டாக்டர் S.சந்திரசேகரன் M.D

எமதர்மன் இப்போது

இவ்வுலகில் வந்து சிரமப்படுவதேயில்லை

எய்ட்ஸ் கிருமிகள் மூலம்

எளிதில் உயிர்களை

எடுத்துச் சென்றுவிடுகிறான்.

தகாத சிற்றின்பங்கள் துய்க்கும் போதும்

தாம் தாழ்ந்த போதையில் மூழ்கும் போதும்

சோதனை செய்யாத இரத்தத்தின் மூலமும்

சுத்தப்படுத்தாத ஊசிகள் மூலமும்

எளிதில் நுழைந்து விடுகின்றன

எய்ட்ஸ் நோய்க் கிருமிகள்

உடலில் புகுந்தவுடன்

உடலின் காவல் துறையான

இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்

வேகத்தை இழக்கச் செய்வதுடன்

விரைவில் அழித்தும் விடுகின்றன.

நாட்டின் காவல் துறையைக்

கட்டிப் போட்டால்

கொடியவர்கள் மட்டுமல்ல

சாதாரணமானவர்களும்

ஆணவமாக எப்படி ஆடுவார்களோ…

அதே நிலைதான் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும்

கொடிய கிருமிகள் மட்டுமல்ல

சாதாரணமாக உடலில் உள்ள

பாதுகாப்புக் கிருமிகளும் கூட

பயங்கரமாக ஆட ஆரம்பித்துவிடும்

எதிர்ப்புச் சக்தி குறைவதால்

எந்த நோய் வந்தாலும், சாவின்

எல்லை வரை கொண்டு செல்லும்

இதைக் கட்டுப்படுத்துவது

எளிதான காரியமல்ல, மருத்துவர்களுக்கு.

காய்ச்சலா?

கடுமையான இருமலா?

இடைவெளி இல்லாமல் தொடரும்

வயிற்றுப்போக்கா?

வந்து கொண்டேயிருக்கும்

கண்டு பிடிப்பதும் கடினம்

கட்டுப்படுத்துவதும் கடினம்.

தன்னை மட்டுமல்ல

தன்னைக் கைப்பிடித்தவர்களை மட்டுமல்ல

தவறே நினைக்காத தன் குழந்தைகளையும்

தாக்கும், எய்ட்ஸ் என்றநோயை

தயவு செய்து தடுத்திடுங்கள்

தடுப்பு முறைகளை

தவறாமல் கைப்பிடித்து.

இந்த புத்தகத்தை இ வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்