மனிதர்களில், வருத்தமான ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் நாம் எல்லாவற்றிலும் பிரதிபலனை எதிர் பார்க்கிறோம். குறுகிய கால இன்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் நமது கண்ணோட்டம் இருக்கிறது. குறுகிய காலத்தில் ஏதாவது இன்பம் கிடைக்குமா எனப் பார்க்கிறோம். நம் எல்லோருக்கும் விரைவில் முடியும் விஷயங்கள் தான் வேண்டும்.
வேலை அல்லது நம்மையே கவனித்துக் கொள்வது போன்றசில விஷயங்களைச் செய்யத்தான் வேண்டும். வேலைகளை முடிக்க நேரம் இருக்கும்போது, சிறியதாக தெரிகிறது. வேலையைத் தள்ளிப்போட்டுவிட்டால், காலக்கேடு நெருங்க, நெருங்க அவை பெரிதாக வளர்ந்து சொல்ல முடியாத ராட்சஸன் போலத் தோன்றத் தொடங்குகின்றன. அவை உங்களை வீழ்த்தி விடுகின்றன. நீங்கள் சரணடைந்து விடுகிறீர்கள்.
ஒத்திப் போடுவது என்பது ஒரு திருடன் போல. அது நேரத்தை மட்டுமல்ல, யோசனைகளையும் திருடுகிறது. ஒரு மிக நல்ல யோசனை இருந்தாலும், அதைத் தாமதபடுத்தும்போது, அந்த உற்சாகம் மறைந்துவிடும். யாருக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த வாய்ப்பைக் கூடத் தொலைத்திருக்கலாம்? தள்ளிப்போடுவது என்பது எண்ணங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதும்தான் – நம்மில் பலர் இதை அடிக்கடி செய்கிறோம். மிகப் பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் வித்தியாசப்படுத்தும் ஒரு விஷயம் அவர்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதுதான். எப்படி யோசனைகளை செயல் படுத்துகிறார்கள் என்பதுதான். இன்றுமுதல் நெடுநாளாக நீங்கள் செய்ய நினைத்த விஷயங்களைச் செய்ய போகிறீர்கள். செய்யாமல் விட்ட வேலை மனதிலும் பெரும் சுமையாக இருக்கும். நீங்கள் நினைத்ததைவிட மிகப்பெரும் சுமை எதையாவது முடிக்காமல் விட்டிருந்தால், அது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
நீங்கள் செய்யாத விஷயங்களும் உங்கள் மனதை ஆட்கொள்ளும் பலர் மீண்டும், மீண்டும் அதே எண்ணங்கள் தோன்றுவதாகக் குறைகூறுகிறார்கள். பொதுவாக இவை அச்சம் அல்லது அனுபவிக்காத அனுபவங்களாகத்தான் இருக்கும். இந்த இரு வகை எண்ணங்களையும் அகற்ற அல்லது கையாள வேண்டுமானால் அதன் ரகசியம் அதைச் செயல்படுத்துவதில்தான உள்ளது. பயத்தை அனுபவித்துக் கொண்டே செய்து விடுங்கள்.
நேரத்தை பணம் போல நினைக்கவும். எங்கு செலவிடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். செலவிடுவது உங்கள் கட்டுப்பாட்டில் தற்போது இல்லையென்றால், நடவடிக்கை எடுக்கவும். உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும். இல்லையென்றால் நீங்கள் நிறைய இழக்க நேரிடும்.