• ஒரு பிச்சைக்காரனிடம் இரண்டு லட்சம் தருகிறேன். மகிழ்ச்சி தானே என்றார் ஞானி.  ‘ஆம்’ என்றான் பிச்சைக்காரன்.”ஆனால் ஒரு நிபந்தனை. உன்னுடைய இரண்டு கண்களையும் கொடுத்துவிட்டு இரண்டு லட்சத்தை எடுத்துக் கொள்” என்றார் ஞானி. இரண்டு லட்சத்தைவிட கண்களே உயர்ந்தவை என்பதை புரிந்து கொண்டான் பிச்சைக்காரன்.
  • அப்படி பார்த்தால் நமக்கு அமைந்துள்ள உடலின் ஒவ்வொரு உறுப்பும் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் விலைமதிப் பற்றவை. வாழ்க்கையில் நமக்கு கிடைத்துள்ள 25 அம்சங்களை பட்டியலிட்டால் போதும். நம் உயர்வை உணரமுடியும்.
  • உயர்ந்த குறிக்கோள்கள் குறைந்த பட்சம் ஐந்தை உருவாக்கி கொள்ளுதல் வாழ்க்கையை இனிமையாக்கிவிடும். தினமும் உடற்பயிற்சி, சில கால இடைவெளிகளில் வெளியிடங்களுக்குப் பயணம், மற்றவர்களுக்குப் பயன்படும் சேவை, தலைமைப் பண்புகளை வளர்த்து பிறருக்கு வழி காட்டியாக வாழ்தல் போன்றவை.
  • புத்தர் பாணி: புத்தரை ஒரு கிராமத்தினர் அவதூறு பேசி அவமானமாக நடத்தினர். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த புத்தரிடம், இதெல்லாம் உங்களைப் புண்படுத்தவில்லையா? என்றனர். “இதற்கு முன்னர் நான் பக்கத்து கிராமத்திற்குச் சென்றபோது அங்குள்ள மக்கள் என் மீதுள்ள பற்றினால் இனிப்பு பொட்டலங்களைக் கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி மூன்று வருடங்கள் ஆகி விட்டதால் அவற்றை ஏற்கவில்லை. அப்படியானால்  அப்பொட்டலங்கள் யாருக்கு சொந்தம்” என்று கேட்டார் புத்தர். யார்? யார்? கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே சொந்தம் என்றனர் மக்கள். ‘இப்போது நீங்கள் அவமதித்ததையும் நான் ஏற்கவில்லை. அதனால் அவை யாருக்கு சொந்தம்?” என்றார். “நாங்கள் செய்த அவமானம் எங்களுக்கேதான் சொந்தம்” என்றனர் மக்கள். நம்முடைய அனுமதியின்றி எவரும் நம்மை அவமானப் படுத்தவோ காயப்படுத்தவோ முடியாது.
  • ஒவ்வொரு மனிதனுக்கும் இனிய சொல் அவனுடைய பெயர்தான். மனிதர்களின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு அழைப்பது, மரியாதையுடன் நடத்துவது, உற்சாகத்துடன் இருப்பது, வாய்ப்பு கிட்டினால் மனம் திறந்து பாராட்டுவது போன்றவை வெற்றியின் ரகசியங்கள்.
  • மௌனம் பேச்சைவிட வலிமையான ஆயுதம். மறுதரப்பினர் சீண்டும்போது, மனக்குழப்பத்தின் போது, கோபத்தின்   போது, சோர்வின் போது, மௌனமாக இருந்துவிட்டால் வலிமையான மனிதராகிவிடலாம்.
  • அவ்வப்போது மனதிற்குள் உதிக்கும் யோசனைகளை, வழிமுறைகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளவும். வாய்ப்பு வரும்போது அதைச் செயல்படுத்தவும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் யாருமே செய்யாத அளவிற்கு சாதனைகளைப் படைக்க முடியும்.
  • தனிமை நேரம்: வாரத்திற்கு ஒரு முறை யாவது சிலமணி நேரங்கள் தனிமைக்காக ஒதுக்கவும். ஞாயிற்றுக்கிழமை அல்லது ஏதாவது ஒரு நாளில் தனிமையில் நூல்களைப் படிப்பது, மெல்லிசை கேட்பது, இளைப்பாறுதல், சும்மாயிருத்தல் போன்ற வற்றிற்காக சில மணி நேரங்கள் ஒதுக்கலாம். அதன் மூலம் உற்சாகம், சக்தி, தெளிவு போன்றவை அடுத்த வாரம் முழுவதும் இருக்கும்.
  •  பிற மனிதர்களுடன் எவ்வளவு அதிகமாக சமூக உறவை வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றிகள் அமையும் மற்றவர்களோடு எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கிறோம் என்பதுதான் அதன் முக்கிய அம்சம்.
  • நவீன வாழ்க்கை மிகவும் பரபரப்பாகி விட்டது. வேலைப்பளுவை, வெளிச் சிக்கல்களை வீட்டிற்குள் நுழைக்காமல் அமைதியான, அற்புதமான இடமாக வீட்டை மாற்றவும். நல்ல புத்தகங்கள், மகத்தான இசை, நல்ல மனிதர்கள் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிக்கப் படட்டும்.
  • தியானம்: தினமும் அரைமணி நேரம் தனிமையில் அமர்ந்து எந்த செயல்களாலும் கவனம் சிதறாமல் தியானம் செய்வது மூளையை புதுப்பிக்கும். மனமானது குரங்கைப்போல எதையாவது தாவிப் பிடிக்கும் இயல்புடையது. எதையாவது வேண்டாம் என்று தடுத்தால் அதையே திரும்ப நினைக்கின்ற இயல்புடையது. தியானம் மூலம் மனதை அடக்கலாம்.