வாகனங்களைவிட அதிக கவனமாக நம் உடலை நன்றாக பராமரித்தால் வாழ்க்கைப்பயணம் நன்றாக அமையும்.
* சாதாரண சைக்கிளையே சரியாக சர்வீஸ் செய்தால் தான் நீண்டநாள் ஓடும். நல்ல சிந்தனை, நல்ல பழக்கங்கள், உயர்ந்த குறிக்கோள்கள், ஒழுக்கம் போன்றவைதான் உடலுக்கும் மனதிற்கும் நல்ல சர்வீஸ் தருவது.
* ஒரு பயணம் என்றால் எங்கே? எத்தனை கி.மீ? தங்குவது எங்கே? போய்வர நேரம் எவ்வளவு? எனப் பல திட்டங்கள். உடலுக்கும் எவ்வளவு நேரம் உழைப்பு, ஒய்வு, எங்கு செல்வது, செல்லக்கூடாது போன்ற விவரங்கள் அவசியம்.
* ஒவ்வொரு முறையும் பேட்டரி சார்ஜ் குறைந்து விட்டால் ரீசார்ஜ் செய்தால் வாகனம் ஓடும். தினமும் உடலை ரீசார்ஜ் செய்ய உடற்பயிற்சி, யோகா, இசை போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்கினால் வாழ்க்கை உற்சாகமாக ஒடும்.
* வாகனங்கள் ஓட சுத்தமான பெட்ரோலை போட வேண்டும். மாறாக டீசல்போட்டால் வாகனம் ஓடுமா? அதைப்போல வேக உணவுகள், புகையிழை, மது, தீய சிந்தனைகள் போன்றவை உடல் இயந்திரத்தை கெடுத்து விடும்.
* பயணங்களில் உடன் பயணம் செய்வோரின் பங்கு முக்கியம். உடலுக்கும் நம்மோடு சேருபவர்களின் பங்கு மிக முக்கியம்.
* சுமை அதிகமான வாகனங்கள் எளிதில் பழுதடையும். மனச்சுமைகள் அதிகமானால் உடல் எளிதில் பழுதடையும், மகிழ்ச்சியான நினைவுகளே சுமை இல்லாதவை.
* வாகனத்தை ஓட்டுபவரின் திறமையைப் பொறுத்து பயணம் நன்றாகும். அதைப்போல நம் தனித் திறமைகளை அறிந்து வளர்ப்பதில்தான் வாழ்க்கை உயர்வடையும்.
* வேகமாக தாறுமாறாக ஓட்டும் வாகனம் எதிலாவது மோதி சேதமடையும். அதைப்போல பதட்டமும் வெறுப்பும் கொண்டால் வாழ்க்கை எதிலாவது மோதி விடும்.
* வாகனங்களுக்கு தற்போது இன்சூரன்ஸ் சட்டப்படி அவசியம் (முன்னரெல்லாம் அப்படி இல்லை) உடல் பாதிக்கப்பட்டால் உதவுவதற்கு இன்சூரன்ஸ் மிக அவசியம்.
* வாகனத்தை ஓட்டவும் பராமரிப்பிற்கும் தேவை யானது பணம். நம்மைப் பராமரிக்கவும் தேவையான சேமிப்பு பணம் இறுதிவரை அவசியம்.