ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவின் ஆதிவாசிக் கிராமங்களின் வழியே பயணித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு புதுமையைச் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். தேர்ந்த நீச்சல் வீரரும்கூட.
போகிற வழியில் ஒரு பெரிய ஏரியைப் பார்த்தார். அந்த ஏரியை நீந்திக் கடந்தால் அந்த பக்கம் இருக்கும் கிராமத்துக்குப் போகலாம். ஏரியைப் பார்த்தவுடன் குதித்து நீந்தவேண்டும் என்ற ஆசை. ஆழம் அதிகமாக இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனாலென்ன நீச்சல் தெரியுமே என்று உடைகளை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையோடு ஏரிக்குள் குதித்து நீந்த ஆரம்பிக்கிறார்.
பாதி தூரம் போனபிறகு ஏரியின் மறுபக்கம் இருக்கும் ஆதிவாசிகள் அவரை நோக்கி கையசைத்து ஆர்ப்பரிப்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறார் வெள்ளைக்காரர்.
தண்ணீருக்குள்ளே குட்டிக்கரணம் அடித்து வேடிக்கைப் பார்ப்பவர்களைக் குஷிப்படுத்துகிறார். ஆதிவாசிகள் கைத்தட்டி மீண்டும் ஆர்ப்பரிக் கிறார்கள். சிறிது நேரத்தில் கரைக்கு வந்த அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. கைத்தட்டல்களும் பாராட்டல்களுமாக வெள்ளைக்காரரை எல்லாரும் தட்டிக் கொடுக்கிறார்கள்.
“அடேயப்பா, என்ன மாதிரி நீச்சல் அடிக்கிறீர்கள்? பயப்படாமல் எவ்வளவு வேகமாக நீந்துகிறீர்கள்?” என ஆதிவாசிகள் சொல்ல வெள்ளைக்காரருக்கு பெருமிதம். “எனக்கு டைவ் மட்டுமல்ல கால்களை மடக்கிக் கொண்டு டைவ் அடிப்பது அப்படியே அசையாமல் மிதப்பது என நிறையத் தெரியும். வேண்டுமானால் உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்” என்றார்.
“நண்பரே எங்களுக்கும் இந்த டைவ் எல்லாம் தெரியும். நாங்கள் அதற்காக உங்களைப் பாராட்டவில்லை. நூற்றுக்கணக்கான முதலைகள் இருக்கிற ஏரியில் பயப்படாமல் நீந்தி வந்தீர்களே அதற்குத்தான் இந்தப் பாராட்டு” என்று ஆதிவாசிகள் சொன்னதும் வெள்ளைக்காரருக்கு மூச்சே நின்றுவிட்டது.