புகைப்பழக்கத்தினால் இறப்பவர்கள் எண்ணிக்கை பன் மடங்கு உள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி தினமும் 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 3,000 விடலைப் பருவத்தினர் இந்தப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குக் காரணங்கள் என்ன?
விடலைப் பருவத்தினர் இந்தப் பழக்கத்துக்கு ஆளாவதற்குக் கீழ்காணும் காரணங்களே முக்கியமானவை.
* பெற்றோர், உறவினர் மற்றும் சமூக அந்தஸ்து உள்ளவர்களிடம் இருக்கும் சிகரெட் பழக்கம்.
* சிகரெட் சம்பந்தமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள்.
* தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகள்.
* சிகரெட் விற்பனையில் கட்டுப்பாடின்மை யால் சிறுவர்களுக்கும் சிகரெட் சுலபமாகக் கிடைத்தல்.
* சமூகத்தில், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதைக் கண்டிக்காமல் இருத்தல்.
* புகைப்பிடித்தால் தன்னை மற்றவர்கள் பலம் பொருந்தியவர்களாக நினைப்பார்கள் என்ற தவறான எண்ணம்.
பல நூற்றுக்கணக்கான ரசாயனக் கலவைகளும் புகையை உள்ளுக்கு இழுக்கும்போது நுரையீரலைச் சென்று தாக்குகின்றன.
அவை ரத்தத்தில் கலப்பதால் மூளை உட்பட உடலின் பல பாகங்கள் பல வகைகளில் பாதிக்கப் படுகின்றன.
* புகையிலையில் உள்ள நிக்கோடின் என்ற பொருள் மூளையை தன்வயப்படுத்தி ஒரு போலியான திருப்தியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் அளவு ரத்தத்தில் சிறிது நேரத்தில் குறையும் போது மூளை அவரை சிகரெட் பிடிக்கத் தூண்டுகிறது. அதனால் அவர் ஒரே நாளில் பல தடவை சிகரெட் பிடிக்கும் பழக்கத்துக்கு தள்ளப் படுகிறார்.
* சிகரெட், பீடி, சிகர் மற்றும் பைப் சுருட்டு போன்றவற்றில் புகையிலையை உபயோகப் படுத்துகின்றனர்.
* புகையிலைத் துகளை மூக்குப் பொடியாக உபயோகிக்கிறார்கள். எந்த வகையில் உபயோகப் படுத்தினாலும் உடலுக்கு புகையிலையால் பல வகைகளில் தீமைதான்.
* சிகரெட் புகைக்கும் போது அவருக்கு அருகில் உள்ள மற்றவர்கள் அந்த புகை கலந்த காற்றை சுவாசித்தாலும் உடல்நலக் கேடு ஏற்படும்.
உடல்நலக் கேடுகள்
* நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட மூச்சு அடைப்பு நோய், வாய், தொண்டை, உணவுக்குழாய், வயிறு, கல்லீரல், கணையம், சிறுநீரகம் மற்றும் கருப்பை போன்ற இடங்களிலும் புற்றுநோய் ஏற்படலாம். வயிற்றுப் புண் ஏற்படும்.
* ரத்தக் குழாய்கள் தடித்து அதனுள் சில சமயங்களில் ரத்தம் உறைவதால் மாரடைப்பு நோய், அதிக ரத்த அழுத்தம், பக்கவாதம், கால்கள் இழப்பு போன்ற பின்விளைவுகளும், கண் பார்வை மங்குதல், ரத்தத்தில் புற்று நோய் போன்றவை உண்டாகலாம்.
* தாய்மார்கள் புகைப்பதால் கருச்சிதைவு, கருவளர்ச்சிக் குறைவு, குறைந்த எடையுடன் குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், பிறந்த சில நாட்களிலேயே திடீரென்று ஏற்படும் நுரையீரல் கோளாறால் குழந்தை இறந்து போதல் போன்றவை ஏற்படும்.
புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
புகைப்பிடிக்காதவர்கள் நினைப்பதுபோல, புகைக்கும் பழக்கத்தை ஒருவர் விட்டுவிட உளமார விரும்பினாலும் எளிதில் விட முடியாது. ஏனென்றால் அந்த நேரம் நிக்கோடினினால் மூளை மேல் உள்ள ஆதிக்கம் குறைவதால் தற்காலிகமாக சில தினங்களுக்கு மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கோபம், வெறுப்பு, தவிப்பு மற்றும் சுலபத்தில் எரிச்சல் அடைதல் போன்ற உணர்வுகளுக்குத் தள்ளப்படுகிறார். அதிலிருந்து மீள திரும்பவும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
* புகைக்கும் பழக்கத்தை நிரந்தரமாக நிறுத்த குடும்ப மருத்துவர் சம்பந்தப்பட்ட நபரை ஊக்குவிக்க வேண்டும்.
* பொது இடங்களில் புகைப்பதைக் கண்டிப்பாகத் தடை செய்ய வேண்டும்.
* புகைப்பிடிக்கத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்த்து நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.
* புகைக்கும் நண்பர்களைத் தவிர்க்க வேண்டும்.
* புகைப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை, பள்ளிப் பருவத்திலேயே குழந்தை களுக்கு உணர்த்த வேண்டும்.
* தனிமையில் இருக்கும் போது புகைக்கும் எண்ணத்தைத் தவிர்க்க-இசையை ரசித்தல், புத்தகம் படித்தல் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தலாம்.
* மருத்துவ ரீதியாக நிக்கோடின் மாற்று மருந்து மற்றும் புப்ரோபியான் என்றும் மனத்தளர்வைச் சரிப்படுத்தும் மருந்து ஆகிய இரண்டையும் சில காலம் மருத்துவ ஆலோசனையின் பேரில் கொடுப்பதன் மூலம் இந்தக் கொடிய பழக்கத்தில் இருந்து விடுபட உதவும்.