நவீன மருத்துவத்தில் எண்ணற்ற புதிய யுக்திகள் உருவாகியுள்ளன. மனித வாழ்வை நூறாண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு உறுப்பு (சிறுநீரகம், கல்லீரல், இதயம்) செயல் இழந்துவிட்டால் அதை மாற்றிக் கொள்ள முடியும். பரம்பரை நோய்களை ஜீன் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். இப்படி பற்பல மருத்துவ அற்புதங்கள் நடந்தாலும் சரியான உணவு, சிந்தனை மற்றும் பழக்க வழக்கங்களினால் பல நோய்களை தவிர்க்கலாம். முற்றிலும் குணமாக்கலாம்.

  • இன்று மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். நிறைய விதங்களில் சாப்பிடவும், உணவில் ஈர்ப்பு உண்டாகின்ற சுவைகளும், செயற்கை உணவுகளும், விதவிதமான மாமிச உணவு களும் அதிகமாகி விட்டன. மாதத்தில் என்றோ ஒருநாள் இனிப்பு மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்ட நிலைமாறி தினமும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடும் நிலை. இதனால் சிறுவர் முதல் முதியோர் வரை அதிகமாக சாப்பிட்டு தன் சொந்த உடலைத் தூக்கவே சிரமப்படுகிறார்கள்.
  • உடல் அதிக எடைக்கு இரைப்பை பைபாஸ் சிகிச்சையில் இரைப்பையின் அளவைக் குறைத்துவிட்டு, உணவு செல்லும் குடலின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும். அதனால் சாப்பிடும் அளவும், உணவில் இருந்து ஊட்டச் சத்து கிரகிக்கும் அளவும் குறைவாக இருக்கும்.
  • இந்த குறைபாட்டை நீக்கிய புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி சிகிச்சையில் இரைப்பை அளவு மட்டுமே குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவை சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில் உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும்.
  • அளவான உணவு, போதுமான உறக்கம், மிதமான உடற்பயிற்சி போன்றவற்றில் உறுதியாக இருந்தாலே போதும். உடல் பருமன் வராமலே தடுக்க முடியும். எந்த சிகிச்சையும் தேவையில்லை.