பாரசீக மன்னன், சுல்தான் இருவருக்கு மரண தண்டனை கொடுத்தான். அதில் ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.   “அரசே! எனக்கு ஒரு வருடம் தவணை கொடுத்தால் உங்கள் குதிரையை பறக்க வைப்பேன். உலகிலேயே பறக்கும் குதிரை ராஜா என்ற சிறப்பு பெயர் உலகில் உங்களுக்கே”  என்றான். அரசனுக்கு மனதிற்குள் ஆசை கிளம்பியது. அதற்கு ஒப்புக் கொண்டான்.

இதைப் பார்த்த இரண்டாம் கைதி அவனிடம் “ஏண்டா, ஒரு வருடத்தில் எப்படி உன்னால் குதிரையைப் பறக்க வைக்க முடியும்?” . என்றான். அதற்கு அவன், “அடுத்த ஒரு வருடத்தில் அரசனின் மனம் மாறலாம். அல்லது அரசன் இறக்கலாம். அல்லது குதிரை இறக்கலாம். அல்லது ஒருவேளை குதிரைக்கே பறக்கும் நிலைமை ஏற்படலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?” என்றான்.
தற்கொலை செய்வோரை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு (பணம், காதல், தொழில்) அதனோடு உணர்ச்சிப்பூர்வமாக  சிக்கிக் கொண்டு அதில் நினைத்தபடி நடக்காத போது எல்லாமே போய் விட்டது என்று முடங்கி, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கின்ற முடிவின் விளைவு என்பதுதான்.

வாழ்க்கையில் சரியாக நடப்பது ஒரு அம்சம். எதிர்பாராதபடி நடப்பது மற்றொரு அம்சம். இந்த இரண்டாவதில் தான் அனுபவம் என்ற மிகப்பெரிய விஷயம் கிடைக்கும். அதைப் பெறுவது தோல்விகளில்தான். வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களை கொடுத்து உயரச் செய்வதே இந்த அனுபவங்கள். ஒரு வழி சரியில்லையா? இரண்டாவது வழி. அது சரியில்லையா? மூன்றாவது வழி? அதுவும் சரியில்லையா? நான்காவது வழி, வாழ்க்கையில் இப்படி பல வாய்ப்புகள். ஒரே கதவை பிடித்து தட்டிக் கொண்டு திறக்கவில்லையே என முட்டிக் கொள்ளத் தேவையில்லை.