அந்த விஞ்ஞானி மிகச்சிறந்த புத்திசாலி. யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை அவரால் செய்துவிட முடியும். ஆனால் அவரின் படைப்பை ஒரு சிறு குறை சொன்னாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது.
பல வருட முயற்சிக்குப் பின் ஒரு புதிய சூத்திரத்தைக் கண்டறிந்தார். தன்னைப் போலவே அச்சு அசலான 10 உருவங்களை உருவாக்கி. அவற்றுக்கு உயிர் கொடுத்து உலவ வைக்க அந்த சூத்திரத்தை அவர் பயன்படுத்தினார். இந்த சூத்திரத்தைக் கண்டறிய விஞ்ஞானிக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. காரணம் இன்னும் சில வருடங்களில் தன் உயிரை எடுத்துச் செல்ல எமன் வருவான் என்று அவருக்குத் தெரியும்.
கண், காது, மூக்கு, பேச்சு, செயல் என அனைத்திலும் விஞ்ஞானியைப் போன்றே அந்த 10 பேரும் இருந்தார்கள்.
விஞ்ஞானி எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் எமன் வந்தான். ஒரேமாதிரி 11 பேர் இருப்பதைப் பார்த்து ரொம்பவே குழம்பிப் போனான். விஞ்ஞானியின் ஐடியாவும் அதுதானே. எப்படியாவது உண்மையான விஞ்ஞானியின் உயிரை எடுத்தாக வேண்டும். என்ன செய்வது எனத்தெரியாமல் தடுமாறினான் எமன். சட்டென ஒரு யோசனை வந்தது.
அந்த 11 பேரையும் ஓர் இடத்துக்கு வரவழைத்தான் ‘விஞ்ஞானி சார், மிக அருமையான கண்டுபிடிப்பு உங்களுடையது. மனிதனை மறு உருவாக்கம் செய்வது அசாதாரண விஷயமா இருந்தாலும் உங்கள் கண்டுபிடிப்பில் ஒரு குறை உள்ளது என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னான்.
எல்லோரும் அமைதியாகி இருக்க, ஒருவர் மட்டும் கோபமாகி முன்னே வந்து கத்தினார். ‘என் படைப்பை எப்படிக் குற்றம் சொல்ல முடியும், என்ன குறை கண்டீர்கள்?’ என்று படபடவென கோபப்பட்டார். எமன் முகத்தில் ஏக சந்தோஷம், ‘வாங்க சார், உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்’ என்று கையோடு மேலோகம் கூட்டிக் கொண்டு போனார். விஞ்ஞானி எமனிடம் கேட்டான். “எப்படி நான்தான் விஞ்ஞானி என்று கண்டுபிடித்தீர்கள்?”
“நீ பெரிய அறிவாளி என்றாலும் ஈகோ பிடித்தவன் என்பது தெரியும். அதனால்தான் வேண்டுமென்றே குறை இருக்கிறது என்று சொன்னேன். நீயும் கோபமாக முன்னே வந்தாய் அவ்வளவுதான்” என்றார்.