December, 2016

உயர்ந்த வாழ்க்கைக்கு பிரபஞ்ச ரகசியம்!

மருத்துவத்தில் பிளசபோ என்ற மருந்தைக் கொடுப்போம். சில நோயாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி சரிவர உடல்நிலை இயங்காத நிலை, மனம் செயல்பட முடியாத நிலைக்கு போனவர்கள் கூட இந்த பிளசபோ மருந்தைக் கொடுத்ததும் முற்றிலும் குணமாகி புதிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இந்த மருந்து குணப்படுத்த வேண்டுமெனில் முக்கிய நிபந்தனை மருந்தின் மூலமும் மருத்துவர் மூலமும் முழு நம்பிக்கை வேண்டும்.

இது எப்படி குணப்படுத்துகிறது?

இந்த மருந்தை சாப்பிட்டால் முற்றிலும் குணமாகிவிடும் என்ற எண்ணமும், உணர்வும் உடலின் பௌதிக தன்மையை மாற்றி குணப் படுத்துகின்றன.

ஆனால், இந்த பிளசபோ மருந்தின் உண்மையென்றால் பார்ப்பதற்கு மற்ற மருந்து மாத்திரைகளைப் போல இருக்கும்.

உடலில் எந்த மாற்றத்தையும் செய்யாது. ஆனால் நோயை குணமாக்கியது நம் மனம்தான்.

அந்த மருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று நம்பினால் அவர் நம்பிய மாற்றங்களை உடலில் பெறுவார். பூரண குணம் பெறுவார்.

எவ்வளவு பெரிய அதிசயம்?

அதனால் எல்லா நோய்களுக்கும் பிளசபோ மருந்தையே கொடுத்து விடலாமே என நீங்கள் கேட்கலாம்.

கடுமையான உறுப்பு பாதிப்புகளால் அவதிப் படுகின்றநோயாளிக்கு அதற்கு தகுந்த, அதை சரி செய்கின்றமருந்தைத் தான் கொடுக்க வேண்டும்.

அந்த நோய்க்கான உடலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்தை மருத்துவர் கொடுத்தாலும் சிலருக்கு பலனளிப்பதில்லை.

காரணம் என்ன?

இங்கு மருந்துகள் வேலை செய்கின்றன. ஆனால் மனம் நம்பவில்லை. அதனால் நோய் குணமாகாமல் தொல்லைகள் தொடருகின்றன. நோயாளியும் பரிசோதனை மேல் பரிசோதனைகளைச் செய்வார். மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார், நோய் மட்டும் தீராது.

நம் உடலும் மனமும் பிரபஞ்ச விதிகளின் படி இயங்குகின்றன மனதில் அமைதி, அன்பு, நன்றி, நிறைவு, நிறைந்து விட்டால் உடலின் ஆரோக்கியம் பெருகிவிடும்.

மாறாக மன இறுக்கம் பெருகிவிட்டால் உடலில் உள்ள ஒத்துழைப்பு செயல்பாடு சிதைக்கப்பட்டு நோய், அமைதியின்மை, கவலை, சோகம் எல்லாம் பெருகிவிடும்.

இதையே “உங்கள் நம்பிக்கை உறுதியாக இருக்குமானால் உங்களால் முடியாதது என்பது ஒன்றும் இல்லை” என்கிறது பைபிள்.

உடலாக இருந்தாலும் வாழ்வாக இருந்தாலும் எண்ணமும், நம்பிக்கையும்தான் நம்மை இயக்குகிறது.

இதை புத்தர் “இன்றிருக்கும் நாம், நம் எண்ணங்களின் விளைவே” என்றார்.

விவேகானந்தர் “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகி விடுவாய்” என்றார்.

ஆகவே உயர்வான வாழ்வின் நான்கு நிலைகள்.

 1. குறிக்கோளை நிர்ணயிப்பது
 2. அதை அடைந்துவிட்டாதாக நம்புதல்
 3. அதை அடைந்ததற்கு நன்றி கூறுதல்
 4. அடைந்த பிறகு அதை அனுபவிப்பதாக உணருதல்

முதல் நிலை : குறிக்கோளை நிர்ணயிப்பது

ஒரு மனிதனுக்கு எது உயர்ந்த குறிக்கோள்?

உங்கள் வாழ்வின் நோக்கம் இதுதான் என்பதை கடவுள் சொல்ல முடியாது. வேறுயாரும்  சொல்ல முடியாது. சொன்னாலும் ஏற்க முடியாது. நீங்கள் ஒருவர்தான் நிர்ணயிக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டுமோ? எது மகிழ்ச்சியோ? அதை உங்கள் குறிக்கோளாக நிர்ணயிக்கவும்.

வாழ்க்கையே ஒரு திருவிழா அதைக் கொண்டாடுங்கள் என்றார் ஒஷோ. நீங்கள் நிர்ணயிக்கின்றகுறிக்கோளில் உயர்வும், மகிழ்ச்சியும், மற்றவர்களுக்கு பயனும் இருந்தால் அதுதான் சரியான குறிக்கோள்.

அதில் மகிழ்ச்சி, அன்பு, சுதந்திரம், பெருமிதம், சிரிப்பு போன்றவையெல்லாம் கிடைக்குமானால் அதைத்தான் உடனே செய்ய வேண்டும்.

அதன்முதல் நடவடிக்கையாக உங்களுக்கு ஒத்துவராத நீங்கள் போற்றாத கடந்த கால நினைவுகள், மனிதர்கள் அனைத்தையும் மனதிலிருந்து தூக்கி எறியுங்கள். உங்களுடைய புதிய குறிக்கோளின் துவக்கத்திற்கு தள்ளப் பட்டதற்கு நன்றி சொல்லுங்கள். இதுவரை உங்கள் வயது, பதவி, உடல் நிலை, எதுவாக இருந்தாலும் உங்களுடைய புதிய வாழ்க்கையை இன்றிலிருந்து இக்கணத்திலிருந்து துவங்குங்கள். உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சிக் கடலாக மாறிவிடும்.

இரண்டாம் நிலை : அடைந்துவிட்ட நம்பிக்கை

உங்களுடைய குறிக்கோள் என்பது என்ன?

என்ன வேண்டும் என்றதெளிவுதான். இப்போது நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கெனவே உங்களுடையதாகி விட்டதாக முழுமையாக நம்பவேண்டும்.

அடைந்துவிட்டால் என்ன மனநிலையோ அதே மனநிலையை இப்போதே அடைந்து விட வேண்டும். இதில் ஒரு துளி சந்தேகமும் இருக்கக் கூடாது, முழுமையாக நம்பிக்கையாக வேண்டும்.

இப்படி கற்பனை செய்வது சரியோ? என்றகேள்வி ஏற்பட்டதா?

இதற்கு பதில்: நீங்கள் இப்போது இருக்கின்ற நிலை ஏற்கெனவே நீங்கள் நினைத்ததுதான். நம்பியதுதான்.

இல்லை, இல்லை இப்படிப்பட்ட சோதனை களையா, சிரமங்களையா, நான் நம்பினேன்?” என்று நினைக்கலாம்.

உண்மை என்னவெனில்? தெரிந்தோ தெரியாமலோ இப்படியெல்லாம நடக்குமோ என்று மனதில் எண்ணி இருந்தால்கூட அதன்  விளைவாக இப்போது ஆகிவிட்டீர்கள் என்பதுதான்.

சரி போகட்டும். உங்களுடைய இப்போதைய வாழ்க்கை உண்மையிலேயே நீங்கள் விரும்பிய ஒன்றாக இல்லையா? அப்படியெனில் அதை மாற்றிக் கொள்ள இதுதான் சரியான நேரம். “கற்பனைதான் எல்லாம். அது வாழ்க்கையில் வரப்போகும் வசந்தங்களின் முன்னோட்டம்”

மூன்றாவது நிலை : குறிக்கோளை பெற்று விட்ட நிலை

“உங்கள் கற்பனைக் காட்சி வெளி உலகில் பெரிதாக வடிவத்தைப் பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. உங்களைத் தவிர”

மனிதர்களுடைய பிரச்சனையே இதுதான்.

மனிதர்களின் கவனம் சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும் அதில் அவர்கள் வல்லவர்கள். “என் வாழ்க்கையையே மாற்றி விடுவேன்” என்று சவால்கூட விடுவார்கள். ஆனாலும் எதிர்பார்த்தது நடக்காது, ஏன்?

எதிர்பார்த்தது கிடைப்பதற்கு வெளியில் தெரியாமல் இருக்கும்; துளிர்விட்டிருக்கும்; ஆனால் அந்த மனிதர் மேலோட்டமாக பார்த்து விட்டு “இது ஒன்றும் சரிபட்டு வராது” என்று நினைப்பார். அதற்கு சப்பைக் கட்டாக உடனிருப் போர்கள் “எதுக்கு உனக்கு இந்த வம்பு? இப்போது என்ன குறைந்து விட்டது?” என்பார்கள்.

உடனே மனமும் அப்படியே நம்பும். ஒரு போலியான பாதுகாப்பை உணர்வதில் மனதிற்கு அலாதி பிரியம் உண்டு.

நான் முன்னர் சொல்லியது போல உங்களுடைய மனதில் ஒரே ஒரு துளி சந்தேகத்தை நுழைய அனுமதித்து விட்டால் அடுத்தடுத்தாக சந்தேகங்களை வரிசையாக அணிவகுத்து நிறுத்திவிடும்.

ஒரு சந்தேகமோ, முடியாது என்று எதிர்மறைஎண்ணமோ முளைவிட்டால் அதை உடனடியாக கிள்ளி எறிந்துவிடுங்கள்.  நான் விரும்பியதைப் பெறப்போகிறேன் என்று உடனே மனதிற்குள் முழுமையாக நம்பி அவ்விடத்தை நிரப்பி விடுங்கள். மனதில் நடந்து விட்டதாக உணருங்கள்.

மன உணர்வுதான் மிக முக்கியம்.  நீங்கள் நினைத்த அனைத்தையும் உங்களை நோக்கி இழுக்கும் அலைவரிசைகளை உண்டாக்கிவிடும்.

“நான் இப்போது எனது குறிக்கோளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் அத்தனை சிறப்புகளும் என்னை வந்தடைகின்றன.  நான் இப்போது என் (குறிக்கோளை) பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றஉணர்வை நிலை நிறுத்துங்கள். நினைத்தது நடந்து விட்டது போன்றே உணருங்கள். (இப்போதுள்ள நிலை எதுவானாலும்).

இதை பைபிளில் “நீங்கள் நம்பிக்கையுள்ளவர்களாய் ஜெபத்திலே எவற்றைக் கேட்டீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” என்றார் ஏசு.

மேலும், “ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்கிறீர்களோ அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசத்துடன் நம்புங்கள். அப்பொழுது அவை உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” என்றார்.

நான்காம் நிலை : குறிக்கோளை அடைந்து விட்டதற்காக நன்றி கூறுதல்

நாம் உணர்ந்துள்ளதை விட அதிகமான சக்தியையும் அதிகமான சாத்திய கூறுகளையும் நாம் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மாபெரும் சக்திகளில் ஒன்றுதான் அடைந்து விட்டதற்காக நன்றி தெரிவித்தல்.

அன்பும் நன்றியும் எல்லாவற்றையும் கரைத்துவிடும்; ஈர்த்துவிடும்.

மனிதர்களுடைய அடுத்த பிரச்சினை என்ன வென்றால், “இந்த குறிக்கோளை அடைய எவ்வளவு காலம் ஆகும்?” என்பதுதான்.

காலம் என்பது நாம் நினைப்பதுதான். நீங்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டும் என்று விரும்பும் அனைத்துமே ஏற்கெனவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

நீங்கள் விரும்பியதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க பிரபஞ்சத்திற்கு ஒரு நொடிப் பொழுதே போதுமானது. உங்களுக்கு தாமத மாகிறது என்றால் அது ஏற்கெனவே கிடைத்து விட்டது என்று நம்புகிறமனதில் அறிந்துள்ள உணர்வு பெறுவதில் உள்ள குறைபாடுதான். ஒரு வேளை செய்த நான்கு நிலைகளும் சரியாக இருந்து நீங்கள் நினைத்ததை அடையவில்லை என்றால், நீங்கள் நினைத்ததை விட  வேறு உருவத்தில் அல்லது உயர்ந்த ஒன்று வரப் போகிறது என்பதே பிரபஞ்ச இரகசியம்.

நடைமுறையில் ஒரு சில குறிக்கோளுக்கு இத்தனை நடைமுறை. சிந்தனை காலம் என்று இருந்தாலும் அது ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான்.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரையில் அளவு ஒரு விஷயமே அல்ல. சிறிய ஒன்று கொடுப் பதற்குப் பெரிய ஒன்றைகொடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரு புல் வளர்வதற்கு சிரமப்படுவதில்லை.

ஒரு பெரிய ஆறு ஓடுவதற்கு சிரமப்படுவதில்லை.

இது சிறியது. அதை ஒருசில மணி நேரத்தில் அடையலாம். அது பெரியது அதற்கு நிறைய காலம் பிடிக்கும் என்ற வரையறை எல்லாம் நாம் நினைப்பது தான்.

இப்போதே உங்கள் குறிக்கோள் உங்களிடம் இருப்பதாக நம்புங்கள். உணருங்கள். அதற்கு நன்றி கூறுங்கள். உங்களிடம் இருப்பதாக உணரும் உணர்வுகளை அளியுங்கள். அது எதுவாக இருந்தாலும் சரி. பிரபஞ்சம் உங்களிடம்  இருப்பதாக உணரும் உணர்வுகளை அளியுங்கள். அது எதுவாக இருந்தாலும் சரி. பிரபஞ்சம் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

நான் இங்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஒருவர் சொன்னார். நான் வாழ்க்கையில் எதை எதையோ மாற்ற முயன்றேன். ஆனால் ஒன்றுமே முடியவில்லை அதற்கு உங்கள் பதிலை மேடையில் பேசும் போது சொல்லுங்கள் என்றார்.

அதற்கு பதிலாக ஒரு அறிஞரின் கடைசி நிமிட கவிதையைச் சொல்கிறேன்.

நான் சிறுவனாக இருந்த பொழுது உலகையே மாற்ற நினைத்தேன்; முடியவில்லை.

நான் இளைஞனாக இருந்த போது என் ஊரை மாற்றிவிட நினைத்தேன்; அதுவும் முடியவில்லை,

நான் குடும்பஸ்தனாகும்போது என் குடும்பத்தை மாற்றிவிட  நினைத்தேன்; நடக்க வில்லை.

நான் தந்தையானபோது மகனையாவது மாற்றிவிட  நினைத்தேன்; மகன் என் பேச்சை கேட்கவில்லை.

இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இவ்வளவு காலமும் மற்றவற்றை மாற்ற முயற்சித்ததற்குப் பதிலாக என்னை கொஞ்சம் மாற்றியிருந்தால் வாழ்க்கையே ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்திருக்குமோ என்று.

ஆனால், காலம் கடந்துவிட்டது. என்னுடைய இறுதி நேரம் வந்துவிட்டது என்று எழுதியபடி கண்களை மூடினார்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி,

உலகை மாற்றுவது எளிதா?

உங்களை மாற்றுவது எளிதா?

எல்லோரும் ஒத்து கொள்வீர்கள். உங்களை மாற்றுவதுதான் எளிது என்று. மாற்றம் என்றால் எப்படி ஆரம்பிக்க வேண்டும்.,

நீங்கள் பழகுகின்ற மனிதர்கள், படிக்கின்ற நூல்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலும் அப்படியே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை என்று பொருள்.

ஆகவே, புதிய மனிதர்களிடம் பழகுவோம் புதிய புதிய புத்தகங்களைப் படிப்போம். மாற்றங்கள் தொடங்கிவிடும், வாழ்க்கை உயர்ந்து விடும்.

பிரச்சினைகளே உயர்வுக்காகத்தான்

“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்பது தான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் எப்படி ஆகப்போகிறீர்கள்? என்பது உங்களுக்குத் தெரியாது” என்றார் அறிஞர் ஒருவர்.

இவ்வுலகம் பலகோடிக் கிரகங்களால் இயங்குகின்றன.

 • அதில் ஒரு சிறிய கிரகம் சூரியன்.
 • அதிலிருந்து பிரிந்த ஒரு துண்டு பூமி.
 • பூமியில் பல லட்சம் ஆண்டுகளின் பரிணாமத்தில் எண்ணற்ற உயிரினங்கள்.
 • அவற்றில் மனிதன் ஒரு உயிரினம்.
 • மனித உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பு.
 • ஒவ்வொரு செல்லிலும் உள்ள அடிப்படை உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களிலும் பிற பொருட்களிலும் உள்ளன. இவற்றை பஞ்ச பூதம் என்றும் கடவுள் என்றும் மதங்கள் கூறுகின்றன.
 • புவி ஈர்ப்பு சக்தி போன்று ஒரு இயற்கை சக்தி உலகின் பலகோடி கிரகங்களை இயக்குகின்றன என்று விஞ்ஞானிகள் ஆதாரத்தோடு கூறுகின்றனர்.
 • மகாத்மா, எடிசன், தெரசா, பீத்தேவன், நியூட்டன், பிளேட்டோ ஷேக்ஸ்பியர் போன்றோர் இத்தகைய சக்திகளை உணர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய எழுத்துக்கள் செயல்களின் மூலம் உணர முடியும்.
 • இந்த பிரபஞ்ச சக்தி பல்வேறு காலங்களில் மதங்களின் பெயரிலும் அறிவியலாலும் உலக படைப்புகளாலும் பல்வேறு விதமாக வெளிப் பட்டு வருகின்றன என்பது தான் வரலாறு.

இதை எல்லோரும் அடைய முடியும். அதனால் பலன் பெற முடியும் என்பதும் நடைமுறை சாத்தியம்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு சிக்கலான சூழ்நிலை ஏற்படும்போது (அது சிக்கல் அல்ல நம் பார்வையில் பெரிய சிக்கலான பிரச்சனையாக தெரிகிறது) அதற்கான விடையை பிரபஞ்சம் வெவ்வேறு வகையில் அனுப்பிவிடும்.

மனிதர்களின் பிரச்சனையே அதை ஒரு சம்பவமாக பார்க்காமல் பெரிய தடையாக தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்றகோணத்தில் பார்ப்பதும்தான். இதற்கு ஒரு சிறு உதாரணம்.

மகன் தன் தாயிடம் கேட்டான். “அம்மா உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று கெட்ட செய்தி ஒன்று. எதை முதலில் சொல்லட்டும்”.

“நல்லதையே சொல்லு” அம்மா

“அம்மா உன் மகள் தன் கணவருடன் தனிக் குடித்தனம் போய் செட்டில் ஆயிட்டாளாம்”.

“அப்பாடா! பெரிய விஷயம். அவளுக்கு அந்த மாமியார் கொடுமையிலிருந்து விடுதலை கிடைச்சது நல்ல செய்திதான்” – மகிழ்ந்தாள் அம்மா.

“சரி கெட்ட செய்தின்னு சொன்னியே! அதென்ன” மேலும் வினவினாள்.

“வருகிற முதல் தேதியிலிருந்து நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போக வீடு பார்த்து முன்பணம் கொடுத்துவிட்டேன்” மகன்.

அம்மாவின் மகிழ்ந்த முகம் அப்படியே இறுகிவிட்டது மனதிற்குள் வெறுப்பு, கோபம், ஆற்றாமை எல்லாம் புகுந்துவிட்டது.

சம்பவங்கள் இரண்டுமே ஒரே தன்மையைக் கொண்டதுதான். ஆனால் பார்க்கும் விதத்தில்தான் மகிழ்ச்சியோ துக்கமோ அமைகிறது.

அடுத்ததாக நமக்குள்ள பிரச்சினைகள் என்னவென்றால் தவறு நடந்துவிடுமோ? இறந்து விடுவோமோ? தோற்று விடுவோமோ? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? வறுமை வந்து விடுமோ? நோய் வந்து விடுமோ? எல்லோரும் ஒதுக்கிவிடுவார்களோ? என்ற பய உணர்வுகள்.

புத்தரைப் பற்றிய ஒரு சம்பவம்

புத்தரின் சீடர்கள் அவரிடம் தீட்சை பெற்று வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து செல்ல ஆயத்தமானார்கள். அப்போது ஒரு சீடனின் மனபக்குவத்தை அறிய அவனிடம் “எந்த ஊருக்கு போகிறாய்?” என்றார்.

சீடன் சொன்ன ஊர் மக்கள் மிக கொடியவர்கள், வஞ்சகம் நிறைந்தவர்கள் அராஜகமானவர்கள்.

“அந்த மக்கள் உன்னை தரக்குறைவாக திட்டுவார்கள்” – புத்தர்.

“பரவாயில்லை. அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்வேன்” – சீடன்

“ஒருவேளை அடித்துவிட்டால்?” – புத்தர்.

“பரவாயில்லை கொல்லாமல் விட்டு விட்டார்களே என மகிழ்வேன்” – சீடன்.

“சரி! கொன்னுட்டாங்கன்னா?” – புத்தர். “இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை என்ற நிறைவோடு ஏற்பேன்” – சீடன்.

புத்தர் “உனக்கு எதையும் எதிர் கொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டது. அதனால் உலகத்தின் எந்த மூலையிலும் நீ வாழ முடியும்” என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.

வருவது எதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற மனநிலைதான் வாழ்வை உயர்த்தும் முக்கிய அம்சம்.

சாமானியனுக்கும் சாதனையாளனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

பயம் என்று நடுங்குபவன் – சாமானியன்

எதையும் எதிர் கொள்பவன் – சாதனையாளன்.

நமக்கேன் வம்பு எப்படியோ நடப்பது நடக்கட்டும் – சாமானியன்.

அதையும் சமாளிப்போமே என சிக்கலிலும் தொடர்பவன் – சாதனையாளன்.

மாற்றமே வேண்டாம் – சாமானியன்

மாற்றம் அவசியம் – சாதனையாளன்

எதிர்பார்த்தது நடக்காத போது சோர்வடைபவன் – சாமானியன்.

ஏமாற்றத்தின் போதும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற உந்துதலைப் பெறுபவன் – சாதனையாளன்.

இதெல்லாம் சரிதான் எனக்கு எதையாவது செய்தால் உடனே தடை, எதிர்ப்பு, ஏமாற்றம், சிக்கல்கள், புதிய பிரச்சனைகள் உண்டாகி விடுகின்றனவே என்ன செய்வேன்? என்றகேள்வி எழும்.

ஒரு மனிதன் காட்டுவழியே பயணம் செய்கின்றான்.

வெயிலில் களைப்பு. சோர்ந்து மரத்தடியில் சாய்ந்தான்.

மர நிழலில் சுகம். ஒரு டம்ளர் ஜீஸ் கிடைச்சா நல்லாயிருக்குமே என்று நினைத்தான் உடனே வந்து விட்டது (அவன் படுத்திருந்தது கற்பகத்தரு மரத்தின் கீழ்).

 • அவனுக்கு ஜீஸ் குடித்ததும் களைப்பு போய் விட்டது. பெரிய ஆச்சரியம்.
 • அடடே! ஒரு நீச்சல் குளம் இருந்தால் இந்த வெயிலில் ஆனந்தமாய் நீந்தலாமே’ என்று நினைத்தான்.

உடனே அழகான நீச்சல் குளம் தோன்றியது. தண்ணீரில் இறங்கி ஆட்டம். பாட்டம், குளியல், சுகமோ சுகம்.

 • மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டான்.
 • அப்பாடா. இனிமேல் நமக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது’ என நினைத்தான்.

திடீரென இடம் மாறியது. அவன் மயானத்தில் அமர்ந்திருந்தான்.

இனி கதையை விட்டு நடைமுறைக்கு வருவோம்.

இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேருக்குத்தான் பிரச்சினைகளோ, சிக்கல்களோ, தொல்லைகளோ வராது.

 • ஒருவன் மயானத்தில் சமாதியானவன்.
 • இரண்டாமவன், எதையும் செய்யாமல் சோம்பேறியாக பொழுதைக் கழிப்பவன்.

பிரச்சினைகளோ தடைகளோ ஏமாற்றங் களோ நோய்களோ நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால், அவற்றுக்கு நம்மை பிடிக்கும். இதெல்லாம் இல்லையென்றால் வாழ்க்கையே கசப்பாகிவிடும்.

அதற்கு என்ன செய்வது? இனிமேல் எந்த சிக்கல் வந்தாலும் அதை சிக்கலாக பார்க்காமல் சம்பவமாக பார்ப்பதுதான்.

அது வரும்போது நமக்கு பெரிய தலை வலியாக தெரிவது நாம் சிக்கலாக, எதிர்பார்ப்பாக பார்ப்பதினால்தான். அதையே சம்பவமாக பார்த்தால் நமக்கு பாதிப்பே இராது.

இன்னும் ஒரு முக்கிய அம்சம் ஒவ்வொரு சோதனையும் ஒரு நல்ல பரிசை தம்மோடு மறைத்து கொண்டு வருகிறது.

எது எப்படி? எப்போது? என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம். அதுவரை பொறுமையாக, நிதானமாக, திறந்த மனதோடு செயல்படும் போதுதான் நம்மால் உணர முடியும். இப்போது ஒரு கேள்வி. – நீரில் ஒருவன் தவறி விழுந்து மூழ்கி விடுகிறான் என வைத்துக் கொள்வோம்.

அவனை எப்படி காப்பாற்றுவது?

 • நீருக்கு வெளியே இருந்து ஒரு உறுதியான கயிற்றைஉள்ளே போட்டோமானால் அவன் அதை இறுகப் பிடித்துக் கொள்வான்.
 • டக்கென அவனை வெளியே இழுத்துப் போட்டு காப்பாற்றி விடலாம்.
 • மாறாக நீருக்குள் நாமும் குதித்து அவனை பிடித்துக் கொண்டோம் என்றால் என்னாகும்?
 • ஒருவேளை அவன் நம்மைவிட வலிமை யானவன் என்றால் நம்மையும் சேர்த்து நீருக்கு அடியில் இழுத்து சென்று விடுவான்.

அதைப்போல எந்த ஒரு பிரச்சினையிலும் நாம் வெளியிலிருந்து செயல்பட்டால் (அதை நம்முடையதாக எடுத்து அதிலேயே மூழ்கி விடாமல்) அங்கு எளிதில் தீர்க்கின்ற வழி பிறக்கும்.

அதைத் தொடர்ந்து முன்னேற்றம் பெருகும். இதுதான் வாழ்வின் நியதி.

இதை இன்னும் விளக்கமாக சொன்னால் ஒரு விளையாட்டுப் போட்டியில் களத்தில் நுழைந்து விளையாடுபவனை விட களத்திற்கு வெளியே நின்று சொல்லித்தருகிறாரே அந்த பயிற்சியாளருக்கு எந்த பந்தை எப்படி அடித்தால் கோல் போட்டு வெற்றியாகலாம் என்பது நன்றாக தெரியும்.

வாழ்க்கை என்ற விளையாட்டு களத்திலும் நாம் பயிற்றுவிப்பவராக வெளியிலிருந்து பார்த்தால் சரியான வழி தெரியும். குறிக்கோளும் வெற்றியாகிவிடும்.

நம் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு புதிய மனிதரின் சந்திப்பு கிடைக்கலாம். ஒரு பாட்டின் வரிகளில் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் எழுத்தில் இருக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிடைக்கலாம். ஒருவரின் மேடைப்பேச்சில் தெரியலாம். உறக்கத்தின் போது கனவாக வரலாம். தூங்கி விழித்தால் தெளிவான சிந்தனையாக பெறலாம். இன்னும் எத்தனையோ வழிகளில் சரியான தீர்வுகள் கிடைக்கும்..

“உலகம் பிறந்ததும் எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்ந்ததும் எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக”

என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார். இந்த உலக படைப்புகள் எல்லாமே ஒன்றைஒன்று சார்ந்து ஒன்றுக்கு ஒன்று உதவுவதற்குத்தான். மரங்கள் சுவாசித்து ஆக்ஸிஜனை நமக்கு கொடுக்கிறது.

சூரியன் கதிரொளி தந்து நமது உடலில் வைட்டமின் டியை உருவாகச் செய்து உடலை வலிமையாக்குகிறது.

பகலைவிட்டு இரவு வேளை தினமும் வந்து நமக்கு ஒய்வையும் வலிமையையும் தருகிறது.

நிலத்தில் உள்ள நீரைக் குடித்து, குளித்து அனுபவித்து உயிர் வாழ்கிறோம்.

மிருகங்கள் நமக்கு உணவாகவும் துணை யாகவும், தொழிலாகவும் பல்வேறு விதங்களில் உதவுகின்றன.

இப்படி உலக படைப்புகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால் நமக்காக படைக்கப்பட்ட உண்மை தெளிவாக புரியும்.

இதுவரை நமக்குத் தோன்றிய பிரச்சினைகள் தான் – புதிய பாதைகளைக் காட்டி

 • புதிய செயல்களை செய்ய வைத்தன
 • புதிய முடிவுகளைத் தந்தன
 • புதிய மனநிலையை சிந்திக்க வைத்தன.
 • புதியவர்களை சந்திக்க வைத்தன.
 • புதியவற்றைகற்க உதவின.
 • செல்வங்களை  உருவாக்கின.
 • உடலை வலிமையாக்கின.

இன்னுமா பிரச்சினையில் சோர்ந்து கிடக்கிறீர்கள்.

அந்த போர்வையை உதறிவிட்டு எழுந்து பாருங்கள். ஆனந்த உலகம் விடிந்து நமக்காக காத்திருப்பது புலப்படும்!

சர்க்கரை நோயும் யோகா பயிற்சிகளும்

யோகா பயிற்சியின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலங்கள் கணையத்தை இயக்குவதற்கும், இன்சுலினையும், குளுக்கோகானையும் வெளிப் படுத்துவதற்கும் யோகா உதவும்.

யோகா செய்வதால் தன்னிச்சையாக செயல் படும் நரம்பு மண்டலங்களின் செயல்திறன் குறைந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைப் படுத்தப்படுகின்றது.

ஆகவே தினமும் ஆசனங்கள், பிராணாயாமம், சுதர்சனகிரியா ஆகியவற்றை செய்வதன் மூலம் கட்டுப் பாட்டிற்குள் வைக்கலாம்.

தியானம் செய்தால் மனம் அமைதி அடைந்து, மன உளைச்சல் குறைந்து புத்துணர்வு எற்படும். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற நோய்கள் குணமடைகின்றன.

தியானத்தின் பயனாக இரத்த நாள அடைப்புகள் அகற்றப்பட்டு இதய துடிப்பு குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்.

தியானம் செய்வதனால், உடலில் உள்ள கார்டிசால் அளவு அதிமாகாமல் மன உளைச்சல் குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது.

கணையத்தைப் பலப்படுத்தி இன்சுலின் அளவை அதிகப்படுத்துதல் தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இம்மாத கட்டுரைகள்

Advertisements