(வசந்தா வயது 40. கோயிலுக்கு சென்று பூஜை செய்தாள். பிரசாதம் பெற்றாள். பிரசாதத்தை சாப்பிட்ட அடுத்த நிமிடமே உடம்பெல்லாம் அரிப்பு. தடிப்பு. மூச்சு விடுவதில் சிரமம். மயங்கி விழுந்தாள். உடல் நீல நிறமாகியது. அருகிலிருந்த கணவரும் குழந்தையும் பதறினார்கள். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே மரணமடைந்தாள். அவருக்கு நல்லெண்ணெய் அலர்ஜி. எல்லுருண்டை பிரசாதத்தை சாப்பிட்டவுடன் சில நிமிடங்களில் ஏற்பட்ட அலர்ஜியினால் உடம்பு முழுவதும் தடிப்பும் அரிப்பும் ஏற்பட்டது. கடும் அலர்ஜியின் விளைவாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டது).
ஓடிவிளையாடினால் மூச்சிறைக்கும். அதுவே ஓய்வு எடுத்தால் சரியாகும். அப்படி இல்லாமல் ஓய்வின் போது வருகின்ற மூச்சுத் திணறல் எல்லாமே ஏதோ ஒரு நோயின் பாதிப்புதான்.
இதய பாதிப்பினால்
இதய பாதிப்பின் போது நுரையீரலுக்குள் செல்லும் இரத்தத்தின் அழுத்தம் அதிகமாவதால் மூச்சுத் திணறல் ஏற்படும். இயல்பான நிலையில் ஏற்படுகின்ற மூச்சுத் திணறல், நள்ளிரவில் உண்டாகிற மூச்சுத் திணறல் போன்றவையெல்லாம் இதய பாதிப்பின் விளைவுகளே.
நுரையீரல் பாதிப்பினால்:
ஆஸ்துமா நோய் (குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படுகிற) மூச்சுத்திணறலுக்கு முக்கிய காரணம். ஆஸ்துமாவில் மூச்சை வெளிவிடுவதில் அதிக சிரமமாக இருக்கும். ஆனால் சுவாசப் பாதையை ஏதாவது அடைத்துக் கொண்டால் மூச்சை உள்ளே இழுப்பதில்தான் அதிக சிரமமாக இருக்கும். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படுகிற பிராங்கைடிஸ் நோயில் மிகுதியாக கோழை வெளிப்படும். நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை பாதிக்கின்ற எல்லா நோய்களும் மூச்சுத் திணறலை உண்டாக்கும். இரத்தக்கட்டியின் அடைப்பால் நுரையீரலின் இரத்தக் குழாய் அடைப்பாகும்போது திடீர் மூச்சுத் திணறலும் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும்.
மேலும் மனப்பதட்டம், இரத்தசோகை, நிமோனியா போன்றவற்றின் போதும் சிறுநீரக செயலிழப்பிலும் சர்க்கரை நோயின் கோமாவிலும் அலர்ஜியிலும் மூச்சுத்திணறல் ஏற்படும்,
குழந்தைகளின் மூச்சுத் திணறல்:
குழந்தைகளுக்கு இயல்பாகவே சுவாசத்தின் எண்ணிக்கை பெரியவர்களை விட அதிகமாக இருக்கும். விளையாடும் பொருட்களை தவறி தொண்டையில் போட்டுவிட்டால் அதனால் மூச்சடைப்பு ஏற்பட்டு திடீர் முச்சுத் திணறல் உண்டாகும், மூச்சு விடும்போது விசிலடிப்பதைப் போன்ற சத்தம் உண்டாகும்,
குழந்தையின் வாயைத் திறந்து பார்த்து அடைத்துள்ள பொருளை வெளியே எடுத்து விட்டால் மூச்சுத்திணறல் சரியாகிவிடும். குழந்தையை தலை கீழாக குப்புறப்பிடித்து பின்புறமாக தோள்மீது நான்கைந்து தடவை தட்டினால் அடைத்த பொருள் வெளியே வந்து விடும்.
அப்படியும் வராத போது மேல் வயிற்றை வேகமாக அழுத்தினால் அடைத்துள்ள பொருள் வெளி வந்துவிடும். இவைகளினால் அடைப்பை நீக்க முடியாதபோதும் மூச்சுத்திணறலில் மயக்க மானாலும் குழந்தையின் வாயில் வாயைவைத்து காற்றை ஊதி செயற்கையாக சுவாசத்தைச் செயல் படுத்தலாம்.

நெஞ்சுவலி வந்தால்

மாரடைப்பு மட்டுமில்லாமல் வேறு பல காரணங்களினால் நெஞ்சு வலி ஏற்படலாம், அவை வயிறு எரிச்சல், குடல்புண் அஜீரணம், நுரையீரல் உறையின் வலி, இதய உறையின் வலி, மார்பு தசை மற்றும் நரம்பு வலி, தோலில் ஏற்படுகிறவலி போன்றவை.
* மாரடைப்பாகவோ அல்லது அது போன்ற சந்தேகம் ஏற்பட்டாலோ மருத்துவ ஆலோசனை அவசியம் (குறிப்பாக 30 வயது மேற்பட்டோருக்கு)
* குறைந்தபட்சம் இ.சி.ஜி பரிசோதனை, மேலும் தேவைப்பட்டால் மற்ற மாரடைப்பு பரிசோதனைகள் அவசியம்.
* மாரடைப்பின் அறிகுறியா என்ற சந்தேகம் ஏற்பட்டாலே எந்த வேலையையும் செய்யாமல், அமைதியாக பிறர் உதவியுடன் மருத்துவமனைக்குச் செல்லுதல் வேண்டும்.
* முன்பே மாரடைப்பு வந்தவர்கள் நடுமார்பில் வலி மற்றும் மாரடைப்பின் வலியை ஒத்த சிரமம் உள்ளவர்கள் நைட்ரைட் (சார்பிட்ரேட்) மாத்திரை ஒன்றை நாக்கின் அடியில் வைக்கலாம்.
* படுத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லுதல் நல்லது. படுக்க முடியாமல் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் சாய்ந்த நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.