ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு பந்தயக் கார் மீது ஆசை. எப்போதும் அது குறித்துதான் சிந்தனை. யார் அதுமாதிரி கார் ஓட்டிப் போனாலும், மிகவும் ரசிப்பான்.. எங்காவது அந்த கார் நின்றிருந்தால், ஒரு காதலியைப் பார்ப்பதுபோல ரசித்துப் பார்ப்பான். நண்பர்களுடன் பேசும்போது கூட அந்த கார் பற்றிதான் பேசுவான்.
அப்பா ஒருநாள் சொன்னார். ‘நீ கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு. உனது பட்டமளிப்பு நாளில், அந்த காரைப் பரிசாகத் தருகிறேன்’ என்று, இளைஞனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவன் கனவு கண்ட பந்தயக் கார் அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
கார் பற்றிய கனவுகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்த அவன் முதல் வகுப்பில் தேறினான். பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அவன் கனவு நிறைவேறப் போகிற நாள். பட்டத்தைக் கையில் வாங்கிக்கொண்டு அப்பாவைப் பார்க்க ஒடோடி வந்தான். அப்பாவிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு நின்றான். மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்ட தந்தை அருகில் இருந்த அறைக்கு அழைத்துப் போனார். இளைஞனுக்கு ஆர்வம் தாளவில்லை. அங்கே அழகாக பார்சல் செய்யப்பட்டு இருந்த ஒரு பைபிளைப் பரிசாக வைத்திருந்தார். மகனுக்கு மாபெரும் ஏமாற்றம். அப்பா மீது ஆத்திரம். அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் வேறு. எதுவும் பேசாமல் ஆத்திரத்தில் வீட்டைவிட்டு வெளியேறினான். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றினாலும் ஏமாற்றியவரை ஏன் பார்க்க வேண்டும் என்று இருந்துவிடுவான்.
ஒரு நாள் தந்தி ஒன்று வந்தது. தந்தை இறந்து விட்டார் என்று. கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போனான் இளைஞன். அப்பாவின் போட்டோ மட்டும் தொங்கியது. பழைய நினைவுகளோடு வீட்டைச் சுற்றி வந்தவன். தற்செயலாக அந்த அறைக்குள் போனான். அப்பா பரிசாக கொடுத்த அந்த பைபிள் அப்போதும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. அதைக் கையில் எடுத்தபோது அதன் பின்பகுதியில் ஏதோ தட்டுப்பட்டுவிட்டது. திருப்பிப் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி. கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அந்த பைபிளின் பின்னால் அவன் ஆசைப்பட்ட பார்சலாக காரின் சாவியும் அதை முழுத்தொகையையும் கொடுத்து பட்டமளிப்பு நாளில் வாங்கியதற்கான ரசீதும் இருந்தன.
அடியில் ஒரு வாசகம் ‘அன்பு மகனுக்கு ஆசீர்வாதங்களுடன் அப்பா’ என்றிருந்தது. அப்பாவையும் அவரின் அன்பையும் நினைத்து அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.