தான் படித்து பல பட்டங்களைப் பெற்றும் வாழ்வில் முன்னேற முடியவில்லையே. ஏன்? என்று அறிஞரிடம் கேட்டான் இளைஞன்.
அறிஞர் ‘டீ குடிக்கிறீர்களா தம்பி’ என்றார். இளைஞனுக்குக் கொஞ்சம் எரிச்சல்தான். ஊற்ற ஆரம்பித்தார் . டீ கோப்பையை அவன் கையில் கொடுத்த அவர். அதில் டீயை ஊற்ற ஆரம்பித்தார். டீ கோப்பை நிரம்பியது.
இருந்தாலும் அறிஞர் டீ ஊற்றுவதை நிறுத்தவில்லை. கோப்பை நிரம்பி வழிந்ததும் இளைஞன் இன்னமும் எரிச்சலானான் ‘என்ன அறிஞரே இப்படிச் செய்துவிட்டீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டான்.
அறிஞர் அமைதியாகச் சொன்னார். ‘தம்பி உங்கள் மனசும் இப்படித்தான் இருக்கிறது. டீ கோப்பை நிரம்பி இருக்கும்போது மேலும் மேலும் டீயை ஊற்றினால், அது எப்படி பயனின்றி நிரம்பி கொட்டுமோ அதே போல் நீங்கள் சேர்க்கிற, தெரிந்து கொள்கிற எல்லா விஷயங்களும் வீணாக வெளியே வழிந்து விடுகின்றன’ என்றார் அறிஞர்.
இளைஞனுக்குப் புரியவில்லை. அறிஞர் தொடர்ந்தார். ‘தம்பி வாழ்வில் உயர வேண்டும் என்ற முனைப்பில் நீங்கள் பல விஷயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள். அதற்குத் தேவைப்படும் விஷயங்களைச் சேர்க்கிறீர்கள். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ள உங்கள் மனதில் இடம் இல்லை.
அதனால் அவை வீணாக வெளியேறு கின்றன. உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் நீங்கள் எதையெல்லாம் சேர்த்துக் கொள்கி றீர்களோ, அதைவிட முக்கியமானது தேவை இல்லாத விஷயங்களை அழிப்பதுதான். அப்போதுதான் நீங்கள் சேர்க்கும் விஷயங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கும்!’ என்றார் அறிஞர்.

உங்கள் மதிப்பு குறையாதது
அது ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த ஒரு பயிற்சி வகுப்பு, நண்பர் ஒருவர் மேடையில் பேசிகொண்டு இருந்தார் 1000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் காட்டி, ‘இது யாருக்கு வேண்டும்?’ என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.
‘நிச்சயம் தருகிறேன்…’ எனச் சிரித்த நண்பர் புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?’ என்றார் மறுபடியும் எல்லோரும் கை தூக்கினார்கள்.
‘ஓ அப்படியா? என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது, கசங்கிய கரன்சியைத் தன் ஷுவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார். “யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?” கூட்டத்தில் இருந்த எல்லோரும் அப்போதும்கூட கையை வேகமாக உயர்த்தினார்கள்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார். ‘இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!’
இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால் சூழ்நிலைகளால் எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம். ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம். நசுக்கப்பட்டு இருக்கலாம். கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால் என்ன நடந்தாலும் சரி, எனக்கு மதிப்பு போய்விட்டது. நான் எதற்கும் பயன்படாதவன் என்றமுடிவுக்கு மட்டும் வராதீர்கள்’ என்றார் புன்னகையுடன்.
‘1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப் பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும்கூட வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்….. ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!’ என்பதுதான் நண்பரின் செய்தி.
நாம் நிராகரிக்கப்படும்போது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” இன்னொன்று ‘நான் அவமானப்படுத்தப்பட்டு விட்டேன்’ என்று நினைப்பது.