முதுமையின் மாற்றங்கள் : உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் நடப்பதில்ல. வயதாகும் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியும் நடப்பதில்லை.
* ஊட்டச்சத்து பற்றாக்குறை: ஊட்டச்சத்து பற்றாக்குறைஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* உடல் எடை : பலர் உடலுக்குத் தரும் பயிற்சிகளைக் குறைத்துக் கொள்கின்றனர். இது தவிர மூட்டு வலி மற்றும் இதய நோய்களாலும் உடற்பயிற்சி குறைந்து விடுகிறது. இதனுடன் சேர்ந்து உணவில் கவனமின்மையும் எடையை அதிகரிக்கும்.
* உடல் ஒய்வு : தகுந்த ஓய்வும் உடலுக்குத் தரவேண்டும். ஓய்வில்லாத உழைப்பு முதுமையை வேகமாக்கும்.
* தூக்கம் : வயதானவர்களுக்கு இது மிகப் பெரிய பிரச்சனை. உடல், மனம் சார்ந்த பிரச்சனை களால், தூக்கமின்மை ஏற்பட்டு முதுமை மாற்றங்கள் அதிகமாகின்றன.
* எலும்பு மற்றும் மூட்டு : வயதாகும் போது பல்வேறு வளர்சிதை மாற்றங்களால் எலும்புகளின் உருவத்திலும், கால்சியம் அளவிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் மூட்டுகள் சரிவர இயங்க முடியாமல் போய்விடுகின்றன. எலும்புகள் எளிதில் முறியும். கூன் விழுதல் ஏற்படும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ போரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
* பார்வை : கண்களின் லென்சுகளில் ஏற்படும் மாற்றத்தால் கேட்ராக்ட் உண்டாகி பார்வையைப் பாதிக்கும் ‘கிளக்கோமா’ என்னும் கண் அழுத்த நோய் ஏற்படலாம். திடீரென தாங்க முடியாத தலை வலி, பார்வையில் மாற்றம், கண்ணிலிருந்து நீர் வடிந்தால் தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுகவும்.
* கேட்கும் திறன் : காதில் ஒலி அலைகளைப் பரப்பும் உறுப்புகளின் செயல் திறன் குறைவதால் காது சரிவர கேளாத நிலைமை ஏற்படும்.
* பல் பிரச்சனைகள் : பல் விழுதல், ஈறுகளில் தொற்று, வாய், துர்நாற்றம் போன்றவை ஏற்படும்
* மூச்சுக் கோளாறுகள் : வயது ஆக ஆக நுரையீரல் திறன் குறைகிறது. குளிர்காலத்தில் உடல் சூடு தணியாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
* இதய நோய்கள் : சரியான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிக்காமல் இருந்தால் அதிரோஸ்கிளிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படும். இதனால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும்.
* ஜீரண மண்டலம் : பல்வேறு மாற்றங்கள் ஜீரண மண்டலத்தில் ஏற்படு கின்றன. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வயிறு எரிச்சல், ஏப்பம் போன்றவை அதிகரிக்கும்.
* சிறுநீரகம் : சிறுநீரகத்தின் அணுக்கள் குறைவதால் சரிவர செயல்பட முடியாமல், குறைந்த அளவு சிறுநீர் மட்டுமே உற்பத்தியாகும். சிறுநீர்ப்பை தசைகளில் மாற்றம் ஏற்படுவதால் முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாமல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ப்ராஸ்டேட் பிரச்சனைகளும் ஏற்படும்.
* நரம்பு மண்டலம் : ஞாபக மறதி அதிகமாகும். அல்ஸ்ஹைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் போன்ற மூளையை பாதிக்கும் நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
* தோல் : தோல் மெல்லியதாகி உலர்ந்து அதன் ஜவ்வுத் தன்மையை இழக்கிறது. இதனால் தோல் தொங்கிப் போவதுடன் சுருங்கிவிடுகிறது.
* மனநோய்: பொதுவாக மனச்சோர்வு அதிகமாக ஏற்படும். இரண்டு வாரத்திற்கு மேல் காரணமற்ற சோகம் அல்லது துக்கம், எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல், மனச்சோர்வு இருந்தால் மருத்துவரை அணுகவும்.
* புற்றுநோய்: எந்தவிதமான கட்டி இருந்தாலும், எவ்வளவு அளவில் எந்த பாகத்தில் இருந்தாலும் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகவும்.