August, 2016

கருவிலிருந்து…

புதிய உயிரின் தொடக்கம்

கருவானது ஒரு குண்டூசியின் தலையைக் காட்டிலும் சிறியது. அது ஃபலோப்பியன் குழாய் வழியாக கர்ப்பப்பையை நோக்கி மிதந்து வருகிறது.

முதல் மாதம்:

கர்ப்பப்பையில் நுழைந்ததும், வளரும் கருவானது அதில் தன்னைத் தானே ஒட்டிக் கொள்கிறது.

முதுகெலும்பு, தண்டுவடம், நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் குடல்கள் உருவாகத் தொடங்குகின்றன.

4-5 வாரங்களில், கருவின் சிறிய இதயம் துடிக்கத் துவங்குகிறது.

நஞ்சுக்கொடி பணிபுரியத் தொடங்குகிறது.

இரண்டாம் மாதம்:

வாய் மற்றும் நாக்கு உட்பட முகத்தின் அம்சங்கள் தெரிகின்றன. கண்களில் விழித்திரை மற்றும் லென்ஸ்கள் இருக்கின்றன.

தாயிடமிருந்து தனிப்பட்டு அதற்கே சொந்தமான ஒரு ரத்தவகை அந்த குழந்தைக்கு இருக்கிறது. சிசு சுமார் அரை அங்குலம் நீளமாக இருக்கிறது.

மூன்றாம் மாதம்:

இதயம் ஏறக்குறைய முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

குரல் நாண்கள் முழுமையாகத் தோன்றி விட்டன. மற்றும் சிசுவானது அழ முடியும் மற்றும் சில நேரங்களில் அது அழுகிறது (மௌனமாக). மூளையானது முற்றிலுமாக உருவாகி விட்டது.

நான்காம் மாதம்:

தாயானவள் பிறக்கப் போகும் குழந்தை உதைப்பதையும் உள்ளுக்குள்ளேயே அசைவதையும் விரைவில் உணரக்கூடும்.

சிசுவானது 5.5. அங்குலங்கள் நீளமாக இருக்கிறது. சுமாராக 6 அவுன்சுகள் எடை இருக்கிறது. பாலியல் இன உறுப்புகள் தெரிகின்றன.

ஐந்தாம் மாதம்:

இந்த சிசு தனது தாயின் குரலைக் கேட்டு அடையாளம் காண முடியும்.

இந்த சிசு துரிதமாக வளர்ந்து வருகிறது.  சிசு 500 கிராமிற்கு மேல் எடை உள்ளது.

ஆறாம் மாதம்

வளர்ந்து வரும் நுரையீரல்களுக்குள் பனிக்குடத்து நீரை உள்ளிழுத்து சிசுவானது மூச்சு விடுவதைப் பயிற்சி செய்கிறது.

ஏழாம் மாதம்

தொப்புள் கொடியே தாயுடன் சிசுவிற்கான உயிர்த் தொடர்புக் குழல் ஆகும். தாயின் ரத்தத்தில் இருந்து, நஞ்சுக்கொடி வழியாகவும் தொப்புள் கொடி வழியாகவும் சிசுவிற்கு சத்துணவு செல்கிறது.

எட்டாம் மாதம்

சிசுவானது நாளின் 90-95% நேரம் உறங்குகிறது.

சிசுவானது தற்பொழுது 1.35 கிலோவுக்கு மேல் எடை இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சிசு தனது நிலையை மாற்றுகிறது. இன்று தலைகீழாக மறுநாள் தலை மேலாக என்று இருக்கிறது

ஒன்பதாம் மாதம்

சிசுவானது தற்பொழுது சுமார் ஏழரை பவுண்டுகள் எடை இருக்கிறது. தாயின் கருப்பையை விட்டு வெளி உலகிற்கு வரத் தயாராக இருக்கிறது.

சிசுவானது தாயின் அடி வயிற்றின் கீழ்ப்பகுதிக்கு இறங்கலாம். தனது தலையை தாயின் இடுப்புப் பகுதியில் கீழ் நோக்கி முட்டி நிற்கிறது. பிரசவத்திற்குத் தயாராக இருக்கிறது.

பிரசவத்தின் பொழுது நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையின் பக்கவாட்டிலிருந்து பிரியும். குழந்தை தனது முதல் மூச்சுக் காற்றைஉள்ளிழுக்கத் தொடங்கியதும் தொப்புள் கொடியானது தனது பணியை நிறுத்தி விடும். குழந்தை இப்பொழுது நுரையீரல்கள் மூலமாக சுவாசிக்கத் துவங்குகிறது.

கர்ப்பத்தின் போது

கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகு தான் கருப்பையுடன் கரு பதிவாகும். அப்போது சில அறிகுறிகள் தோன்றுகின்றன.

கர்ப்பத்தின் அறிகுறிகள்

மாதவிலக்கு வராமை, குமட்டல், இரவிலும் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், வெள்ளைப் படுதல், வாசனையைக் கண்டால் நெடி, மார்பகம் பெரிதாவது, மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல், மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு, புளி-களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசைப்படுதல்.

இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை செய்து உறுதி படுத்தவும்.

முதல் சில மாதங்களில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்றமுக்கிய உறுப்புகளும், கை கால்களும் உருவாகும். இக்கால கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைபழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கரு பாதிக்கப்படும்.

கர்ப்பம் தரிப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

புதிய சூழல்களில் பணியாற்றுதல், அதிக கவலை, பதட்டம் போன்றமனநிலைகளில் இருத்தல். குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நாள்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்பு தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாத விலக்கு தள்ளிப் போகலாம்.

மசக்கை

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம் இயல்புக்கு மாறான உடற்சோர்வு போன்றவை உண்டாகும்.

முதன்முறையாக கருத்தரிக்கும் பல பெண்களுக்கு மசக்கைப் பிரச்சனை வரும். சிலருக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்கு பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும்.

எதைச்சாப்பிட்டாலும் நெஞ்சின் மீது இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டலும் வாந்தியும் வந்துவிடும். முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகமாக சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும் வாந்தியும் தோன்றுகின்றன.

சிறுநீர்ப்பாதை தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப் போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்றஉணர்வு ஏற்படும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப் பையையும் அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப்பிரச்சனைகள் குறைந்து மறைந்து விடும்.

முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பக காம்புகள் நீண்டு குமிழ்களுடன் பருத்துக் காணப்படும்.

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் மிகவும் கவலை மற்றும் தூக்கம் நிறைந்தவர் களாகவும் எதையோ இழந்தவர்களைப் போலவே காணப்படுவார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி உண்டாகும். இந்த காலத்தில் உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையக் கூடும்.

கருவானது வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல் 20வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி அதன் மிருது தன்மை ஆகியவற்றைக் கொண்டு, மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதிசெய்ய முடியும்.

சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றின் மூலம் எளிதில் கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட் ரோபின் ஆன்டிசீரம் எனப்படும் இரசாயனப் பொருள் இருக்கும்.

கருவின் துடிப்பு

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே பெண் கருவுற்றவரா இல்லையா என்பதை துல்லியமாக ஸ்கேன் முறையில் கூறிவிடலாம்.  கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருக்கலைப்பு

கர்ப்பம் வேண்டாம் என்று கருவைக் களைப்பதால் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படலாம். கருப்பையில் இரத்தக்கட்டிகள் ஏற்படக்கூடும்.

கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ளஇழைகளிலும் கிருமிபாதிப்பு ஏற்படலாம்.

ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக் கலைப்பு செய்ய வேண்டி வரும்.

கருப்பை வாயில் கிழிந்து போகலாம். ஆனால் இதை தையல்கள் மூலம் சரி செய்துவிடலாம்.

கருப்பை சுருங்காமல் அதீத இரத்தபோக்கு ஏற்படலாம்.

கருக்கலைப்பு முழுமையாக செய்யப் பட்டிருக்கிறதா என்பதை 14 நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது. இல்லையேல் கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.

அதிகபடியான வயிற்றுவலி காய்ச்சல் ஏற்பட்டால் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டதின் அறிகுறியாகும்.

மாதவிடாய் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு. (தாங்க முடியாத அதிகப்படியான உதிரப்போக்கு இருத்தல்).

கருக்கலைப்பு செய்துகொண்ட பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது போன்றஅறிகுறி சிலருக்கு ஏற்படலாம்.

கர்ப்பிணிகள் கர்ப்பத்தின்போது வாகனங்களை ஓட்டாமலிருப்பது நல்லது. அதிலும் குறிப்பாக முதல் மூன்று மாதங்கள் கடைசி ஆறு வாரங்கள் ஓட்டாமல் இருப்பது மிகவும் நல்லது.

கர்ப்பிணி குங்குமப்பூ சாப்பிடலாமா?

குழந்தை சிவப்பாக இருக்க குங்குமப்பூ சாப்பிட வேண்டும் என்பது உண்மையல்ல.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் வரை  தொலைதூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மற்றும் குழந்தை பிறப்பதற்கு கடைசி ஆறு வாரங்கள் போன்றநேரங்களில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. சுகப்பிரசவம் என்றால் முதல் ஆறு வாரங்களில் கர்ப்பப்பை சுருங்கும். சிசேரியன் என்றால் இரண்டு மாதங்கள் வரை ஆகும்.

ஆறு வாரங்கள் கழித்து பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வது நல்லது. காரணம் ஒரு தாய் குழந்தைக்கு பால் தருவதால் மட்டுமே கர்ப்பம் தரிக்காமல் இருப்பதில்லை.

தீட்டு வராமலேகூட கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான வழிமுறை களுடன் உடலுறவு கொள்வது நல்லது.

முதல் குழந்தை சிசேரியன் என்றால்    இரண்டாவதும் சிசேரியன் தேவைப்படலாம். தாய், சேய் இருவர் நலத்தையும் கருத்தில் கொண்டுதான் பிரசவம் நிர்ணயிக்கப்படும்.

குழந்தை நல்ல நிலையில் இருந்து, தாய்க்கு ஆபத்து என்றாலும், காலம் தாழ்த்தாமல் அறுவை சிகிச்சை தான் பரிந்துரைக்கப்படும். இரண்டாவது குழந்தை சுகமாக பிறக்கவும் வாய்ப்புள்ளது.

வயிற்றில் இருக்கும்போது, பிரசவ வலியின்போது குழந்தை மலம் போய்விட்டாலோ, குழந்தைக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருந்தாலோ குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பின்னர் சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் முதலில் சாப்பாடு நன்றாகச் சாப்பிட வேண்டும். பால், தயிர், கால்சியம் நிறைந்த உணவு வகைகள் நிறைய சாப்பிட வேண்டும்.

ஸ்கேன் பரிசோதனை தேவையா?

தாயின் உடல் நலத்திற்காகவும் குழந்தையின் சரியான வளர்ச்சிக்காவும் ஸ்கேன் பரிசோதனை அவசியம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் வயிற்றுக்குள் மறைந்திருக்கும் குழந்தையின் உடல் மர்மங்களைக் கூட கண்டுபிடிக்க முடிகிறது.

முதல் மூன்று மாத பரிசோதனைகள்:

கருத்தரித்த 11 முதல் 14 வது வாரங்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். இதய நோய்க்கான அறிகுறிகள் மற்றும் குரோமோசோம் பாதிப்பு அறிகுறிகளை அறியலாம்.

மூன்று ஆய்வு பரிசோதனைகள்:

கருத்தரித்த 15-21 வாரங்களுக்குள் செய்யவேண்டும்.

குழந்தை பெறுவதற்கான ஆய்வுகள்:

சில நோய்கள் மற்றும் பிறவிக் குறைபாடுகள் மரபுக் கோளாறினால் வருவது. பெற்றோர்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் இருந்தால் அது அவர்களுடைய குழந்தை களுக்கு வரலாம். பெற்றோர்களுக்கு மரபு கோளாறினால் சில பிரச்சினைகள் குழந்தைக்கும் வருமா என்பதை அறிய முடியும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?

11-லிருந்து 14 வாரங்களில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை.

 • கருவின் வயதை உறுதிப்படுத்த.
 • கருப்பையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதை உறுதிப்படுத்த.
 • குழந்தையின் கழுத்துப் பகுதியின் மேல் இருக்கும் தோலின் தடிமனை அளவிடுதல்.
 • இருபதிலிருந்து 22 வாரங்களில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை:
 • கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகளையும் மற்றும் அதன் பிறவிக் குறைபாடுகளையும் அறிவதற்கு.
 • கருவின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு.

ஒரு சில பிறவிக் குறைபாடுகளை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.

குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாகவும், இதயத்தில் குறைபாடு போன்ற சிலவித       குறைபாடுகள் இருக்கலாம்.

அதற்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம்.

மசக்கையை சரிசெய்வது எப்படி?

வாந்தி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களைத் தவிர்த்தல்.

அடிக்கடி பழங்களுடன் சிறிய அளவு ஸ்நாக்ஸ் உணவை சாப்பிடுதல்.

அடிக்கடி தண்ணீர் குடித்தல், நல்ல தண்ணீர் பாட்டில் பக்கத்திலும், பையிலும் எப்போதும் இருக்கட்டும்.

காலையை மெதுவாகத் தொடங்குதல் அவசியம். பேறு காலத்தில் காலை நேரத்தில் பரபரப்பாக இருக்கக் கூடாது.

தேவையான அளவு உறங்குதல் அவசியம். சோர்வு அதிகமாக இருந்தால் சிரமங்கள் அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்க ஒரே வழி நல்ல உறக்கம்.

அடிக்கடி சின்ன ஓய்வு நேரங்களை ஏற்படுத்திக் கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

நாளின் வேலை முடிந்தவுடன் நன்கு ஓய்வெடுக்கவும். நீண்ட பயணம், சுமைகளைத் தூக்குதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

நடைப்பயிற்சியை காலை மற்றும் மாலை நேரங்களில் செய்யலாம்.

சோர்வான உணர்வு இருக்கிறது என்றால் தயங்காமல் ஓய்வு எடுத்தால் சரியாகும்.

உட்காரும் நாற்காலியின் பின்னால் ஒரு தலையணை வைத்துக்கொண்டால் முதுகுக்கு வசதியையும், பாதுகாப்பையும் உருவாக்கிக் கொடுக்கும்.

நீண்டநேரம் நிற்கக் கூடாது. இதனால் கால்களில் இரத்தம் சேர்ந்துவிடும். வலியையும் மயக்கத்தையும் இது உருவாக்கலாம்.

குனியும்போது இடுப்பை வளைக்காமல் முட்டிகளை மடக்கிக் குனிவது சரி.

சிரிப்பு, உற்சாகம், நேர்மறை எண்ணங்கள் மூன்றுமே பேறுகாலத்தின் மிகச்சிறந்த மருந்துகள். சிறுசிறு சச்சரவுகளையும், பிரச்சனைகளையும் மனம் விட்டு பேசி தீர்த்து விட்டால் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

எந்த எந்த வழிகளில் தளர்வு நிலையை வைத்திருக்க முடியுமோ அவற்றில் முயற்சித்து தளர்வாக இருக்கவும். பேறுகால யோகா, மூச்சுப்பயிற்சி இதற்கு உதவும்.

சிசேரியன் அறுவை சிகிச்சை தேவையா?

பிரசவ வலி ஆரம்பிக்கும் போதே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது.

முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், இரண்டாம் முறையும் சிசேரியனுக்கு செல்வது பொதுவாக பாதுகாப் பானது. காரணம் பிரசவ வலியினால் கர்ப்பப்பை கிழிந்து போக வாய்ப்பிருப்பதைத் தவிர்ப்பது தான்.

குழந்தையின் தலை பெரிதாக இருந்து தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருக்கின்ற சூழ்நிலையில்.

பனிக்குடம் உடைந்து பிரசவ வலி அதிகமாக இருந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால், சிசேரியன் தேவை.

ஏற்கனவே சிலமுறை குழந்தை இறந்து பிறந்தவர்களுக்கு நிறைமாதத்திற்கு முன்பே சிசேரியன் தேவைப்படும்.

கர்ப்பப்பை அடி கீழே இறங்கி இருந்து அதை சரி செய்ய ஆபரேஷன் செய்திருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

கருப்பை வாயில் புற்றுநோய் இருந்தால்.

தாய்க்கு அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருக்குமானால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க.

நிறைமாதத்திற்குப் பிறகும் வலி வராத நிலையில்.

நஞ்சுக்கொடி பிரசவப் பாதையை அடைத்திருந்தால்

கருப்பையில் ஏதாவது கட்டி இருந்தால் சிசேரியன் தேவைப்படும்.

வயது முதிர்ந்த பெண்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து சிசேரியன் தேவைப் படலாம்.

யோனிக்குழாயின் அமைப்பு சீரற்று இருந்தால் சிசேரியன் தேவைப்படலாம்.

குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தால் சிசேரியன் தேவைப்படலாம்.

செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தைக்கு சிசேரியன் தான் பாதுகாப்பானது.

சிசேரியன் எப்படி செய்யப்படுகிறது?

சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகவும் மருந்து கொடுக்கிறார்கள்.

குறிப்பிட்ட இடம் மட்டும் மயக்க மருந்து தரப்படும் போது, அந்த இடம் மட்டும் மரத்துப் போய் வலி தெரியாது. ஆனால் நினைவிருக்கும். பொதுவான மயக்கத்தால் தசைகள் இளகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது.

கர்ப்பபையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்கு கீழே அடிவயிற்றை திறந்து பிரசவப்பை எல்லாவற்றையும் திறந்து நஞ்சுக் கொடியையும் குழந்தையையும் எடுத்த பின்னர் திறக்கப்பட்ட கர்ப்பபையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவர்.

நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். இது தாயின் உடல் நிலையைப் பொறுத்தது. மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல வழக்கமான எளிய பணிகளைத் துவக்கலாம்.

அறுவை சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. புரதச்சத்து கொஞ்சம் அதிகமாக இருக்கவும். நெய் போன்ற கொழுப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்.

ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அடி வயிற்றுத் தசைகளுக்கான உடற்பயிற்சிகளைத் துவக்கலாம். சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப் பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அமைகின்றன.

மகப்பேறு எளிதாக இருக்க..

கருவுற்ற பெண்கள் எளிதில் செரிக்காத உணவுகள், அதிக உப்பு, காரம், மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பட்டினி இருக்கக் கூடாது. மோர், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

சிறுநீரைப் பெருக்கக்கூடிய உணவுகளை உண்ணலாம். உடல் வீக்கம் ஏற்படாது.

ஈரமற்ற தூய உடைகளை அணியவேண்டும். உடைகளை இறுக்கமாக அணியக்கூடாது.

மல்லாந்து படுக்காமல், இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நல்லது. நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். குளிர்ந்த இடத்திலும் கரடுமுரடான இடங்களிலும் படுக்கக்கூடாது.

வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தினமும் 10 -12 தம்ளர்நீர் அருந்தினால் நல்லது.

கனத்த சுமைகளைத் தூக்கக் கூடாது.

வாகனத்தில் அதிகத்தொலைவு பயணம் செய்வதை தவிர்க்கவும். அதற்காக ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.

 கர்ப்பத்தின் பிறகு முடி கொட்டுமா?

நாற்பது அல்லது ஐம்பது சதவீதம் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு முடி கொட்டுகிறது.

பொதுவாக சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. சில சமயங்களில் பிரச்சனைகள் வருவதுண்டு. ஆனால் எல்லாவகை அறுவை சிகிச்சைகளிலும் அந்த சிக்கல் உண்டு. ஏதாவது  ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வயிற்றில் கருப்பையை திறந்த இடம் மிகப்பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதனால் சிலருக்கு குடலிறக்கம் ஏற்படும்.

ஒரு பிரசவம் சிசேரியன் என்பதால் அடுத்த  பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்றகவலை வேண்டியதில்லை. அடுத்தபிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

பிரசவம் முடிந்து ஒரு மாதத்திலிருந்து ஐந்து மாதங்களுக்குள் இது நடக்கும். கர்ப்ப காலத்தின்போது ஹார்மோன் அளவுகள் உயர்ந்து அன்றாட முடி உதிர்தலைத் தடுத்து விடுகிறது.

அதனால் மீண்டும் ஹார்மோன் அளவு இயல்பு நிலைக்கு வரும்போது முடிகள் ஒரே நேரத்தில் நிறைய கொட்ட ஆரம்பிக்கின்றன.

இதற்கென்று சிகிச்சை கிடையாது. வைட்டமின் சத்துக்கள்தான் அதிகம் தேவை. இதற்காக நிறைய பழங்களையும் காய்கறிகளையும் இரும்புச் சத்து கொண்ட விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதும் உபயோகமாக இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்காவிட்டால்?

தாய்ப்பால் எல்லா சத்துகளும் உடைய ஒரு   முழுமையான உணவாகும். தாய்ப்பாலில் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளன.

பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் தரமுடியாவிட்டால் அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் பால் சப்புவதற்கு ஆவலாகவும் இருக்கும். எனவே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது எளிதாகிறது. பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தை தூங்கிவிடும். அதன்பின் கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும்.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பாலை சீம்பால் என்பர். இது மஞ்சள் நிறத்தில் கட்டியாக இருக்கும். இதில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் முழுமையாக உள்ளது.

முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் குழந்தைகளுக்குப் போதுமானது. குளுக்கோஸ், தேன் போன்றவைகள் கொடுப்பதால் குழந்தைக்கு தொற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பால் கொடுக்கும் முறை

தாய் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து அறைக்கு வந்தவுடன் மயக்கம் தெளிந்த நிலையில் தாய் படுக்கையில் படுத்த நிலையிலேயே செவிலியர் / உறவினர்கள் குழந்தையை மார்போடு அணைத்து தாய்ப்பால் கொடுக்க உதவி செய்ய வேண்டும்.

அதிக பட்சம் 2 மணி நேரத்திற்குள் கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்ப் பால் கொடுத்தால் வேறு எந்த வித உணவும் பாலும் கொடுக்கத் தேவையில்லை.

கிரேப் வாட்டர் ஜீரணத்திற்காகக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு மூட நம்பிக்கை. தாய்ப் பால் மிகவும் எளிதில் ஜீரணமாகின்ற உணவாகும். ஆகவே கிரேப்வாட்டர் கொடுப்பதால் எந்த பயனும் கிடையாது. மேலும் அதைக் கொடுப்பதால் பாக்டீரியா தொற்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு முறையாவது தாய்ப்பால் தரவேண்டும். அழும்போதெல்லாம் மற்றும் இரவு பகல் எல்லா நேரங்களிலும் தரவேண்டும்.

இரவில் குறைந்தது 2 முறையாவது தரவேண்டும். குழந்தை 4 மணி நேரத்திற்கு மேல் தூங்கிக் கொண்டிருந்தால் அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டும்.

குழந்தை தினமும் ஆறு முறையாவது சாதாரண நிறத்தில் சிறுநீர் கழித்தால் தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை மாதா மாதம் சுமார் 300 கிராம் எடை கூடினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் சரியான அளவு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தாய் நோய்வாய்ப்பட்டிருந்தால் மற்றும் மருந்துகள் சாப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

மருந்துவரின் ஆலோசனைப்படி தேவைப் பட்டால் மட்டுமே பாலூட்டுவதைத் தவிர்க்கலாம்.

குழந்தைக்கு பேதி ஏற்படும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

தாய்ப்பால் குழந்தையை பேதியிலிருந்து காப்பாற்றும்.

குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால்?

முதலில் தாய்ப்பால் கிடைக்கிறதா என சரி பார்க்க வேண்டும்.

சரியான அளவில் (மாதம் 300 கி) உடல் எடை கூடி உள்ளதா என சரிபார்க்க     வேண்டும்.

தினமும் 6 முறையாவது சிறுநீர் கழிக்கிறதா என சரிபார்க்க வேண்டும்.

சரியான அளவு கிடைக்கவில்லை எனில் கீழ்க்கண்டவற்றை சரிபார்க்க வேண்டும்.

 • குறைந்தது 8 முறையாவது சப்புகிறதா?
 • பகல், இரவு எல்லா நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறதா?
 • பாலோ உணவோ கொடுக்கப்படுகிறதா?
 • குழந்தை தாய்ப்பாலை குடிக்கும்போது சரியான நிலையில் சப்பும் நிலை உள்ளதா?

மேற்கூறியவற்றில் பிரச்சனை    இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்யவேண்டும்?

குழந்தை எவ்வளவு சப்புகிறதோ அந்த அளவு ஊறும். ஆகவே குழந்தையை அதிக அளவு சப்பவைத்தால் அதிக அளவு பால் ஊறும்.

குழந்தை பசிக்காக மட்டுமே அழுவதில்ல. வேறு பல காரணங்களுக்காகவும் அழுகின்றது.

புட்டிப்பால் கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தைக்கு சப்புவதில் குழப்பம் ஏற்பட்டு சிறிது நாளில் தாய்ப்பால் குடிப்பதை படிப்படியாக குறைத்து நிறுத்திவிடும்.

புட்டிப்பால் கொடுப்பதால் கிருமி தொற்றும், பேதி, நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உபயோகிக்கலாம். குழந்தைக்கு உபயோகிக்கின்ற அனைத்து பாத்திரங்களையும் கொதிக்க வைத்தால் கிருமிகளின் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

ஊனமில்லா குழந்தையைப் பெற

இயன்றவரை நேரடி சொந்தங்களில் திருமணம் செய்வதைத் தவிர்த்தல்.

இருபது வயதுக்கு முன் திருமணம் செய்யாதிருத்தல்.

குழந்தை பெறசரியான வயது 21 முதல் 35 வரை.

ஒரே வகை பரம்பரை நோய்கள் உள்ள இரு குடும்பங்கள் திருமண பந்தங்களைச் செய்யாதிருத்தல்.

இரத்த வகையில் பெண் ஆர்.எச். நெகட்டிவாக  இருந்தால், மாப்பிள்ளையும் நெகட்டிவாக தேர்ந்தெடுத்தல் (அப்படியே மாறுபட்டிருந்தாலும் தற்போது சிகிச்சை மூலம் சிக்கல்களை சரிபடுத்தலாம்.)

திருமணத்திற்கு முன்பும் குழந்தை பெறும் வயதிலும் கதிர்வீச்சு துறையைத் தவிர்த்தல்.

உடலை சுகாதார முறைகளில் பராமரித்தல்.

பெண்கள் குழந்தை பேறு பெறும் வயது வரை கதிரியக்க துறைகளில் வேலை செய்வதைத் தவிர்த்தல் நன்று.

பாரம்பரிய நோய்களுள்ள குடும்பத்திலுள்ள வர்கள், கர்ப்பத்திற்கு முன் மருத்துவ ஆலோசனைப் பெற   வேண்டும்.

காசநோய் மற்றும் கடுமையான காய்ச்சல், தொடர் சிகிச்சைநோய் போன்றவற்றின்போது கர்ப்பத்தைத் தவிர்த்தல் நல்லது.

இருபது வயதிற்கு முன்பும் 40 வயதிற்கு பின்பும் குழந்தை பெறாதிருத்தல்.

இரு குழந்தைகளுக்கிடையில் குறைந்த பட்சமாக மூன்று ஆண்டுகள் இடைவெளி விடுதல்.

சர்க்கரை நோயுள்ளவர்கள், அதை முழுமையாக கட்டுப்படுத்துதல்.

வலிப்பு நோயுள்ளவர்களுக்கு குழந்தை பெறும் காலத்தில் சிகிச்சையை மாற்றியமைத்தல்.

நீண்டகால நோய்களிருந்தால் கர்ப்பமாகு முன் மருத்துவரை ஆலோசித்தல்.

தைராய்டு குறைபாடுகளைப் பரிசோதித்தல்.

சத்தான உணவுகளை உண்ணுதல், போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொள்ளுதல்.

சுயமாக மருந்துகளை சாப்பிடாதிருத்தல்.

திருமணத்திற்குப் பின் மாதவிலக்கு தள்ளிப்போனால் உடனடியாக கர்ப்பம் உள்ளதா என்பதை பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் உடல் எடையும் உயரமும் மூளை வளர்ச்சியும் சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்?

காலம்

(மாத, வயது முடிவில்)

அளவு

(கிலோ கிராமில்)

பிறந்த குழந்தை

5 மாதம்

12 மாதம்

இரண்டு வயது

மூன்று வயது

ஐந்து வயது

ஏழு வயது

பத்து வயது

பன்னிரண்டு வயது

3

6

9

12

15

18

21

30

36

இந்திய குழந்தைகள் இருக்க வேண்டிய சராசரி உயரம்:

 • பிறந்தவுடன் 50 செ.மீ
 • 12 மாத முடிவில் 75 செ.மீ
 • 36 மாத முடிவில் 99 செ.மீ
 • 12 வயது முடிவில் 133 செ.மீ

கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.

பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும்.

பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.

ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும்.

தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும்.

நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.

குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.

பாலுடன் பிற உணவுகள்

தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.

ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.

ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்றையும் ஊட்டலாம். பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம். பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சுகாதாரம்

கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.

புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.

குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.

குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக்கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.

குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.

குழந்தையின் அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.

இம்மாத கட்டுரைகள்

Advertisements