மாறிவரும் உணவு பழக்கங்களினால், வயிற்றுத் தொல்லைகள் எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம். அப்படியிருக்கையில் கோடையில் என்ன விசேஷம்? வாட்டும் வெயில் ஒருபுறம் இருக்க, சுமார் 8 முதல் 10 மணி வரை மின்சார சப்ளை நிறுத்தப்படுவதால் குளிர் வசதி மற்றும் பதப்படுத்தும் அநேக உணவு பொருட்கள் சீக்கிரமே கெட, அவற்றை உண்டு நமது வயிறும் கெட, கோடையில் அதிக வாய்ப்புண்டு. குறிப்பாக மாமிச உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கோடையில் ஏற்படுகின்ற தொல்லைகள் யாவை?

நீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், மாந்தம், வயிற்றுப்புண் போன்றவை கோடையில் தாக்கும். குறிப்பாக அதிகமாக வெளி வேலைகள் நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள் உணவு, மற்றும் தண்ணீர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீர்க்கடுப்புக்கு முக்கிய காரணம், உடலின் தண்ணீர் பற்றாக் குறைதான்.
கோடையில் அதிகமாக வியர்ப்பதால் நாம் உட்கொள்ளும் தண்ணீர், வியர்வையின் அளவிற்கேற்ப அதிகமாக தேவை. சிறுநீரகம் நன்றாக இயங்கி சிறுநீர் நன்றாக சென்றால்தான் உடலுக்கு நல்லது. கோடையில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது அதிகமாகலாம். ஆனால் குறையக்கூடாது.சிலர் கூறுவார்கள் “நான் தண்ணீர் அருந்துவதில்லை. ஆனால் காபி, டீ, கோலா, பழரசம் என்றும் பல்வேறு விதமாக தண்ணீரை சேர்க்கிறேன். இது போதாதா”? என்று.
தண்ணீரை வெறும் தண்ணீராகத்தான் அருந்த வேண்டும். இதை மற்ற பொருட்களுடன் சேர்த்து அருந்துவதால் தண்ணீர் அருந்திய பயன் தராது. கோடையில் அதிகமாக தண்ணீரைப் பருகவும். தாதுக்கள் அதிகமாக உள்ள இளநீரை அருந்தலாம்.

கோடையில் வயிற்றுப் போக்கு ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மாமிச உணவுகளை விரும்பி சாப்பிடு பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீன் இறால் போன்றவைகள் சீக்கிரமே கெட்டு விடும். பெரிய நிறுவனங்கள் சிறப்பாக குளிர் தன்மைகொண்ட Deep Freezer இவற்றை பதப்படுத்தி, குளிர் பெட்டிகளில் இவற்றை வைத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்புவார்கள். ஆனால் இவற்றை வாங்கி சமைக்கும் இடங்களில். இம்மாதிரியான சிறப்பான குளிர் செய்யும் வசதிகள் இருக்காது. சாதாரண பிரிஜ்ஜில் இவற்றை வைக்கும் பொழுது மின்சார தட்டுப் பாட்டால் இவை குளிராமல் கெட வாய்ப்புண்டு. இதுபோலவேதான் மாமிச உணவுகள், முட்டை போன்றவை கெடவும் வாய்ப்பு உண்டு. கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவ்வாறே கெடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

வயிற்றுப்போக்கிற்கு முக்கிய காரணம்,. இவ்வாறு நாம் சாப்பிடும் பொருட்கள் கிருமி களினால் பாதிக்கப்படுவதுதான். E coli போன்ற விஷ பாக்டீரியாக்கள் கெட்டுப்போகும் உணவுகளிலே படிந்து, அவை நம் வயிற்றைத் தாக்குவதால், வயிற்றுக்கடுப்பு, வயிற்று நோய் உண்டாகும். அடிக்கடி இவ்வாறு நடக்கும் பொழுது அவை வயிற்றுப் புண்ணாகவும் மாறுகின்றன. மருந்து, மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்து, குணம் பெறலாம். குணம் பெற்ற பிறகு, உணவுப்பழக்க வழக்கங்களை மாறுதல் செய்யவும். இல்லா விட்டால் சாதாரண வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசத் தையும் வயிறு புண்களையும் உண்டாக்கி நீடித்த நோய்களாகி விடும்.

வயிறு உப்புசம், மற்றும் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கவும், வந்தபிறகு அவை முழு சுகம் அடையவும், உணவுப்பழக்கத்தில் மாறுதல்கள் தேவை. . நாம் உண்ணும் உணவு நாம் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம், மறுபடியும் மறுபடியுமாக செய்யும் பழக்கம். நமது வழக்கமாகி விடுகிறது. ஆகவே உங்கள் உணவு பழக்க வழக்கங்களை மறுபடியுமாக ஆரய்ந்து மாறுதல் செய்யுங்கள். உணவு மாறுதல்களை செய்யாமல், மருந்துகளும், மாத்திரைகளும் சாப்பிடுவதால் மட்டும் பலன் அளிக்காது.
வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து வெளியேறி முற்றும் குணமடைய, வயிற்று உறுப்புக்களை முதலில் அறிந்து, அவற்றின் செயல் முறைகளையும் தெரிவது அவசியம்.

நாம் உண்ணும் உணவு, வயிற்றிலிருந்து நேராக இரைப்பையைச் சென்று அடைகிறது. உடனடியாக ஜீரணிக்கும் அரிசி போன்ற சில உணவுகள் இரைப்பையிலேயே ஜீரணித்தாலும், பெருமளவு நமது உணவு சுமார் 20 அடி கொண்ட சிறுகுடலில்தான் ஜீரணம் ஆகிறது. உணவு ஜீரணிக்க கல்லீரல் பல்வேறு ஜீரண திரவங்களை கொடுக்கிறது. ஜீரணித்த உணவு உடலின் ரத்தத்தில் சக்தியாக மாற்றப்பட்டு உடலின் பல பாகங்களை அடைகிறது. கழிவுப் பொருட்கள், சிறுநீரகம் வழியாகவும், மலப் பாதையின் வழியாகவும், வெளியேற்றப்படுகிறது.

வாயில் போடப்படும் உணவு, பற்களால் அரைக்கப்படுகிறது. உணவை பற்களினால் அரைக்காமல் அவசர அவசரமாக விழுங்கும் பொழுது, அரைபடாத உணவை வயிற்றுக்குள் அனுப்புகிறோம். பற்களினால் உணவு அரைபடா விட்டால், வேறெங்கும் உணவு அரைபடாது. அரைக்கப் படாத உணவு ஜீரணம் ஆவது கடினம்.

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு முதல் முக்கிய காரணம் அவசர அவசரமாக சாப்பிடுவதுதான். பற்களை பயன்படுத்தி, உணவை அரைப்பது முதல் முக்கிய செயல் உணவு உண்ணும் பொழுது அவசரம் வேண்டாம். நிதானம் தேவை. ஞாபகம் இருக்கட்டும். பற்கள் வாயில் மாத்திரம்தான் இருக்கிறது. வயிற்றில் இல்லை!! ஆகவே உணவை பற்களினால் அரைப்பதற்கு தேவையான அளவு நேரம் ஒதுக்கவும்.
பற்களினால் அரைக்கப் பட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை (ள்ற்ர்ம்ஹஸ்ரீட்) அடைகிறது. பொது வாக உடனடியாக ஜீரணிக்கப் படும் சில உணவு வகைகள் இரைப்பையிலேயே ஜீரணிக்கப்பட்டு, இரத்தத்துடன் கலந்து, சக்தியாக மாறுகிறது. குறிப்பாக அரிசி உணவுகள் இவ்வாறு உடனடியாக ஜீரணிக்கப் படும்.
ஆனால் பெரும்பானலான உணவுகள் இரைப்பையை கடந்து சிறுகுடலில்தான் ஜீரணம் ஆகின்றன.
வயிற்றுப்புண் மற்றும் GERD என்று அழைக்கப்படும் நெஞ்சுகரிப்பு நோய் முக்கியமானவை.
மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும், மற்றும் அநேக காரணங்களினாலும்GERD என்று அழைக்கப்படும் நோய் இப்பொழுது அதிகமாக காணப்படுகிறது.

உணவு செல்வது ஒருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் இரைப்பையில் உள்ள உணவோ, அல்லது இந்த உணவை செரிக்க உதவும் அமிலங்களோ, மேல் புறமாக வந்த உணவு குழாயில் (esophagus)) வருகின்றன. இவ்வாறு உணவுக்குழாய்களில் வரும் அமிலமோ உணவோ உணவுக் குழாயை கெடுத்து, ஏப்பம், மார்பு வலி, மார்பு எரிச்சல், மற்றும் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும். உணவு மாற்றங்களி னாலும், பழக்க வழக்கங்களை மாற்றுவதாலும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

நாம் உண்ணும் உணவுகளில் ஒருவகை, வயிற்றை கெடுப்பவை. இரண்டாம் வகை வயிற்றுக்கு அதிகமாக துன்பம் விளைவிக்காதவை, இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையம் போன்ற உறுப்புக்களை பேணிப் பாதுகாக்க உதவும் உணவுகளை சாப்பிட்டால் வயிறு ஒரு பிரச்சினையாக மாறாது. ஆனால், நாம் விரும்பி சாப்பிடும் அநேக உணவுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வயிற்றின் பல்வேறு பாகங்களைக் கெடுக்கும் தன்மை வாய்ந்தவை. அதிகமான காரம், பச்சைமிளகாய், அதிகமான காபி போன்றவை வயிற்றைக் கெடுக்கும் தன்மை வாய்ந்தவை. மதுபானம் மற்றும் சிகரெட் வயிற்றைக் கெடுக்கும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, அதிகமான ஏப்பம், மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளையும், வாயுவை உருவாக்கும் உணவுப் பொருட்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண், வயிற்று உப்புசம் இவை இரண்டும் அநேக மக்களை வாட்டி வதைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளை அறிந்து கொண்டு மாற்ற வேண்டியவற்றை மாற்றினால்தான் வயிறு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபட முடியும்.
நாம் உண்ணும் உணவு மூன்று முக்கிய சக்திகளைக் கொண்டுள்ளது. கார்போஹைடிரேட் எனும் மாவுசக்தி, புரோட்டின் எனும் புரதச்சக்தி மற்றும் கொழுப்பு சக்தி. பெரும்பாலான உணவுகள் சிறு குடலில்தான் ஜீரணிக்கப்பட்டு, செரிக்கப்படும். ஆனால், இவற்றை ஜீரணிக்க கல்லீரல் முக்கிய திரவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

இந்த மூன்று சக்திகளில் புரோட்டின் சக்தி, அம்மோனியா எனும் வாயுவை உருவாக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக கொண்டைக் கடலை, நிலக்கடலை, பருப்பு வகைகள் அம்மோனியவை உருவாக்குவதால், வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இவற்றைஉணவில் சேர்க்க வேண்டாம். அசைவ உணவுகள், புரோட்டீன் மற்றும் கொழுப்பு நிறைந்தவை. புரோட்டீன் வாயுக்களை உருவாக்கும். கொழுப்பு சக்தி எளிதில் செரிமாணம் ஆகாமல் இருப்பதால், அசைவ உணவுகள் வயிற்றுக் கோளாறுகளை அதிகரிக்கும்.
மாவுச்சத்தில் பல்வேறு வகைகள் உண்டு. இவற்றில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளையும், பழம் சார்ந்த உணவுகளையும், செயற்கை சர்க்கரை பயன்படுத்தும் உணவு களையும் வயிற்று உப்புசம் உள்ளவர்கள் குறைப்பது நல்லது. ஏனென்றால், இவை அதிகமான வாயுக்களை உருவாக்கும் தன்மை கொண்டவை.
சில குறிப்பிட்ட நெறிமுறைகளை கையாளு வதின் மூலமாக வயிற்று உப்புசம், வாயு, மற்றும் வயிற்றுப்புண் போன்ற நோய்களில் இருந்து நாம் விடு படலாம்.
செய்ய வேண்டியவை

1. மூன்று வேளை உணவில் காலை உணவை நன்றாக சாப்பிடலாம். மதிய உணவை குறைத்து சாப்பிடவும். மூன்றாம் வேளை உணவு மிகமிக குறைவாக இருக்கட்டும்.
2.
3. இரவு 7 மணிக்கு பிறகு எதையும் சாப்பிட வேண்டாம்.
4.
3. சாப்பாடு மற்றும் தண்ணீர் அருந்திய பின் சுமார் அரை மணி நேரமாவது கழிந்த பின்னர் படுக்கவும்.

4.சாப்பிட்டவுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தால் நல்லது. உடனே படுக்க வேண்டாம்.

5.காரத்தை உணவில் குறைக்கவும். குறிப்பாக பச்சை மிளகாய், மிளகு, காரங்கள் நல்லதல்ல.

6. மது அருந்தவேண்டாம்.

7.காபி மற்றும் தேநீர் அருந்துவதை ஒரு பழக்கமாக மாற்றாதீர்கள்.

8. கோலா வகை செயற்கை பானங்கள் வாயுக்கள் நிறைந்தவை.

9. வயிற்று உப்புசம் நிறைந்தவர்கள், உடனடியாக ஜீரணிக்கும் அரிசி பதார்த்தங்களை சாப்பிடலாம். மெதுவாக ஜீரணிக்கும் கோதுமையை குறைக்கலாம். (சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது)

செய்யக்கூடாதவை:

1. வயிற்றுக்கோளாறுகளை உதாசீனம் செய்யாதீர்கள். உதாசீனம் செய்தால் இவை வயிற்று புண்களாக மாறி தீராத தொல்லைகளைத் தரும்.

2. சுய மருத்துவம் வேண்டாம். வயிற்றுக் கோளாறுகள் வரும்பொழுது. மருத்துவரிடம் ஆலோசனை பெற சோம்பேறித்தனம் கொண்டு கடைகளில் நாம் விரும்பும் மாத்திரைகளையோ, அல்லது வேறு மருந்துகளையோ சாப்பிடும் வழக்கம் நம்மிடம் அதிகமுண்டு. தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிடவும்.

3. இன்று அலோபதி சிகிச்கை முறையில் பல்வேறு புதிய பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

4. வயிற்றுப் பிரச்சினைகள் முற்றிலும் குணமாகும்வரை பத்திய உணவை மாற்றாதீர்கள்.

5. உணவு நெறிமுறை மிகவும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய மருத்துவ சிகிச்சை யாகும். இதில் மாற்றம் செய்யாதீர்கள்.

6. மதுபானம் , காபி, காரம், வாயு உண்டு பண்ணும் பல்வேறு உணவுகள், அசைவம், முட்டை முதலியவற்றை முற்றிலுமாக குணமாகும் வரை சேர்க்க வேண்டாம்.

வயிற்றுக் கோளாறுகள், வயிறு உப்புசம், மாந்தம், வயிற்றுப் புண் போன்றவை வராமல் பாதுகாத்துக்கொள்ள, கடைகளில், சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் உணவுகளை சாப்பிடாதீர்கள். ஒருமுறை வயிறு கெட்டால், அது குணமடைய பல மாதங்கள் ஆகலாம். முற்றிலும் குணமாகும் வரை பத்திய உணவு நெறி முறைகளை பின்பற்றுங்கள்.
தகுந்த மருத்தவ ஆலோசனையுடன் நமது நாக்கையும் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். சுவையான உணவிற்கு பழக்கப்பட்டு, அடிமையான நாக்கு, மேலும் மேலும் அதே உணவுகளை கேட்டுக் கொண்டே இருக்கும். வள்ளுவர் கூறியவாறு “நாகாத்தால்” உடல் காக்க முடியும். ஆசைக்கும், அறிவுக்கும், உள்ள போட்டியில் அறிவு வென்றிட, ஆசையை அடக்குங்கள். குணமான பின்பும் “நாகாத்தல்” அவசியம்.