகும். உதாரணத்திற்கு உயரம் 166 செ.மீ என்றால் அதில் 100ஐ கழித்தால் 66 வரும். 166 செ.மீ. உயரமுள்ளவருக்கு 66 கிலோ அளவான எடையாகும்.

அதிக எடையினால் ஏற்படுகின்ற சிக்கல்கள்

உடல் குண்டாக இருந்தால்தான் ஆரோக்கியமானது எனப் பலரும் தவறாக கருதுகின்றனர்.

பெரும்பாலோருக்கு சர்க்கரை நோய் உண்டாவதன் முக்கியக் காரணமே அதிக உடல் எடைதான். அதிக எடையிருப்பவர்களுக்கு இரத்தத்தில் அதிக கொழுப்பும் இருக்கும்.

இரத்தக் கொதிப்பு நோயும் அதிக உடல் எடையும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்தவை. அதிக உடல் எடை, அதிக கொழுப்பு, அதிக இரத்த அழுத்தம் இவைகளெல்லாம் மாரடைப்பை உண்டாக்குகின்றன.

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, சினைப்பை, பித்தப்பை, பெருங்குடல் போன்றவற்றின் புற்றுநோயிற்கு அதிக எடையும் காரணமாகும்.

உடல் பருத்தவர்களுக்கே பெரும்பாலும் பித்தப்பையின் கற்கள் உண்டாகின்றன. இடுப்பு மூட்டு, முழங்கால், கணுக்கால் போன்றவைகளின் தேய்வுகளுக்கு அதிக உடல் எடையே முக்கிய காரணம். சிலருக்கு காலின் பாதங்கள் தட்டையாகிவிடும்.

கால்களில் இரத்தக் குழாய்கள் தடித்து வேரிகோஸ் சிரைகள் ஏற்படும். மூச்சுத் திணறல், தூக்கத்தில் மூச்சடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.

பெண்களில் சிலருக்கு மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைத் தோற்றம் ஏற்படும். கர்ப்பத்தின் போது, பிரசவ சிக்கல்கள், கர்ப்பத்தில் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், குறை மாத பிரசவம், பிரசவ சிக்கல்களினால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை, கால்களில் இரத்தக் குழாய்களின் உறைவு போன்ற சிக்கல்கள்  ஏற்படும்.

சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை, குடலிறக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படும். மனச் சோர்வு பாதிப்புகளும் அதிக எடையின் சிக்கல்களாகும்.

வயதானால் உடல் எடை அதிகமாகுமா?

முப்பது, முப்பத்தைந்து, நாற்பது என்று வயதாகும் போது நம்முடைய செயலின் வேகம்  தாமாக குறையும். அதனால் உடலில் உள்ள சத்துக்களை எரிபொருளாக மாற்று கின்ற வேலை மெதுவாக நடைபெறுகிறது. இதனால் வயதாகும் போது எல்லோருக்கும் உடல் பருக்கின்ற வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை உணவுகளான காய்கறிகள், கீரைகள், போன்றவற்றில் கிடைக்கிற கார்போஹைட்ரேட் நமது உடலின் தேவைக்கேற்ற உணவாகும். ஆனால் செயற்கை உணவுகளான இனிப்பு மற்றும் பலகார வகைகளில் கிடைக்கின்ற கார்போஹைட்ரேட் மிக அதிக அளவில் கலோரிகளை உடலுக்கு அளிப்பதால் அவற்றை வயதானவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது.

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் யார் மெலிந்த உடலாக இருக்கிறார்களோ அவர்களின் ஆயுள் அதிகமாக இருக்கும்.

நமது கலாச்சாரத்தில் பருத்த உடலின் மீது கவர்ச்சி அதிகம். அதனால் பருத்த உடலை பலர் விரும்புகின்றனர். பருத்த உடலுள்ளவர்களை ஆரோக்கியமானவர் எனப் புகழ்கின்ற பழக்கம் உள்ளது. ஆனால் உண்மையில்  பருத்த உடலாக இருப்பது ஒரு நோய் என்பதுதான் உண்மை.

பரம்பரையாக பருத்த உடம்புள்ள சிலர், தன் பெற்றோர்களுக்கு, தாத்தா பாட்டிகளுக்கு, பருத்த உடல்தான். அதனால் பருமனாக இருப்பதில் தவறில்லை என்று கூறுவர். உடல் பருத்தாலே மெடபாலிஸத்தில் குறைபாடு உள்ளது என்று பொருள். உடல் பருத்துவிட்டால் சிலருக்கு சத்து குறைபாடுகளின் நோய்களும் இருக்கும். உதாரணத்திற்கு பெண்களில் உடல் மிக்க பருமனாக இருந்தாலும் இரத்தசோகை நோய் பலருக்கு உண்டு.

உடல் பருத்தவர்களைப் பார்த்து அவர்கள் தான் முன்னேறியவர்கள், புண்ணியம் செய்தவர்கள், அவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என நினைப்பதுண்டு.

உண்மையில் பருத்த உடலைப் பெற்ற பிறகு பெரும்பாலோர் தொடர்ந்து தோல்வியடைகின்றார்கள். பல வாய்ப்புகளை இழக்கின்றார்கள்.

சில தவறான கருத்துக்கள்

“உடலிளைத்தால் பலவீனமாகும். சோர்வு ஏற்படும். உடல் அசதியும் நோய்களும் உண்டாகும். உடலிளைத்தால் எதிர்ப்பாற்றல் போய்விடும். உடலிளைத்தால் ஆபத்து” என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் இவையாவும் தவறான எண்ணங்களே.

உடல் பருத்தால் ஆண்களுக்கு கழுத்தின் பின்புறத்தில் புடைத்தும் வயிற்றில் தொந்தியாகவும் ஏற்படும். ஆனால் பெண்களுக்கு இடுப்பின் பின்புறத்திலும் தொடைகளிலும் அதிகமாக கொழுப்பு படிந்து பருமனாகிறது.

அதிக எடையுள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

  • எடை, உயரம், BMI
  • இரத்த அழுத்தம் அளவு
  • வயிற்றின் சுற்றளவு மார்பளவை விட அதிகமாக இருந்தால் அதிக உடல் எடை உள்ளவர்.
  • சிறுநீரில் அல்புமின் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதித்தல்
  • இரத்தத்தில் – கொழுப்புகளின் அளவு சர்க்கரையின் அளவு
  • தைராய்டு ஹார்மோன் அளவு
  • கல்லீரலின் செயல்பாட்டின் அளவு
  • யூரியா, கிரியேட்டினின்
  • இ.சி.ஜி பரிசோதனை
  • மற்ற நோய்களுக்கேற்ப பிற பரிசோதனைகள்.

அதிக எடையைக் குறைக்க சிறந்த வழி எது?

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அவசியமாக உணவு முறைகளை மாற்றியே ஆக வேண்டும்.

  • மொத்தமாக உணவின் அளவைக் குறைத்தல்.
  • கொழுப்பான உணவுகளை (எண்ணெயில் வறுத்தவை, மாமிச வகை, முட்டை,      நெய், வெண்ணெய்) முற்றிலும் தவிர்த்தல்.
  • அதிக அளவில் காய்கறி, கீரைகளைச் சேர்த்தல்.
  • பச்சையான உணவு வகைகளை அதிகமாக சேர்த்தல்.
  • பாலை குறைந்த அளவே சேர்த்தல், (கொழுப்பு    நீக்கிய பாலே நல்லது).
  • பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்த்தல்.

அடுத்ததாக உடற்பயிற்சி:

ஒருவர் தினந்தோறும் மூன்று மைல்கள் நடந்து செல்கின்ற உடற்பயிற்சியைச் செய்தால் ஒரே ஆண்டில் 10 கிலோ எடையைக் குறைக்க முடியும். மேலும் சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ் விளையாடுதல், நீந்துதல் போன்றவைகளும் நல்ல பயிற்சிகள்.

மூன்றாவதாக உடல் எடையைக் குறைக்கின்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

நான்காவதாக அறுவை சிகிச்சை முறைகள். இரைப்பையின் ஒரு பகுதியை எடுத்துவிட்டால் சாப்பிடுகின்ற உணவின் அளவு குறைந்து உடல் எடையும் குறையும்.

சிலருக்கு குடலில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தால் நல்ல பலன் கிட்டும்.

விகாரமான தோற்றமுள்ளவர் களுக்கும் தொந்தியை குறைக்கவும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உதவும்.

அதிக எடையைக் குறைப்பதால் நன்மைகள்

அதிக எடையுள்ளவர்கள் அளவிற்கு அதிகமான எடையைக் குறைப்பதின் மூலம் 25 சதத்தினர் இறப்பை உண்டாக்குகின்ற பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.      மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எடையைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பு திரும்ப ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

  • இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவு குறையும்.
  • நாற்பது வயதிற்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகிறது. அதிக எடையினால் ஏற்படுகிற தீய விளைவுகள் குறைகின்றன.

அதிக எடையைக் குறைக்க உணவு முறை

ஒவ்வொருவரும் உணவு சாப்பிடும் அளவை ஒரு டைரியில் ஒவ்வொரு நாளும் எழுதி அதன் மொத்த அளவை அறிய வேண்டும். உடல் பருத்தவர்கள் தங்களுடைய பழக்க வழக்கங்களில் மாற்றத்தைத் திட்டமிட வேண்டும். அதில் குறிப்பாக உணவு உண்ணுவதில் சரியான அளவைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அடிக்கடி சாப்பிட வேண்டிய வாய்ப்புகளை உண்டாக்குகின்ற நண்பர்களை சந்திப்பதை மாற்ற வேண்டும். பொதுவாக சாப்பிட்டுக் கொண்டே பேசுதல், தொலைக்காட்சிப் பார்த்தல், விளையாட்டுக்களை பார்வையிடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்தி, உணவுகளை நான்கு மணி நேர இடைவெளிக்குப் பிறகே சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று வேளைகளிலும் சரியான அளவில் மாவுவகை, கொழுப்பு வகை, உப்பு மற்றும் நார் சத்து உணவுகளை சாப்பிடுவதற்கு திட்டமிட வேண்டும்.

எலுமிச்சை பழ ஜுஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என பலர் நினைப்பதுண்டு. எலுமிச்சைபழ ரசத்தில் அதிகமாக உள்ள சி வைட்டமின்கள் உடலிலுள்ள செல்களின் சேதத்தைச் சரிசெய்கிற பணிக்குப் பயன்படும். ஆனால் கொழுப்புப்பகுதியை குறைக்கிற எந்த பயனும் அதில் இல்லை.

அதிக தண்ணீரைக் குடித்தால் உடம்பிலுள்ள கொழுப்பைக் கரைத்துவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். கொழுப்புப் பகுதி நம்முடைய செல்களில் மைக்ரோஸ்கோப்பினால் மட்டும் அறியக்கூடிய விதத்தில்தான் சேர்ந்திருக்கிறது. அதை தண்ணீரால் கரைக்க முடியாது.

அதிகாலையில் தேனைக் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என பலர் நினைப்பதுண்டு. இன்னும் சிலர் தேனை பாலில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. எந்த நோயும் வராது என நினைப்ப துண்டு. ஆனால் தேனில் இருப்பதும் கார்போஹைட்ரேட் என்ற சத்துப்பொருள்தான்.  உடல் பருக்கும்.

அரிசி சாப்பாட்டிற்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிட்டால் உடல் எடைக் குறைவதாக பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் எந்த உணவானாலும் அதிக அளவு சாப்பிட்டு, அதனால் அதிக கலோரிகள் உடலில் சேர்வதால், மேலும் உடற்பயிற்சிகளைத் தேவையான அளவு செய்யாதபோது சப்பாத்தியை சாப்பிட்டாலும் உடல் மேலும் பருத்துவிடும்.

பட்டினி முறை பலன் கொடுக்குமா?

தினமும் இருவேளை அல்லது ஒரு வேளை உணவை சாப்பிடாமல் பட்டினி இருந்தால் உடல் இளைக்கும் என்ற எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் மூன்று வேளையும் அவரவர் தேவைக்கேற்ற சரிவிகித உணவை சாப்பிட்டால் தான், அதிலுள்ள புரோட்டீன்கள் மெடபாலிஸம் மூலமாக கொழுப்பைக் கரைக்கின்ற வேலையைச் செய்ய முடியும்.

அதை விடுத்து பட்டினி இருந்து பிறகு சாப்பிடும்போது தேவையான புரோட்டீன் பற்றாக்குறை ஏற்பட்டு உடலில் கொழுப்பைக் கரைக்கின்ற வேலை மெதுவாகவே நடைபெறும். அதனால் பட்டினி முறை உடல் எடையைக் குறைப்பதற்கு சரியான வழியல்ல.

சூப் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் எந்த சூப்பிலும் எலும்பின் உட்பகுதியோ மாமிசத்தின் கொழுப்பு பகுதியோ, வெண்ணெய், கிரீம் போன்றவை கலந்து இருந்தால் அதனாலும் உடல் பருத்து விடும். தாவர உணவுகளை வேக வைத்து தயாரிக்கும் வெஜிடபிள் சூப் மட்டுமே உடலை பருக்கச் செய்யாது.

பழங்களின் ஜுஸ் சாப்பிட்டால் உடல் பருக்காது என நினைப்போரும் உண்டு. பொதுவாக பழ வகை உணவுகளில் அதிக அளவு சி வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் இருப்பதால் உடலிலுள்ள செல்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்கிறது எனலாம்.

ஆனால் பழச்சாற்றுடன் சர்க்கரையும் சேர்த்து ஜுஸ் செய்யும்போது அதன் மூலம் அதிக அளவு கார்போஹைட்ரேட் உடலுக்குள் சென்று மேலும் உடலை பருக்க வைக்கும்.

ஆகையால் பழ ஜுஸ் சாப்பிடுவதை விட பழத்தைச் சாப்பிடுவதே நல்லது. அதன் மூலம் குடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

சிலர் உலர்ந்த பழவகைகளான திராட்சை, பேரிச்சை, அத்தி போன்ற வகைகளை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றைச் சாப்பிட்டால், உடலுக்கு அதிக படியான கார்போஹைட்ரேட் சேர்ந்து மேலும் எடை அதிகமாகிவிடும்.

நாள்தோறும், பீர் போன்ற மது பானங்களை அருந்தினால் உடல்பருமன் குறையும் என பலர் சொல்வ துண்டு. மது வகைகளில் உள்ள ஆல்கஹாலும் உடலுக்கு அதிகப் படியான கார்போ ஹைட்ரேட்டை அளித்து பருக்கச் செய்யும்.

நான் எதுவுமே சாப்பிடுவதில்லை. ஆனால் உடல் குறைவதில்லை என்ற புலம்பலை பலரிடம் பார்க்கலாம். ஆனால் ஒருவேளை பட்டினி இருந்துவிட்டு அடுத்த வேளை அதிகமாக சாப்பிடுவது இவர்களுடைய வழக்கமாக உள்ளது.

ஒவ்வொரு உணவு ஆலோசகர் சொன்னதையும் செய்து பார்த்தேன். ஆனால் உடல் எடை குறையவில்லை என சிலர் வருந்துவ துண்டு.பல வகையான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் உடல் நலனே கெட்டு விடும்.

பலர் தாம் விரும்பும் உணவுகளையெல்லாம் சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு மாத்திரை விழுங்கி விட்டால் உடல் எடை குறையு மென தவறாக நம்புகிறார்கள். சில உணவு ஆலோசகர்கள் அவரவர் உடல் நிலையை உணராமல் அதிகமான புரோட்டீனைச் சாப்பிடுங்கள். குறைந்த கார்போ ஹைட்ரேட்டைச் சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறி விடுவதுண்டு. இதுவும் தவறு.

அரிசி சாதம், இனிப்பு பண்டங்கள் போன்றவைகளை அதிகமாக சாப்பிட்டால் அவையாவும் கொழுப்பாக மாறி உடல் எடை கூடும். மேலும் அவ்வகை உணவுகளில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் மிகக் குறைவாகவே உள்ளன.

திரவ ஆகாரங்களை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

உடல் எடை குறையும். ஆனால் உடல் அசதி, தோல் உலர்தல், குளிர் நடுக்கம், முடி உதிருதல், குமட்டல், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்ற சிக்கல்கள் உண்டாகும்.

பருத்த உடலுள்ளவர்களுக்கு நடக்கும் போது, உடலில் ஆங்காங்கே (கழுத்து, வயிறு, இடுப்பு, தொடை) புடைத்திருக்கும் பகுதிகளைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்யும்போது மனதிற்குள் கூனிவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு படிப்படியாக உடல் எடையைக் குறைப்பதில் பொறுமை இராது.

இவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை என்னவென்றால், உடல் எடை எத்தனை வருடங்களில் அதிகமானதோ, அத்தனை வாரங்களாவது பொறுமையாக, படிப்படியாக குறைக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு பத்தாண்டு களில் உடல் எடை 30 கிலோ அதிகமாகியது என்றால் அவர் சுமார் பத்து வாரங்களாவது படிப்படியாக எடையைக் குறைப்பது சரியாக இருக்கும்.

அதிக உடல் எடைக்கு பரிசோதனை

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் இருநூற்று இருபது மில்லி கிராமிற்கு அதிகமானாலும், டிரை கிளிரைடு எனப்படுகிற கொழுப்புப் பொருள் நூற்று அறுபது மில்லி கிராமிற்கு அதிக மானாலும் எல்.டி.எல் கொலஸ்டிரால் நூற்று இருபதிற்கு மேல் அதிகமானாலும் அவை அதிகமான கொழுப்பின்  அளவுகளாகும்.

  • மற்றொன்றான ஹெச்.டி.எல் கொலஸ்டிரால் என்ற கொழுப்புப் பொருள் சற்று வித்தியாசமானது. அவை உடலில் அதிகமாக இருந்தால் இதயத்திற்கு நன்மை உண்டாகும்.
  • ஹெச்.டி.எல் ஐம்பது மில்லி கிராமிற்கு மேலிருந்தால் இதயத்தில் உண்டாகிற பாதிப்பு குறைவாக இருக்கும். அவை குறைவாக இருந்தால் (30 மிகி-க்கு கீழ்) அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அதை நல்ல கொலஸ்டிரால் என்பர்.

அதிகமாக சாப்பிட்டால் என்னாகிறது?

  • நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் ஜீரண மண்டலம் செயல்படத் துவங்குகிறது. அதனால் ஜீரண உறுப்புகளுக்கு அதிக அளவிலான இரத்தம் செல்கிறது. அதனால்தான் உணவு ஜீரணிக்கப் படுகிறது. ஜீரண உறுப்புகளுக்கு இரத்தம் அதிகமாக சென்றுவிடுவதால் மூளை, இதயம் போன்றவைகளுக்கு இரத்தம் குறைவான அளவே செல்கிறது.
  • உணவு உறிஞ்சப்பட்டதும் குளுக்கோஸ் அல்லது சர்க்கரைப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாவ தால் ஒரு மந்த நிலை ஏற்படும்.
  • சாப்பிட்டவுடன் இதயத்திற்கு செல்கின்ற இரத்தத்தின் அளவு குறைவதாலும் அதிகப்படியாக சாப்பிட்ட உணவின் ஜீரணத்திற்கு இதயம் அதிகமாக உழைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவ தாலும் பலருக்கு வயிறு புடைக்க சாப்பிட்டபின் மாரடைப்பு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக எண்ணெயில் வறுத்த உணவுகள், இனிப்புகள் மற்றும் கிரீம் கலந்த உணவுகளை ஜீரணிப்பதற்கு அதிகமான இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது.

அதனால்தான் பலர் சாப்பிட்ட பின் தூங்குகி றார்கள். அந்த மந்த நிலையில் வண்டிகளை ஓட்டுவதில் வாகன விபத்துகளும் அதிகமாக ஏற்படுகின்றன.

குறுகிய நாட்களில் உடல் எடையைக் குறைக்க முடியுமா?

சிலர் பட்டினி மூலமும் உடல் எடையை குறைத்துவிடுவதுண்டு. இப்படி செய்வதால் சில தீய விளைவுகள் ஏற்படுகின்றன.

  • முதலாவது, தொடர்ந்து பட்டினியோ அல்லது விரதமோ இருப்பவர்களுக்கு சில பற்றாக்குறை    நோய்கள் உண்டாகும்.
  • இரண்டாவது, பட்டினியின் மூலம் எடை குறைந்தவர்கள் மீண்டும் இயல்பாக சாப்பிட்டவுடன் படுத்து விடுவார்கள்.
  • மூன்றாவது, பலருக்கு உடல் பருமனாகக் காரணம் உணவினால் மட்டுமே என்பதல்ல. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அதனால் உணவைக் குறைப்பது மட்டுமே எடையைக் குறைக்கும் வழியாகி விடாது. இதை உணராமல் சிலர் பட்டினி இருந்து கண்களில் குழி விழ, முகம் வாட, காது அடைக்க சோர்வடைவதுண்டு.
  • நான்காவது, சரியான ஆலோசனை இல்லாமல் பட்டினி இருப்பதால், வெளியேறுகின்ற நைட்ரஜன், உட்கொள்ளும் நைட்ரஜனைவிட அதிகமாகி விடுவதால் உடலில் எடை குறையும். ஆனால் கொழுப்பின் அளவு குறைவதில்லை. இதனால் உறுப்புகளின் சேதம் அதிகமாகும்.

மாமிச வகை உணவை மட்டும் சாப்பிட்டால்?

புரோட்டீனை மட்டும் (உதாரணத்திற்கு மாமிச உணவு) அதிகமாக சாப்பிட்டு, கார்போஹைட்ரேட்டை குறைவாக உண்டால், அப்போதும் பட்டினி கிடப்பது போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும். சிலருக்கு உடலில் கீடோஸிஸ் ஏற்படும். சிலருக்கு மூட்டுவலி ஏற்படும்.

அதிக அளவு கொழுப்பு பொருளைச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதனால் உடலில் நீர் மற்றும் தாதுப் பொருட்களின் இழப்பு ஏற்பட்டு மயக்கநிலையாகி உயிருக்கு ஆபத்து நேரும்.

உடல் பருமனாகி இருப்பவர்கள் கொழுப்பு பொருளே சாப்பிடாமல் விட்டு விடலாமா?

கொழுப்பின் அவசியம்:

  • ஒவ்வொருவருக்கும் உணவில் குறைந்த பட்ச அளவு கொழுப்பு சத்து அவசியம். நமது உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவைகளுக்கு உடலிலுள்ள கொழுப்பே பஞ்சு மெத்தை போன்று உதவுகிறது. நமக்குத் தேவையான வைட்டமின்களாக ஏடிகே மற்றும் இ போன்றவைகளை கொழுப்பு சத்துதான் உடலெங்கும் எடுத்துச் செல்கின்றன. வெயிலிலும் குளிரிலும் உடலிலுள்ள நரம்பு களையும் தசைகளையும், தோலுக்கடியிலுள்ள கொழுப்பே காப்பாற்றுகிறது. கை கால்களிலுள்ள எலும்பு மூட்டுகளின் அசைவிற்கு கொழுப்புதான் பயன்படுகிறது. உணவை உண்ணும்போது கொழுப்பு சத்து சிறிது இருந்தால்தான் வயிறு நிறைந்த திருப்தி கிட்டும். இல்லையேல் நிறைய சாப்பிட்டாலும் வயிறு காலியானது போன்றே இருக்கும். ஆகையால் நாளொன்றுக்கு இரண்டு ஸ்பூன் மட்டும் நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம்.

மற்றவர்களின் ஏற்புடைமை

  • உயர்ந்த செயல், மனஉறுதி, கட்டுப்பாடு, அமைதியான பேச்சு, கண்ணியமான நடத்தை போன்றவை அடங்கிய தோற்ற அமைப்பே மற்றவர்களால் ஏற்கப்படும்.
  • எல்லா மனிதர்களிடமும் நம்முடைய எதிர்பார்ப்புகள், உத்திகள், பெருமைகள்  போன்ற எல்லாவற்றையும் எல்லோரிடமும் பேசக்கூடாது. வல்லவர்கள் எதை பேசு வதற்கு முன்பும் பல முறை யோசிப்பார்கள். பேசிய சொல்லை திரும்பப் பெறமுடியாது.
  • சிலர் செய்தித்தாள்களை தமக்கு வந்த சொந்த கடிதம்போல முழுவதுமாக படிப்பார்கள். செய்தித்தாளில் உள்ள அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும் என்பதில்லை. எது அவசியம் எது அவசியமில்லை என்பதை அறிந்து கொண்டு படிக்கலாம். சில செய்திகளை வெட்டி எடுத்து கோப்புகளில் வைத்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் படிக்கலாம்.
  • மனம் ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன். மன உறுதியுடன் செயல் பட்டு மனதை கட்டுப்பாட்டில் வைப்பதுதான் வாழ்வை உயர்வாக்கும்.
  • மனதிற்கு விசித்திரமான செய்கை உண்டு. கவலைப்பட ஆரம்பித்தால் எங்கெங்கோ இருக்கின்ற கவலைகளை தேடிப் பிடிக்கும். பயம் கொண்டால் உலகில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து நடுங்கும். இதைக் கூடவே கூடாது என்று நினைத்தால் அதையே திரும்பத்திரும்ப ஞாபகப் படுத்தும்.
  • மறக்க நினைப்பதை அதிகமாக ஞாபகத்தில் வைக்கும். ஞாபகம் வைக்க வேண்டியதை சரியான நேரத்தில் நினைவிற்கு வராமல் போகும். மனதிற்கு சரியான பயிற்சிகளை, தொடர்ந்து கொடுத்தால் நமக்கு நல்ல சேவை யாளனாகிவிடும்.
  •  மனதிற்கும் உடலுக்கும் நேரடி தொடர்பு உண்டு. மன அழுத்தம் இல்லாவிட்டால் உடல் தெளிவுடன் அமைதியாக செயல்படும். யோகா பயிற்சிகளின் முக்கிய அம்சம் மனதை ஒருமுகப் படுத்தி சிந்தனைக்கேற்ற செயலை செய்ய வைப்பதுதான்.

மாமனிதர்

மாமனிதரின் மூன்று பண்புகளை அறிஞர் கூறுகிறார்.

கனிவு: கனிவு இருந்தால் தைரியமாக இருக்கலாம்.

சிக்கனம்: சிக்கனமாக இருந்தால் தாராளமாக இருக்கலாம்.

அடக்கம்: அகந்தை இல்லாவிட்டால் தலைவனாகலாம்.

  • உயர் சிந்தனை இருந்தால் உயர்ந்த செயல்கள் உண்டாகும்.

உயர்ந்த செயல்கள் இருந்தால் உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும்.

உயர்ந்த பழக்கங்கள் இருந்தால் உயர்ந்த பண்பு உண்டாகும்.

உயர்ந்த பண்பு இருந்தால் உயர்ந்த வாழ்க்கை உண்டாகும்.

  • இயற்கை நியதி: ஆக்கபூர்வமான எண்ணங்கள் எதிர் மறைகளை வெல்லும். நம்பிக்கை ஆக்கபூர்வமான எண்ணம். பயம் எதிர்மறையானது. நம்பிக்கை உறுதியாக இருந்தால் பயத்தை வெல்ல முடியும்.

மன உறுதி

  • மன உறுதியை வளர்த்தல்: செயல்பாடு, பிறருடன் பழகுதல், குறிக்கோள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் போன்றவற்றை நன்கு ஆய்ந்து நெறிப்படுத்தி அமைத்துக் கொண்டு அதை உறுதியுடன் செயல் படுத்துவதால்தான் உறுதியான மனிதர் உருவாகிறார்.
  • சபலங்கள் மனிதர்களின் பலவீனம். சுவையான உணவுகளை அளவிற்கதிகமாக சாப்பிட்டு அவதிப்படுதல். மது போன்ற போதையில் மூழ்குதல், மூன்றாம் மனிதரைப் பற்றி தவறாக பேசுதல், காமத்தில் தடுமாறுதல் எல்லாமே மனதின் தடுமாற்றத்தால்தான்.

எதெல்லாம் நம்மை ஆட்டுவிக்குதோ அதையெல்லாம் அடக்கி வைக்க பயிற்சி கொடுக்க வேண்டும். விரதம் இருப்பது ஒரு வகை நெறிப்படுத்துதல் ஆகும்.

  • மற்றவர்களுடன் பழகும்போது குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடித்தமானவர் ஆகிறோம். அத்துடன் நாம் பிறரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
  • “என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால், தொடக்கத்தில் அதற்குரிய ஆற்றல் இல்லா விட்டாலும் நான் நிச்சயமாக தேவையான ஆற்றலை முயற்சித்து பெற்று விடுவேன்” என்றார் மகாத்மா காந்தி.
  • முடியும் என்ற நம்பிக்கைதான் மனித குலத்தை உயர்த்துகிறது. புதுமைகளைப் படைக்கிறது.
  • மகத்தான காரியங்கள் நடை பெறுவது பலத்தினால் அல்ல. விடாமுயற்சியினால் தான் என்றார் ஒரு அறிஞர்.
  • ஒரு செயலை தொடர்ந்து 21 நாட்கள் செய்து கொண்டு இருந்தால் அதுவே இயல்பான பழக்கமாகி விடும்.
  • ஒரு நல்லபழக்கத்தை செயல்படுத்துவ தானாலும் அல்லது தீய பழக்கத்தை விடுவதானாலும் தொடர்ந்து 21 நாட்கள் முயற்சியை கைவிட்டுவிடாமல் செய்தால் போதும். அதை சொந்த பழக்கமாக்கி விடலாம்.
  • நாள் முழுவதும் (வாழ்நாள் முழுவதும்) நகைச்சுவை உணர்வோடு வாழப் பழகி விட்டால் அதுவே உன்னத வாழ்க்கை. மகிழ்ச்சி என்பது பிறப்புரிமை. உலகத்தில் அனைத்தும் மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டது.
  • “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதி ருந்தால் நான் எப்போதே பைத்தியம் ஆகி யிருப்பேன்” என்றார் காந்தி. நகைச்சுவை மனநிலை இறுக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி ஆரோக்கிய சூழலை உண்டாக்கிவிடும்.
  • “உன் நண்பனைக் காட்டு: உன்னை யாரென்று சொல்லி விடுகிறேன்” என்பது பொன் மொழி. நற்சிந்தனை, உயர்ந்த குறிக்கோள் கொண்ட மனிதர்களைச் சேர்ந்தால் வெற்றிகள் வந்து சேரும். தோல்வியாளர்களையும் சோம்பேறி களையும் சேர்ந்தால் அதிலும் ஒரு பங்கு ஒட்டிக் கொள்ளும்.

மன அமைதி

  • மௌனம் பேச்சைவிட வலிமையான ஆயுதம். மறுதரப்பினர் சீண்டும்போது, மனக்குழப்பத்தின் போது, கோபத்தின்போது, சோர்வின்போது, மௌனமாக இருந்துவிட்டால் வலிமையான மனிதராகிவிடலாம்.
  • அவ்வப்போது மனதிற்குள் உதிக்கும் யோசனைகளை, வழிமுறைகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளவும். வாய்ப்பு வரும்போது அதைச் செயல்படுத்தவும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் யாருமே செய்யாத அளவிற்கு சாதனைகளைப் படைக்க முடியும்.
  • தனிமை நேரம் : வாரத்திற்கு ஒரு முறையாவது சில மணி நேரங்கள் தனிமைக்காக ஒதுக்கவும். ஞாயிற்றுக்கிழமை அல்லது ஏதாவது ஒரு நாளில் தனிமையில் நூல்களைப் படிப்பது, மெல்லிசை கேட்பது, இளைப்பாறுதல், சும்மாயிருத்தல் போன்றவற்றிற்காக சில மணி நேரங்கள் ஒதுக்கலாம். அதன் மூலம் உற்சாகம், சக்தி, தெளிவு போன்றவை அடுத்த வாரம் முழுவதும் இருக்கும்.
  • பிற மனிதர்களுடன் எவ்வளவு அதிகமாக சமூக உறவை வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றிகள் அமையும் மற்றவர்களோடு எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கிறோம் என்பதுதான் அதன் முக்கிய அம்சம்.
  • தியானம்: தினமும் அரைமணி நேரம் தனிமையில் அமர்ந்து எந்த செயல் களாலும் கவனம் சிதறாமல் தியானம் செய்வது மூளையை புதுப்பிக்கும். மனமானது குரங்கைப்போல எதையாவது தாவிப் பிடிக்கும் இயல்புடையது. எதையாவது வேண்டாம் என்று தடுத்தால் அதையே திரும்ப நினைக்கின்ற இயல்புடையது. தியானம் மூலம் மனதை அடக்கலாம்.

பிறரை ஒத்துழைக்க வைப்பது எப்படி?

எவ்வளவுதான் நல்லதையே சொன்னாலும் அதை உடனிருப்பவர்கள் கேட்காதபோது மனம் கொதிக்குது. வரும் கோபத்தை தாங்க முடிவில்லையே!

நீர் இருக்கும் இடத்திற்கு உங்களால் குதிரையை இழுத்துச் செல்லமுடியும். ஆனால் தண்ணீரைக் குடிக்க வைக்க உங்களால் முடியாது. அதற்காக கோபப்படுவதில் அர்த்தமே இல்லை.

மற்றவர்களை நிர்வகிக்க விரும்புவர் யாராக இருந்தாலும் முதலில் தன்னை நன்றாக நிர்வாகிப்பவராக இருந்தால் போதும். சுய நிர்வாகத்தை சிறப்பாகச் செய்பவரிடம் மற்றவர்கள் தாமாக ஒத்துழைப்பார்கள். உயர வேண்டுமென போராடுகிறேன். எந்த முன்னேற்றமும் இல்லையே! உயர்வடைய போராட வேண்டியதில்லை. திறமையாக செயல்பட பிறரின் ஒத்துழைப்பு அவசியம். மற்றவர்கள் ஏற்கும் விதத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதுவே நமது செல்வாக்கை உயர்த்திவிடும். அந்த செல்வாக்குதான் ஒருவரை உயர்த்தும் முக்கிய அம்சம்.

செயற்கைப் பல்

  • மாற்றுப் பல் கட்டும் மருத்துவம் இன்றைக்கு மிகவும் எளிது.
  • பல் உடைந்தாலோ, பல் விழுந்த இடத்தில் புதிய பல் தேவை என்றாலோ, அவற்றுக்கு புதிய பல் பொருத்தலாம். பல்லின் நிறம் அல்லது வடிவம் பிடிக்காதவர்களும் இப்போது செயற்கைப் பல் பொருத்திக் கொள்ளலாம்.
  • கேட் கேம் (Computer Aided Design and Computer Aided Machining CAD CAM) தொழில்நுட்பம் வந்து விட்டது. கம்ப்யூட்டர் உதவியுடன் செயற்கை பல் தயாரிப்பதுதான் கேட் கேம்.
  • பல்லின் நிறம், எலெக்ட்ரானிக் ஐ என்ற கருவியின் மூலம் மிகத் துல்லியமாகப் படம் எடுக்கப்படும். இந்தக் தகவல்கள் கம்யூட்டருக்கு அனுப்பப்படும். கம்யூட்டரில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பல் தோற்றம், அமைப்பு உள்ளிட்டவற்றைப் பார்த்து, திருத்தங்கள் செய்வர். பின்னர் பல்லின் நிறம், தடிமன், எந்த வகையான மெட்டல் என்பதைத் தேர்வு செய்து இணையம் மூலம் பல் தயார் செய்யும் மையத்துக்கு அனுப்பி அவர்கள் பல்லைத் தயார் செய்து ஓரிரு மணி நேரத்தில் அனுப்புவர். அதன் பிறகு அதை எளிதில் பொருத்திவிடலாம்.
  • தற்போது சிர்க்கோனியம் என்றமெட்டல் அறிமுகம். நிறம், தரத்தில் இந்த மெட்டல் அசல் பல்லைப்போலவே இருக்கும். கேட் கேம்  தொழில்நுட்பத்தில் மனிதத் தவறுகளுக்கு வாய்ப்பே இல்லை.
  • பொதுவாக பல் உடைந்தால், விழுந்தால் அவர் களுக்கு நான்கு அல்லது ஐந்து வகைகளில் இந்த செயற்கைப் பல் கட்டப்படுகிறது. ஒரு பல் விழுந்துவிட்டது என்றால், அதற்கு வலது, இடது பக்கத்தில் உள்ள நல்ல பல்லை கொஞ்சம் டிரிம் செய்து, மேல் சொன்ன முறைகளில் பல் செய்து பொருத்துவர். இது பிரிட்ஜ் மாடல். இதில் பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆதரவில் இந்த செயற்கை பல் இருப்பதால், அந்தப் பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொருத்த முடியாது.
  • பல பற்கள் மாற்றவேண்டும் என்றநிலையில் உள்ளவர்களுக்கும் இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்போடு பல் உள்ளதோ அதைப் போன்று செயற்கையாக ஸ்குரு (இம்பிளான்ட்) போட்டு செய்யலாம்.
  • முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால், அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.
  • வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிர் அணுக்கள் குறையும்.
  • திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகும்.
  • உயிரணுக்கள் பெருகும் தன்மை குறையும்.
  • கழிவுப் பொருட்கள், உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கிவிடுவதால், ப்ரிரேடிகல்ஸ் என்ற இராசனப் பொருள் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல், உடல் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஹாôமோன் குறைதல் போன்றவை ஏற்படும்.
  • மூளையில் உள்ள பீனியல் சுரப்பி மெலடோனின் எனும் திரவத்தைச் சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம்.

கோடையும் சிறுநீரகமும்

உடலில் ஏற்படும் பலவிதமான கழிவுகளில் முக்கியமானது சிறுநீர். அதை உடலில் இருந்து பிரித்தெடுத்து, அதிகமான உப்பை வெளியேறச் செய்வது சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு. நமது உடலில் இரு சிறுநீரகங்கள் முதுகெலும்பின்  இரு பக்கங்களுக்கு ஒன்றாக பின்புறத்தில் அமைந்து உள்ளன. அதிலும் வலது சிறுநீரகம், கல்லீரல் அமைப்பினால் இடது சிறுநீரகத்தை விட சிறிது கீழிறங்கியுள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் கொழுப்பினால் சூழப்பட்டு மெத்தை போன்று அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் 10 செ.மீ நீளமும் 5.5 செ.மீ அகலமும், 3 செ.மீ தடிமனும் கொண்டது. 150கி எடை கொண்ட ஒவ்வொரு சிறுநீரகமும் அவரை விதை வடிவில் உள்ளது. சிறுநீரகங்கள் மெல்லிய திரையால் மூடப் பட்டுள்ளது. குறு வெட்டாக நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால் சிறுநீரகம் இரு பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளது. அதாவது கார்டெக்ஸ் அமைப்பானது வெளிப் பிரிவில் அமைந்து, சிறுநீரகத்தில் சல்லடைப் பகுதியான மெடுல்லாவை காப்பாற்றுகிறது. மெடுல்லாவில் 10-20 சல்லடைப் பகுதிகள் உள்ளன. அவை காலிக்ஸ் என்னும் நுண்ணிய குழாய்கள் மூலமாக சிறுநீரகத்தின் வடிகாலில் சேர்ந்து அங்கிருந்து சிறுநீர் குழாய் வழியாக சிறுநீர்ப் பையை அடைந்து சிறுநீராக வெளியேறுகிறது.

நுண்ணிய சிறுநீர் குழாய்கள்:

சிறுநீரகத்தின் முக்கிய வேலை மற்றும் அமைப்பு நெப்ரான் எனப்படும் நுண்ணிய சிறுநீர் குழாய்கள். இவை பல மில்லியன் கணக்கில் ஒவ்வொரு சிறுநீரகத்திலும் உள்ளது. இக்குழாய்கள் நம் உடலின் இரத்தத்தில் நீர் அளவையும், தாதுக்களையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலமாக இரத்த அழுத்தத்தையும் முறைப்படுத்துகிறது. தேவைப்பட்டால் இக்குழாய்களே உடலுக்குத் தேவையான தாதுக்களை உற்பத்தி செய்தும், நீர்ச்சக்தியை உறிஞ்சியும் சீர் செய்து கொள்கிறது. இதனால் நம் உடலின் வெப்பமும் சீராக்கப்படுகிறது.

நுண்ணிய சிறுநீர்க் குழாய்கள் வடி குழாய்களில் நீரை வடிக்கிறது. இப்படி வெளியேறும் சிறுநீரில் மிக முக்கியமானது நைட்ரஜன் உப்புக்கள். அதாவது யூரியா, யூரிக் அமிலம் மற்றும் யூரோபிலினோஜன். இந்த உப்புக்கள் நம் உடலில் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் பழுதடைந்து மேலும் இவற்றின் அளவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கோடை காலத்தில் வியர்வையினால் அதிக அளவு நீரும் உப்புச்சத்துக்களும் வெளியேறுகின்றன. இதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் அதிமாகிறது. இப்படி அளவு குறைவதால் நீண்டநேரம் சிறுநீர் சிறுநீர்ப் பையில் தங்குவதற்கு காரணமாகிறது. இது நுண்ணுயிர் கிருமிகள் வளர்வதற்கு முக்கிய தளமாகிறது.

நோய் வருவதற்கு பல விதமான கிருமிகள் உள்ளன. ஆனால் உ-இர்ப்ண் என்னும் கிருமி தாக்கும் போது (முக்கியமாக பெண்களையும், குழந்தை களையும் பாதிக்கையில்) முதலில் சிறுநீர்க் குழாய் பாதிக்கும்போது சிறுநீர் கழிக்கும் முன்னர் வலி ஏற்படும். சிறுநீர் பிரியும் போதும், பிரிந்த பின்னும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும் அல்லது சொட்டு சொட்டாக கழிக்க நேரிடும். கூடவே லேசான காய்ச்சலும் குளிரும் ஏற்படும். சிறு குழந்தைகள் என்றால் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவார்கள்.

இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு நிறைய தண்ணீர் , இளநீர், நீர்மோர், தண்ணீர்ச் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை ஒரு நாளில் இருமுறை குளித்தாலும் நம் உடல் உஷ்ண நிலையை சீராக வைக்க உதவும். உடைகளில் முக்கியமாக பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். இவை நம் உடலுக்கு இதமானது மட்டுமின்றி, கோடைக் காலத்தில் நம் உஷ்ணத்தை தணிக்கவும் உதவுகிறது. நோய் வந்தபின் சிறுநீரைப் பரிசோதித்து எந்த வகை கிருமியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குரிய மருந்துகளையும் முறையான சாப்பாட்டு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். தினமும் 2-3 லி. தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

உலகமே உங்களுக்காகப் படைக்கப்பட்டதுதான்!

  • அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ அந்த உணர்வு தான் இருக்கும். அதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.
  • வாழ்க்கை உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக் கிறது. அடையாளங்கள், வண்ணங்கள், நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும், நீங்கள் கேட்கும் ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு சூழலும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.
  • நீங்கள் தொடர்ந்து மிகிழ்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான சூழல்கள், மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.
  • வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலான நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவைதான். ஏனெனில் ஒவ்வொன்றிற்கும் ஓர் அலைவரிசை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.
  • நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளச் சின்னத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேட்கும்போதோ அன்பின் ஆற்றல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்
  • ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன், அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.
  • ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
  • உங்கள் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பில் ஆற்றலை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அன்பின் ஆற்றல் உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் பணத்தை நிர்வகிக்கும் மேலாளராகவும் தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்ப வராகவும், உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளராகவும் இருக்கும்.
  • உங்கள் மனம் ஏகப்பட்ட விவரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விவரங்கள் உங்கள் கவனத்தைச் சிறகடித்து உங்களைக் கீழே இழுத்துத் தள்ளிவிடும். உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?
  • அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே .

வெற்றிக்கான மந்திரம் நம்பிக்கைதான்!

  • உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூலமாக உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து எதைக் கொடுக்கிறீர்களோ அதைத்தான் உங்கள் உடலில் நீங்கள் திரும்பப் பெற்றாக வேண்டும். நீங்கள் உணரும் ஒவ்வோர் உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.
  • நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்குப் பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரணுக்கள்தான். நீங்கள் உணர்வுப் பூர்வமாக எதைச் சிந்தித்தாலும், அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.
  • உங்களுக்கு விருப்பமில்லாதவற்றைக் குறித்து எதிர்மறையான சிந்தனைகளையும், உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும் போது உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது. ஆனால், ஒரு நல்ல இதமான நாள், புதிய வீடு, நண்பர்கள், அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும்போது, உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.
  • அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுணர்வுதான். எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.
  • உங்கள் உடலில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக ‘நன்றி’ என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்குப் பிடிக்காதவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.
  • உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நேரம் அன்பை வெளிப்படுத்துவதுதான்.
  • நீங்கள் றோயுற்றிருந்தால், உங்கள் எண்ணங் களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். மாறாக ஆரோக்கி யத்திற்கு அன்பை வெளிப்படுத்தி அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.
  • சரியான எடை, சரியான உடல் மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்ட ஓர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி அவற்றைப் பெற்றிருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் மிகுந்த நன்றியுடன் இருங்கள்.
  • உங்களுக்கு வயது ஏறிக் கொண்டே போகும்போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்ப்பு விதி அப்படிப்பட்டச் சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.
  • இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப் பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.
  • நீங்கள் கொண்டிருக்கும் அன்பு, மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.

காலை உணவைத் தவிர்க்கலாமா?

  • உடல் இளைக்க வேண்டும், எடை குறைய வேண்டும் என்ற எண்ணத்தில் காலை உணவை நிறுத்துவது தவறு. இரவு உணவுக்குப் பிறகு நெடுநேரம் ஒன்றும் கிடைக்காமல் இருந்த உடலுக்கு காலையிலும் ஒன்றும் தராமல் மதியம் உணவு கொடுத்தால்  என்ன ஆகும்? அதிக உணவு கொழுப்பாக மாற்றிவிடும்.
  • முளை கட்டிய தானியம் நல்லது. இது மெடபாலிசத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
  • உணவில் புரோட்டின் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் புரோட்டின் ரொம்ப கடினமானது. எனவே அதை ஜீரணிக்க அதிகமான சக்தியைச் செலவழிக்கும்.
  • அதே சமயம் மிக அதிக அளவு புரோட்டீன் சத்தானது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு ஆகியவற்றுக்கு ஆகாது.
  • உடலுக்குத் தேவையான நீர் இருக்கும்போது உடல் நன்றாக  வேலை செய்யம்.
  • ஆகையால் தேவையான அளவு நீரை அருந்தவும்.

Advertisements