ஆஸ்துமா நோயில் சிறு சுவாசக் குழாய்களின் உட்சுவர் சுருங்குவதால், அதன் குறுக்களவு குறைந்து சுவாசிக்கும் காற்றுக்குத் தடை ஏற்படுகிறது. அதனால் மூச்சு விடுவதில் சிரமமும் மூச்சு வாங்கும்போது விசில் சத்தமும் ஏற்படும். மேலும் மார்பை இறுக்கிப் பிடிப்பது போன்ற உணர்வும் இருமலும் ஏற்படலாம்.
ஆஸ்துமா உண்டாவதில் பரம்பரைக் காரணம் ஒரளவு இருந்தாலும் சுற்றுச்சூழலில் உள்ள சில பொருள்களின் ஒவ்வாமையே பெரும் பங்கு வகிக்கிறது
* வீட்டில் உள்ள தூசி.
* வீட்டுப் பொருள்களில் சேகரமாகும் ஹவுஸ் மைட் எனப்படும் சின்னஞ்சிறு பூச்சி மற்றும் கரப்பான் பூச்சிகளின் கழிவுகள்.
* செல்லப் பிராணிகளில் பூனை மற்றும் நாய் ஆகியவற்றின் உரோமங்கள்.
* விட்டைச் சுற்றியுள்ள பூக்களிலிருந்து காற்றில் அடித்து வரப்படும் மகரந்தப் பொடிகள் மற்றும் காளான்களில் இருந்து வெளிவரும் தூசுகள்.
* சிகரெட் நாற்றமும் அதன் புகையும்.
*வாசனைத் திரவியங்கள், மூக்கைத் துளைக்கும் வாசனைகள்.
* சாம்பிராணி புகை மற்றும் சமையல் அடுப்பின் புகை.
* பனி, குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்
* படுப்பதற்கு உபயோகப்படுத்தும் பஞ்சு மெத்தை மற்றும் தலையணைகள்.
* படுக்கை அறையில் உள்ள வீட்டு உபயோக சாதனங்களில் படிந்திருக்கும் தூசுகள்.
* உணவை நீண்ட கால உபயோகத்திற்காக பாதுகாக்க சேர்க்கப்படும் மெட்டாபைசல்பைட் என்னும் ரசாயனப் பொருட்கள்.
* வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை.
* தொழிற்சாலைகளில் ஏற்படும் மரத்துகள்கள், வெளியாகும் புகை மற்றும் ரசாயனப் பொருட்கள்.
* ஆஸ்பிரின், சில வகை மூட்டு வலிக்கான மருந்துகள் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பீட்டா பிளாக்கர் எனப்படும் மருந்துகள்.
* ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளின் தாக்கம்.
* கடுமையான வேலை மற்றும் தீவிர உடற்பயிற்சி.
* அதிக உணர்ச்சிவயப்பட்டு சிரிப்பது. அழுவது மற்றும் கோபப்படுவது.
* பலவித காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது.
மேற்கூறிய காரணங்களால் சிலருக்கு ஆஸ்துமா நோயின் தாக்கம் ஏற்படலாம்
மேற்கூறிய காரணங்களை கவனத்தில் கொண்டு, கூடிய மட்டும் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* வீட்டை சுத்தம் செய்ய, துடைப்பம் ஒட்டடை கழி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தரையை ஈரத்துணியால் சுத்தம் செய்யலாம். முடிந்தால் வேக்குவம் கிளீனர் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
* இயற்கையான பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை, தலையணைகளை உபயோகிக்காமல், செயற்கை பஞ்சினால் ஆன தலையணை, மெத்தை களை உபயோகிக்கலாம். அவற்றில் தூசுகள் இராது.
* படுக்கை அறையில் தூசுகள் படிவதைத் தடுக்க, வீட்டு உபயோகப் பொருட் களைப் படுக்கை அறையில் கூடிய வரையில் தவிர்க்க வேண்டும்
* சிகரெட் பிடிக்கக் கூடாது, மற்றவர் சிகரெட் பிடிக்கும் இடங்களில் இருக்கக் கூடாது.
* புகை மற்றும் தூசிகளின் தாக்கத்தைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மறைக்கும் பாதுகாப்பு முகத்திரையை அணிந்து கொள்ளலம்.
* தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். சில சமயங்களில் வேலை மாற்றமும் தேவைப்படலாம்.
* ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை அனுபவ ரீதியாகக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.
* குளிர், பனி மற்றும் மழை ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டைச் சுற்றி புதர்கள் இல்லாமல் பாது காத்துக் கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா நோயில் மூன்று நிலைகள்
* முதல் நிலையில் பல காரணங்களால், சுவாசக் குழாயின் உட்சுவர் காயம் அடைகிறது. இதில் ஜல தோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் என்ற நுண்கிருமிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
* இரண்டாவது நிலையில், காயத்தால் பாதிக்கப் பட்ட சுவாசக் குழாய்கள், முன்பு விவரிக்கப்பட்ட பல காரணங்களால் ஏற்படும் ஒவ்வாமையால் மிக சுலபமாக பாதிக்கப்படுகின்றன.
* மூன்றாவது நிலையில் பாதிக்கப்பட்ட சுவாசக் குழாய்கள் அதிக அளவில் சுருங்கி சுவாசக் காற்றுக்கு தடை ஏற்படுத்துவதால், மூச்சு விடுவதில் சிரமம், மார்பு இறுக்கம் மற்றும் இருமல் போன்றவை ஏற்படுகின்றன.
* நவீன மருத்துவத்தில், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாக இன்ஹேலர், ரோடோகேப்ஸ் மற்றும் நெபுலைசர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலமாக ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன. இந்த முறையில், மருந்துகள் மிகத் துரிதமாக வேலை செய்வதுடன் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
* ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் மருந்துகளில் இருவகை உண்டு. முதல்வகை மருந்துகள், சுருங்கிய நிலையில் மூச்சு விடுவதில் இருக்கும் சிரமத்தைக் குறைக்கும். இவை மூச்சு விடும் சிரமத்தைக் குறைக்கும் மருந்துகள்.
* இரண்டாவது வகை மருந்துகள், சுவாசக் குழாய்களின் உட்சுவரில் இருக்கும் காயங்களைக் குணப்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா ஏற்படுவதற் கான ஒவ்வாமையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்து கின்றன. இதை, ‘ஆஸ்துமா தடுப்பு மருந்து’ என்பார்கள்.
இந்த இரண்டு வகை மருந்துகளையும் மருத்துவ ஆலோசனையுடன் முறையாக பயன்படுத்துவதால், ஆஸ்துமா நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.