தியானம் மற்றும் யோகாவின் பலன்கள் எண்ணற்றவை. குழப்பங்களையும், உடலின் பாதிப்புகளையும் அவரவரே முறையான தியானம், யோகா மூலம் சரி செய்ய முடியும்.

ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் திறந்து அவரது கவனம் திசை திரும்பும்போது, உடனே பீட்டா மின் அலைகள் தோன்றி விடுகின்றன.
ஒருவர் பார்வை மற்றும் பிற செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்பு உணர்வுடன் கண்களை மூடிய நிலையில் இருக்கும் போது மட்டுமே ஆல்ஃபா மின் அலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆல்ஃபா நிலையில் செயல்படும்போது பொதுவாக இயங்கும் இடப்பக்க மூளையுடன் வலப்பக்க மூளையும் தூண்டப்படுகிறது. அதனால் நமது மூளை மிகவும் சக்திவாய்ந்த ஆக்கப்பூர்வமான, உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் செயல்படுகிறது. இந்த நிலையில் நாம் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆல்ஃபாவின் சக்தியால் தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல் முடிவுகளை எடுக்கலாம்.
மனப்பதட்டம் இராது. உடல் ஆரோக்கியம் ஏற்படும். நம் எண்ணங்களையும் செயல்களையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எத்தகைய சவால்களையும் எளிதில் எதிர்கொள்ளலாம். தீய எண்ணங்கள் நம்மை விட்டு ஓடும். நேர்மறையான எண்ணங்கள் தலைத் தூக்கும். இரவில் நன்றாகத் தூங்கலாம். தியானம் மூலம் ஆழ்மனதிற்குத் தக்க பயிற்சி அளித்தால், அதன்மூலம் எந்த வேலையையும் எளிதில் செய்து முடிக்கலாம். எந்த சவால்களையும் சந்தித்து சாதனைப் படைக்கலாம். பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.
தினமும் சிறிது நேரமாவது தியானம் செய்வதால் கவனம், நடத்தை, இலக்கை எளிதில் அடைதல், சூழ்நிலைக்குத் தக்கவாறு சுறுசுறுப்பாகச் செயல்படுதல், சகிப்புத் தன்மை, வேகம், துல்லியமான அறிவு ஆகியவை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடையும்.