கடந்த வருடங்களில் மே மாதத்திற்குப் பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் கடுமையான அளவில் சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு மக்களைப் பாதித்தது. மிகவேகமாக பரவக்கூடிய சிக்கன்குனியா காய்ச்சல் கொசு மூலம் பரவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை இப்போதே போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும்.
* சிக்குன் குனியாவைப் பரப்பும் கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். அதனால் பைரித்ராய்ட் என்ற மருந்தை அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் அடிக்க வேண்டும்.
* வீட்டைச்சுற்றி அசுத்தநீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளரும் லார்வாக்களை ஒழிக்கவேண்டும்.
* தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
* குழந்தைகளை கொசுவலையால் மூடி படுக்கவைக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலை அல்லது ஸ்கீரின்களை பயன்படுத்தவேண்டும்.
* பூந்தொட்டி மற்றும் பறவை நீர் அருந்தும் பாத்திரங்களில் உள்ள நீரை வாரம் இருமுறை மாற்றவேண்டும்.
* தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரை அகற்ற முடியா விட்டால், டெமிபாஸ்… என்ற மருந்தை வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
* பழைய டயர்களை அப்புறப்படுத்துவதற்கு வழி செய்யலாம்.
* கொசு விரட்டிகளைப்பயன்படுத்தலாம்.
* வீட்டைச் சுற்றிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் உள்ள அடர்ந்து வளர்ந்த புல், பூண்டுகளை வெட்டலாம்.
* நன்கு வளர்ந்த கொசுக்களை ரசாயனக் கொல்லி மூலம் அழிக்க வேண்டும்.
லார்வாவை அழிக்கும் முறை:
* உபயோகித்த டின் கேன், ஜார், பாட்டில், டயர், தேங்காய் ஓடு, மட்டை ஆகியவற்றை எரிப்பது.
* உபயோகிக்காத தொட்டிகள் மற்றும் கொசு இனப் பெருக்கம் செய்யும் இடங்களை நீக்குவது.
* தண்ணீர்த் தொட்டி மற்றும் மண் ஜாடிகளைக் கவிழ்த்து வைப்பது.
* அடிக்கடி தொட்டிகளைச் சுரண்டி கொசு முட்டைகளை அழிப்பது.
* பூந்தொட்டிகளில் தண்ணீர் வெளியேறக்கூடிய அளவில் துளையைக் கீழே வைப்பது.
* லார்வாவைக் கொல்லும் மீன்களை மீன் தொட்டிகளில் வளர்ப்பது.
போன்ற செயல்பாடுகளின் மூலம் சிக்குன்குனியாவைத் தடுக்க முடியும்.