Articles

எளிய கேள்வி கஷ்டமான பதில்!

யாரை நம்புவது? யாரை ஒதுக்குவது?

இதற்கு பதில் சொல்வது சிரமம்தான்

மனிதர்களை நம்பலாமா?

மனிதர்கள் பெரிய ஞானிகள் இல்லை. அவர்களுடைய சொல், செயல்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

நாம் நினைப்பது போல மற்றவர் இல்லாதபோது நமக்கு அதிர்ச்சி ஏற்படும். சில நேரங்களில் உதவுபவர்கள் சில சமயங்களில் எதிரிகளாவதும் உண்டு.

மனிதர்களை நம்பாமல் விடலாமா?

மனிதர்களை நம்ப முடியாது என்ற மன நிலையில் மற்றவர்களை ஒதுக்கினால் இவ்வுலகத்தில் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்.

பொதுவாக புத்திசாலிகள் யாரையும் நம்பி ஏமாறுவதில்லை.

பிறரை நம்பாமல் இருப்பதும் இல்லை. அவர்கள் தம் கடமைகளை தொடர்ந்து செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முழுபலத்தை உபயோகித்து செயல் பட்டால் தான் உயர்வது மட்டுமில்லாமல் மற்றவர்களையும் உயர்த்தும் ஆற்றல் பெறுவார்கள்.

மற்றவர்களின் ஏற்புடைமை

 • உயர்ந்த செயல், மனஉறுதி, கட்டுப்பாடு, அமைதியான பேச்சு, கண்ணியமான நடத்தை போன்றவை அடங்கிய தோற்ற அமைப்பே மற்றவர்களால் ஏற்கப்படும்.
 • எல்லா மனிதர்களிடமும் நம்முடைய எதிர்பார்ப்புகள், உத்திகள், பெருமைகள்  போன்ற எல்லாவற்றையும் எல்லோரிடமும் பேசக்கூடாது. வல்லவர்கள் எதை பேசுவதற்கு முன்பும் பல முறை யோசிப்பார்கள். பேசிய சொல்லை திரும்பப் பெறமுடியாது.
 • சிலர் செய்தித்தாள்களை தமக்கு வந்த சொந்த கடிதம்போல முழுவதுமாக படிப்பார்கள். செய்தித்தாளில் உள்ள அனைத்து விஷயங்களையும் படிக்க வேண்டும் என்பதில்லை. எது அவசியம் எது அவசியமில்லை என்பதை அறிந்து கொண்டு படிக்கலாம். சில செய்திகளை வெட்டி எடுத்து கோப்புகளில் வைத்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் படிக்கலாம்.
 • மனம் ஒரு நல்ல வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமானன். மன உறுதியுடன் செயல்பட்டு மனதை கட்டுப்பாட்டில் வைப்பதுதான் வாழ்வை உயர்வாக்கும்.
 • மனதிற்கு விசித்திரமான செய்கை உண்டு. கவலைப்பட ஆரம்பித்தால் எங்கெங்கோ இருக்கின்ற கவலைகளை தேடிப் பிடிக்கும். பயம் கொண்டால் உலகில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து நடுங்கும். இதைக் கூடவே கூடாது என்று நினைத்தால் அதையே திரும்பத்திரும்ப ஞாபகப் படுத்தும்.
 • மறக்க நினைப்பதை அதிகமாக ஞாபகத்தில் வைக்கும். ஞாபகம் வைக்க வேண்டியதை சரியான நேரத்தில் நினைவிற்கு வராமல் போகும். மனதிற்கு சரியான பயிற்சிகளை, தொடர்ந்து கொடுத்தால் நமக்கு நல்ல சேவை யாளனாகிவிடும்.
 • மனதிற்கும் உடலுக்கும் நேரடி தொடர்பு உண்டு. மன அழுத்தம் இல்லாவிட்டால் உடல் தெளிவுடன் அமைதியாக செயல்படும். யோகா பயிற்சிகளின் முக்கிய அம்சம் மனதை ஒருமுகப் படுத்தி சிந்தனைக்கேற்ற செயலை செய்ய வைப்பதுதான்.

மாமனிதர்

மாமனிதரின் மூன்று பண்புகளை அறிஞர் கூறுகிறார்.

கனிவு: கனிவு இருந்தால் தைரியமாக இருக்கலாம்.

சிக்கனம்:சிக்கனமாக இருந்தால் தாராளமாக இருக்கலாம்.

அடக்கம்: அகந்தை இல்லாவிட்டால் தலைவனாகலாம்.

உயர் சிந்தனை இருந்தால் உயர்ந்த செயல்கள் உண்டாகும்.

உயர்ந்த செயல்கள் இருந்தால் உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும்.

உயர்ந்த பழக்கங்கள் இருந்தால் உயர்ந்த பண்பு உண்டாகும்.

உயர்ந்த பண்பு இருந்தால் உயர்ந்த வாழ்க்கை உண்டாகும்.

 • இயற்கை நியதி: ஆக்கபூர்வமான எண்ணங்கள் எதிர் மறைகளை வெல்லும். நம்பிக்கை ஆக்கபூர்வமான எண்ணம். பயம் எதிர்மறையானது. நம்பிக்கை உறுதியாக இருந்தால் பயத்தை வெல்ல முடியும்.

விலை மதிப்பற்ற சொத்து!

 • ஒரு பிச்சைக்காரனிடம் இரண்டு லட்சம் தருகிறேன். மகிழ்ச்சி தானே என்றார் ஞானி.  ‘ஆம்’ என்றான் பிச்சைக்காரன்.”ஆனால் ஒரு நிபந்தனை. உன்னுடைய இரண்டு கண்களையும் கொடுத்துவிட்டு இரண்டு லட்சத்தை எடுத்துக் கொள்” என்றார் ஞானி. இரண்டு லட்சத்தைவிட கண்களே உயர்ந்தவை என்பதை புரிந்து கொண்டான் பிச்சைக்காரன்.
 • அப்படி பார்த்தால் நமக்கு அமைந்துள்ள உடலின் ஒவ்வொரு உறுப்பும் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் விலைமதிப் பற்றவை. வாழ்க்கையில் நமக்கு கிடைத்துள்ள 25 அம்சங்களை பட்டியலிட்டால் போதும். நம் உயர்வை உணரமுடியும்.
 • உயர்ந்த குறிக்கோள்கள் குறைந்த பட்சம் ஐந்தை உருவாக்கி கொள்ளுதல் வாழ்க்கையை இனிமையாக்கிவிடும். தினமும் உடற்பயிற்சி, சில கால இடைவெளிகளில் வெளியிடங்களுக்குப் பயணம், மற்றவர்களுக்குப் பயன்படும் சேவை, தலைமைப் பண்புகளை வளர்த்து பிறருக்கு வழி காட்டியாக வாழ்தல் போன்றவை.
 • புத்தர் பாணி: புத்தரை ஒரு கிராமத்தினர் அவதூறு பேசி அவமானமாக நடத்தினர். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த புத்தரிடம், இதெல்லாம் உங்களைப் புண்படுத்தவில்லையா? என்றனர். “இதற்கு முன்னர் நான் பக்கத்து கிராமத்திற்குச் சென்றபோது அங்குள்ள மக்கள் என் மீதுள்ள பற்றினால் இனிப்பு பொட்டலங்களைக் கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி மூன்று வருடங்கள் ஆகி விட்டதால் அவற்றை ஏற்கவில்லை. அப்படியானால்  அப்பொட்டலங்கள் யாருக்கு சொந்தம்” என்று கேட்டார் புத்தர். யார்? யார்? கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே சொந்தம் என்றனர் மக்கள். ‘இப்போது நீங்கள் அவமதித்ததையும் நான் ஏற்கவில்லை. அதனால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார். “நாங்கள் செய்த அவமானம் எங்களுக்கேதான் சொந்தம்” என்றனர் மக்கள். நம்முடைய அனுமதியின்றி எவரும் நம்மை அவமானப் படுத்தவோ காயப்படுத்தவோ முடியாது.
 • ஒவ்வொரு மனிதனுக்கும் இனிய சொல் அவனுடைய பெயர்தான். மனிதர்களின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு அழைப்பது, மரியாதையுடன் நடத்துவது, உற்சாகத்துடன் இருப்பது, வாய்ப்பு கிட்டினால் மனம் திறந்து பாராட்டுவது போன்றவை வெற்றியின் ரகசியங்கள்.
 • மௌனம் பேச்சைவிட வலிமையான ஆயுதம். மறுதரப்பினர் சீண்டும்போது, மனக்குழப்பத்தின் போது, கோபத்தின்   போது, சோர்வின் போது, மௌனமாக இருந்துவிட்டால் வலிமையான மனிதராகிவிடலாம்.
 • அவ்வப்போது மனதிற்குள் உதிக்கும் யோசனைகளை, வழிமுறைகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளவும். வாய்ப்பு வரும்போது அதைச் செயல்படுத்தவும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் யாருமே செய்யாத அளவிற்கு சாதனைகளைப் படைக்க முடியும்.
 • தனிமை நேரம்: வாரத்திற்கு ஒரு முறை யாவது சிலமணி நேரங்கள் தனிமைக்காக ஒதுக்கவும். ஞாயிற்றுக்கிழமை அல்லது ஏதாவது ஒரு நாளில் தனிமையில் நூல்களைப் படிப்பது, மெல்லிசை கேட்பது, இளைப்பாறுதல், சும்மாயிருத்தல் போன்ற வற்றிற்காக சில மணி நேரங்கள் ஒதுக்கலாம். அதன் மூலம் உற்சாகம், சக்தி, தெளிவு போன்றவை அடுத்த வாரம் முழுவதும் இருக்கும்.
 •  பிற மனிதர்களுடன் எவ்வளவு அதிகமாக சமூக உறவை வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றிகள் அமையும் மற்றவர்களோடு எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கிறோம் என்பதுதான் அதன் முக்கிய அம்சம்.
 • நவீன வாழ்க்கை மிகவும் பரபரப்பாகி விட்டது. வேலைப்பளுவை, வெளிச் சிக்கல்களை வீட்டிற்குள் நுழைக்காமல் அமைதியான, அற்புதமான இடமாக வீட்டை மாற்றவும். நல்ல புத்தகங்கள், மகத்தான இசை, நல்ல மனிதர்கள் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிக்கப் படட்டும்.
 • தியானம்: தினமும் அரைமணி நேரம் தனிமையில் அமர்ந்து எந்த செயல்களாலும் கவனம் சிதறாமல் தியானம் செய்வது மூளையை புதுப்பிக்கும். மனமானது குரங்கைப்போல எதையாவது தாவிப் பிடிக்கும் இயல்புடையது. எதையாவது வேண்டாம் என்று தடுத்தால் அதையே திரும்ப நினைக்கின்ற இயல்புடையது. தியானம் மூலம் மனதை அடக்கலாம்.

மன உறுதி

 • மன உறுதியை வளர்த்தல்: செயல்பாடு, பிறருடன் பழகுதல், குறிக்கோள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் போன்றவற்றை நன்கு ஆய்ந்து நெறிப்படுத்தி அமைத்துக் கொண்டு அதை உறுதியுடன் செயல் படுத்துவதால்தான் உறுதியான மனிதர் உருவாகிறார்.
 • சபலங்கள் மனிதர்களின் பலவீனம். சுவையான உணவுகளை அளவிற்கதிகமாக சாப்பிட்டு அவதிப்படுதல். மது போன்ற போதையில் மூழ்குதல், மூன்றாம் மனிதரைப் பற்றி தவறாக பேசுதல், காமத்தில் தடுமாறுதல் எல்லாமே மனதின் தடுமாற்றத்தால்தான்.
 • எதெல்லாம் நம்மை ஆட்டுவிக்குதோ அதையெல்லாம் அடக்கி வைக்க பயிற்சி கொடுக்க வேண்டும். விரதம் இருப்பது ஒரு வகை நெறிப்படுத்துதல் ஆகும்.
 • மற்றவர்களுடன் பழகும்போது குறைவாக பேசவும், அதிகமாக கேட்கவும். இதன் மூலம் மற்றவர்களுக்கு பிடித்தமானவர் ஆகிறோம். அத்துடன் நாம் பிறரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
 • “என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால், தொடக்கத்தில் அதற்குரிய ஆற்றல் இல்லா விட்டாலும் நான் நிச்சயமாக தேவையான ஆற்றலை முயற்சித்து பெற்று விடுவேன்” என்றார் மகாத்மா காந்தி.
 • முடியும் என்ற நம்பிக்கைதான் மனித குலத்தை உயர்த்துகிறது. புதுமைகளைப் படைக்கிறது.
 • மகத்தான காரியங்கள் நடை பெறுவது பலத்தினால் அல்ல. விடாமுயற்சியினால் தான் என்றார் ஒரு அறிஞர்.
 • ஒரு செயலை தொடர்ந்து 21 நாட்கள் செய்து கொண்டு இருந்தால் அதுவே இயல்பான பழக்கமாகி விடும்.
 • ஒரு நல்லபழக்கத்தை செயல்படுத்துவ தானாலும் அல்லது தீய பழக்கத்தை விடுவதானாலும் தொடர்ந்து 21 நாட்கள் முயற்சியை கைவிட்டுவிடாமல் செய்தால் போதும். அதை சொந்த பழக்கமாக்கி விடலாம்.
 • நாள் முழுவதும் (வாழ்நாள் முழுவதும்) நகைச்சுவை உணர்வோடு வாழப் பழகி விட்டால் அதுவே உன்னத வாழ்க்கை. மகிழ்ச்சி என்பது பிறப்புரிமை. உலகத்தில் அனைத்தும் மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டது.
 • “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாதி ருந்தால் நான் எப்போதே பைத்தியம் ஆகியிருப்பேன்” என்றார் காந்தி. நகைச்சுவை மனநிலை இறுக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி ஆரோக்கிய சூழலை உண்டாக்கிவிடும்.
 • “உன் நண்பனைக் காட்டு: உன்னை யாரென்று சொல்லி விடுகிறேன்” என்பது பொன் மொழி. நற்சிந்தனை, உயர்ந்த குறிக்கோள் கொண்ட மனிதர்களைச் சேர்ந்தால் வெற்றிகள் வந்து சேரும். தோல்வியாளர்களையும் சோம்பேறி களையும் சேர்ந்தால் அதிலும் ஒரு பங்கு ஒட்டிக் கொள்ளும்.

மனநல பழக்க வழக்கங்கள்

அதிகாலை எழுந்தவுடன் தொடங்குகின்ற முதல் ஒரு மணி நேரம் தான் அந்த நாளின் மற்ற 23 மணி நேரங்களையும் நிர்ணயிக்கும். நன்றாக தொடங்கப்பட்ட நாளானது புத்துணர்வையும் செயலூக்கத்தையும் கொடுக்கும்.

அந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமளிக்கும் நூல்களைப் படித்தும், உற்சாக ஒலி நாடாக்களைக் கேட்டும், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்தும் செயல்களைத் தொடங் கினால் ஆன்மா ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும்.

நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம். ஆகவே அதை சரியாக கண் காணித்தல் அவசியம். மிக அற்பமான செயல்களில் நேரத்தை வீணாக்கினால் மிக அத்தியா வசியமான செயல்களுக்கு நேரம் கிடைக்காது.

“இன்று உயர்ந்த நாளாக அமைவதற்கு  நேரத்தைப் பயன்படுத்துவது எப்படி?” என்று திட்டமிடுதல் வெற்றிகளைக் குவிக்கும்.

தொலைபேசியில் எப்போதும் உற்சாகமாகப் பேசினால் அழைப்பவர் உங்களுடைய குரலுக்காக எப்போது வேண்டுமானாலும் காத்திருப்பார். தொலைபேசியில் பேசும் போது நல்ல பண்புகள் தெரியும். எழுந்துநின்று பேசினால் உங்களுடைய பண்பு உயர்ந்துவிடும்.

மகிழ்ச்சி எப்படி?

 • “நாம் மகிழ்ச்சியாய் இருப்பதனால் சிரிப்பதில்லை. சிரிப்பதனால் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம்” என்றார். வில்லியம் ஜேம்ஸ். ஆழமாக, முடிந்தால் சப்தமாக ஆஹ…ஹா…ஹா… என்று சிரிக்கலாம். சிரிப்பதால் உடலும் மனமும் மென்மையாகி விடும்.
 • சிரிக்க சிரிக்க முகப்பொலிவு கூடிக் கொண்டே வரும். குழந்தையாக இருக்கும் போது பெரும்பாலான நேரங்களில் சிரித்துக் கொண்டே இருப்போம். வயதாக வயதாக சிரிப்பதற்கே மறந்துவிடுவோம். இன்று சிரிக்கவில்லையேல், இன்று வாழவில்லை என்று பொருள்.
 • சுயவசியம் : ஒரு கட்டிடத்தை கட்டும் முன்னர் காகிதத்தில் வரைபடம் போடு வார்கள். அதே போல ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அன்றைய தினத்தைப் பற்றிய திட்டங்களை மனதில் வரைபடம் போட வேண்டும். அற்புதங்களை நிகழ்த்து வதாக மனதில் காட்சி காணுதலைச் செய்தால் ஆழ்மனம் அதற்கேற்ப செயல்பட்டு குறிக்கோளை நிறைவேற்றி விடும்.
 • நமது செயல்பாடு களில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் செய்தால் உயர்வு. ஆனால் செயலிலேயே அடிமையாகி விட்டால் துன்பத்தையும் சிரமத்தையும் சந்திக்க நேரிடும்.
 • மகிழ்ச்சியாக இருப்பவர்கள், உலக விஷயங்களில் மாட்டிக்கொள்ளாமல் ஆக்கப் பூர்வமாக வாழ்கின்றனர்.
 • மனிதர்கள் நம்பகத்தன்மை உடையவர்களையே தேடுகிறார்கள்.
 • மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமா வதற்கு நேர்மையானவராக வாழ்ந்தால் போதும். உலகமே போற்றிப் புகழ காத்திருக்கும்.
 • மனித மனம் ஒரு பூத்தொட்டி. அதை நல்ல எண்ணங்களால் விதைத்து பாதுகாத்தால் அழகாக பூத்துக் குலுங்கும். பிற மனிதர்களின் எதிர்மறை விமர்சனங்கள், வன்முறை திரைப்படக் காட்சிகள், குப்பைச் செய்திகள் போன்றவற்றை உள்ளே போட்டால் குப்பைத் தொட்டியாகி விடும். குப்பையான விஷயங்களை தாட்சண்யம் பாராமல் விலக்கவும்.

தலையாட்டி பொம்மை :

 • “இல்லை என்று சொல்ல நினைத்த போது மற்றவர்களின் திருப்திக்காக ஆம் என்று தலையாட்டாதே” என்றொரு ஆங்கில வாசகம் உண்டு.
 • மற்றவர்களுக்காக, மற்றவர்களின் திருப்திக்காக வற்புறுத்தலுக்காக ஆம் என்று ஒப்புக்கொண்டால் உடன் பாடில்லாத சுமைகளை சுமக்க  நேரிடும்.
 • இளமை என்பது இளம்பருவத்தில் மட்டுமல்ல. அது ஒரு மனநிலை. மனதில் தளர்வான சோர்வான எண்ணங்கள், சந்தேகம், பயம் போன்றவை நிறைந்துவிட்டால் மூப்பு இள வயதிலேயே வந்து விடும்.
 • குறிக்கோளை உயர்த்தி, ஆர்வத்தைப் பெருக்கி, நம்பிக்கை யோடு செயலாற்றினால் இளமை எப்போதும் தொடரும்.
 • பக்கத்து வீட்டுக்காரர்களைத் தெரிந்து கொண்டு அவர்களோடு தொடர்பை வளர்த்தால் வாழ்க்கை வசந்தமாகும். எதிர்பார்க்காதபோதும் உதவிகள் கிடைக்கும்.
 • நாம் சந்திக்கும் மனிதர்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நல்லவரை தேர்வு செய்யலாம். அவர்களோடு உறவை வளர்ப்பதற்கு திட்டமிடலாம். பிறந்த நாள், மணநாளின் போது வாழ்த்துதல், அவர்களின் திறமைகளைப் பாராட்டுதல், வாய்ப்புக் கிட்டினால் அவர்களுக்கு விருந்தளித்தல் போன்றவை சிறந்த உறவுகளை வளர்த்து வாழ்க்கையை இனிமையாக்கும்.

சிலவற்றை அதிகமாகச் செய்யலாம்.

அதிகமாகப் படிக்கலாம்.

அதிகமாக கற்றுக் கொள்ளலாம்.

அதிகமாகச் சிரிக்கலாம்.

அதிகமாக நேசிக்கலாம்.

 • நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தால் மகிழ்ச்சி தானாக வந்து விடும். சக்தி பெருகும். வீண்பேச்சு, தொலைக் காட்சியில் நீண்ட நேரம் அமர்தல், தொலை பேசியில் அரட்டை இவை யெல்லாம் வளர்ச்சிக்குத் தடைகளாகும்.
 • ‘நான்’ ‘எனக்கு’ என்ற வார்த்தைகள் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்கும். இவ்விரண்டு வார்த்தைகளையும் இயன்ற வரை பேசாமல் மற்றவர்களின் மீது கவனம் செலுத்துதல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் போன்றவற்றைச் செய்தால் நட்புறவுகள் வளரும். அகந்தை அழியும்.

செல்வந்தரின் ரகசியம்

அதிகாலையில் எழ வேண்டும்

இரவிலும் தேவையான வேலைகளை செய்து முடிக்க வேண்டும்

தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

ஓய்வு நேரத்தைக் குறைக்க வேண்டும்.

இதுவரை செய்யாத அளவிற்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும்.

யாரும் கவனிக்காத போதும் சரியாக செய்ய வேண்டும்.

வாழ்க்கையே இதில்தான் என்பதைப் போல செய்ய வேண்டும்.

செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும்.

மனிதர்கள்

வாழத் தெரியாமல் பிறக்கிறார்கள்

வாழத் தெரியாமல் வாழ்கிறார்கள்

வாழத் தெரியாமலேயே இறக்கிறார்கள்

இதைப் பலராலும் ஏற்க முடியாது.

ஏதாவது ஒரு துறையில் திறமைசாலி என்பதால் எல்லாமே தெரியும் என்று எண்ணுவதுதான் மனித இயல்பு.

தனக்கு தெரியாது என்பதே தெரியாதது மற்ற எல்லாவற்றையும் விட பரிதாபம்.

அதீத மகிழ்ச்சி நோய் Mania

– ரணமில்லாத மகிழ்ச்சி

– தன்னைத் தெய்வம் என்றும்  வரம் தருகிறேன் என்றும் சொல்லிக் கொள்ளுதல்.

– வசதிக்கும் சக்திக்கும் மீறி அளவிட முடியாத அளவிற்கு ஆடம்பரம் செய்தல்

– மகிழ்ச்சி போதையிலே எப்போதும் இருத்தல்

– உறக்கம் குறைதல்

– பேசிக்கொண்டே இருத்தல்

– பாடிக்கொண்டே இருத்தல் (பாடத் தெரியாமல்)

– ஒரு விஷயம் பேசும்போதே அடுத்த விஷயத்திற்கு     தாவுதல்.

– கவனம் சிதறுதல்

– தன்னிலை உணராமை

– வேலை செய்ய முடியாமல் அக்கறை இல்லாமல்      இருப்பது

– பிறர் அறிவுரை சொன்னால் அலட்சியப் .படுத்துதல்

– தூக்கம் வந்தாலும் அதைப்பற்றிய செயல்பாடு இல்லாமல் இருத்தல்.

போன்ற மனநிலை அதீத மகிழ்ச்சி நோயாகும்.

உடலுறவு சம்பந்தப்பட்ட மனநோய்கள்:

–  உடலுறவில் குறை

–  உடலுறவில் ஆர்வம் குறைவு

–  உடலுறவில் ஆற்றல் குறைவு

–  உடலுறவின் உச்சக்கட்ட குறை

–  உடலுறவின்போது வலி.

உணவு சம்பந்தப்பட்ட மனநோய்கள்

–  அதிக உணவு உட்கொள்ளுதல்

–  உணவு உட்கொள்ளாமை

உறக்கம் சம்பந்தப்பட்ட மனநோய்கள்

–  உறக்கம் குறைதல்

–  உறக்கமற்ற நிலை

–  உறக்கம் மிக அதிகம்

–  உறக்கத்தில் நடப்பது

–  உறக்க கனவுகளுக்கு அஞ்சுதல்

வளரும் பருவத்தில் மனநோய்கள்

–  படிப்பில் குறைபாடு

–  செயலில் குறைபாடு

–  பேச்சில் குறைபாடு

–  கவனக் குறைபாடு

–  உணவு பழக்க  கோளாறு

–  மலம், சிறுநீர் கழிப்பதில் கோளாறு

மனச்சோர்வு

மோசமான மனநிலை நாள் முழுவதும்

– முன்பு விரும்பியவற்றின்மேல்  ஆர்வம் குறைதல்

– உறக்கமின்மை

– சம்பந்தமில்லாமல் மனப்பதட்டம், பரப்பரப்பு, எரிச்சல், கோபம்.

– மிகுந்த அசதி, எதுவும் செய்யாமலே உடல் சக்தி குறைந்த நிலை.

– தான் எவருக்கும், தனக்கும் பயனில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அல்லது     குற்றவுணர்வு.

– மனதில் தாங்க முடியாத பாசம், அதனால் முடிவெடுக்க இயலாத மனநிலை.

– மரணம் பற்றிய எண்ணம் அடிக்கடி தோன்றும். தற்கொலை எண்ணம் தொடர்ந்து வருதல்.  அல்லது தற்கொலைக்கு முயற்சித்தல்.

– மகிழ்ச்சியே இல்லாத மனநிலை.

– பிறருடன் பழகுவதற்கு முடியாத மன நிலை.  இந்த      அறிகுறிகள் எந்த தோல்வியும், துயரமும், அவமானமும், இழப்பும் இல்லாமல் ஏற்படும்.

சிலருக்கு – தலையின் பின்புறம் வலி

– உடலில் ஊர்வது போன்ற பிரமை

– மலச்சிக்கல்

– காரணமில்லாமல் அழுகை

– தனிமை நாட்டம்

– பிறர் பேசும் சத்தத்தை தாங்கிக் கொள்ள இயலாமை.

இத்தகைய அறிகுறிகள் ஐயத்திற்கும்

மேற்பட்டவை 15 நாட்களுக்கு மேல் காணப் பட்டாலோ தற்கொலை  எண்ணம் இருந்தாலோ அவருக்கு மனச்சோர்வு உள்ளதை உறுதிபடுத்த முடியும்.

மனச்சோர்விற்கு மருந்து வகை சிகிச்சைகளின் மூலம் மனதை அமைதிப்படுத்தி உறக்கத்தை இயல்பாக்கலாம்.

மனஅசதி உள்ளவருக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கலாம்.

தற்கொலை எண்ணம் உள்ளவர்களை மருத்துவ மனையில் சேர்த்து தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப் பட்டால் மின் அதிர்வு சிகிச்சை கொடுக்க வேண்டும்.

மனச்சோர்வு சிகிச்சை மருந்துகளின் சில பக்க விளைவுகள்

– நாக்கு உலர்தல்

– மலச்சிக்கல்

– பசியின்மை  அதிகபசி

– மயக்கம்

– வயிறு கலக்கல் எரிச்சல்

சூட்சுமமான வாழ்க்கை!

 • வேண்டியவர்களே வித்தியாசமாக நடந்து கொள்வார்களா?

ஆம். சில சமயங்களில்

 • மனிதன் திட்டமிட்டு செய்கின்ற விஷயங்கள் சரியாக நடக்குமா?

சில சமயங்களில் தவறாகவும் நடக்கும்.

 • மனிதனைச் சுற்றி நடக்கின்ற எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியுமா?

முடியாது.

 • வாழ்க்கையில் ஒரே மாதிரியான செயல்கள் நடக்குமா?

ஏற்றம் இறக்கம் தவிர்க்க முடியாதது.

 • மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மனிதன் செய்ய வேண்டியது என்ன?

மாற்றவேண்டியதை மாற்ற வேண்டும்.

 • மாற்றமுடியாத விஷயங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும்?

முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisements