குடல்வால் என்பது சுமார் 3 செ.மீ நீளம் கொண்டது. சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் கீழ்வயிற்றின் வலப்புறத்தில் உள்ளது.
குடல்வால் அழற்சி எப்படி உண்டாகிறது?
பாக்டீரியா மற்றும் மலக்கல் சேர்ந்து குடல்வாலை பாதிப்பதால் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. நார்ச்சத்து உணவுகளான பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடாதவர்களுக்கு இத்தொல்லை உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மலக்கல் என்றால் என்ன?
சிறுகுடலிலுள்ள மலம், கால்சியம், பாக்டீரியா மற்றும் உள்தோலின் எபிதிலியம் அனைத்தும் சேர்ந்து கல்போன்று கெட்டியாகி குடல்வாலின் குறுகலான உட்புறத்தை அடைந்து விடும். இதை மலக்கல் என்பர்.
குடல்வால் அழற்சியின் அறிகுறிகள்
* கடுமையான வயிற்றுவலி – தொப்புளைச் சுற்றி இறுக்கிப் பிடிப்பதை போன்ற வலி. பிறகு இவ்வலி அடிவயிற்றின் வலப்புறத்திற்குப் பரவும். இருமும்போது அசையும் போது கடுமையாக இருக்கும்.
* காய்ச்சல் – ஆரம்பத்தில் காய்ச்சல் இராது, பிறகு லேசான காய்ச்சல் ஏற்படலாம்.
* குமட்டல் – வாந்தி
* அடி வயிற்றின் வலப்புறத்தில் கையை வைத்தால் தோல் பகுதியே வலிப்பது போலத் தோன்றும். கையை லேசாக அழுத்தி விட்டு எடுத்தால் எடுத்த பிறகும் வலிக்கும்.
*அடிவயிற்றின் இடப்புறத்தில் அழுத்திப்பார்த்தாலும் வலப்புறத்தில் வலி ஏற்படும்.
* சிலருக்கு குடல் வால் இயல்பாகவே பின்புறமாக அமைந்திருக்கும். அவர்களுக்கு அழற்சி ஏற்பட்டால் வயிற்றின் பின்புறமும் வலிக்கும். அவர்கள் படுக்கும்போது வலது தொடையை குறுக்கி வைத்து படுப்பர்.
* ஒரு சிலருக்கு வலது காலை அசைத்தால் வலது இடுப்பு மூட்டிற்குள் வலிக்கும்.
* சில சமயங்களில் குடல்வால் அழற்சியின் வலியானது வலது சிறுநீரக பகுதியில் ஏற்படலாம். அப்போது அடிவயிற்றின் வலது புறத்தில் வலி இராது. வயிற்றின் பின்புறமே வலிக்கும்.
* சிலருக்கு நடு வயிற்றின் கீழ்புறத்தில் வலிக்கும். இவர்களுக்கு குடல்வால் உட்புறமாக அமைந்திருக்கும். இதனால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலும் இருக்கும்.
இவர்களுக்கு மலவாயில் விரலைவிட்டு பரிசோதித்தால் நடுவயிற்றின் கீழ்புறம் கடுமையான வலி இருக்கும்.
பரிசோதனைகள் :
* இரத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கை உயர்தல்.
* Creative Peptide உயர்தல்
* ஸ்கேன் பரிசோதனையில் குடல் வாலானது அழற்சியால் வீக்கமடைந்து காணப்படும்.
குடல்வால் அழற்சியில் பாதிப்பு எப்படி இருக்கும்?
குடல்வாலின் உட்புறத்தில் அடைப்பும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் உண்டாகி விடுவதால் குடல்வாலின் உட்புறத்தில் திரவங்கள் அதிகமாகி வீக்கம் ஏற்படும். அதனால் குடல்வாலின் அளவு பெரிதாகிவிடும். இதனால் உள்தோல் சேதமடைந்து புண்ணாகும்.
மேலும் வீக்கமாகும்போது குடல்வாலுக்குள் இரத்த ஓட்டத்தின் தடை ஏற்பட்டு இரத்த உறைவு உண்டாகும். அதைத் தொடர்ந்து குடல்வால் அழுகிவிடும்.
இந்த நிலையிலும் அல்லது குடல்வால் வீக்கம் அதிகமாகி வெடித்த நிலையிலும் வயிற்றுக்குள் கிருமி பரவி வயிறு முழுவதும் கிருமி தாக்கம் ஏற்பட்டு கடுமையான வயிற்றுவலி, வயிற்றை அசைக்க முடியாத நிலை, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்..
குடல்வால் அழற்சியின் பின் விளைவுகள்:
* சிலருக்கு தானாகவோ ஆண்டிபயாடிக் மருந்துகளின் பலனாகவோ வீக்கமடைந்த குடல் வால் சுருங்கி இயல்பான நிலையை அடையும். அப்போது வலி இராது. பரிசோதனையிலும் எதுவும் தெரியாது.
* சிலருக்கு குடல்வால் கட்டி உண்டாகும். அழற்சி ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் குடல்வால் சிறுகுடலின் கடைசிப்பகுதி, பெருங் குடலின் ஆரம்ப பகுதி, ஒமண்டம் அனைத்தும் கிருமி பாதிப்பு திரவங்களால் ஒன்றோடு ஒன்று ஒட்டி பெரிய கட்டியாக தெரியும். சில சமயங்களில் கட்டிக்குள் சீழ் சேர்ந்துவிடும்.
குடல் வால் சீழ் :
* குடல்வால் சீழ்பிடித்து வெடித்து அதிலுள்ள பாக்டீயாக்கள் வெளிவந்து வயிற்றுக்குள் சீழ் பரவும்.
* சில சமயங்களில் கிருமி பாதிப்பு இரத்தத்தில் பரவி செப்டி சீமியா ஏற்படும்.

குடல்வால் சுழற்சியினால் சிக்கல் எப்போது? யாருக்கு?
* இளம் வயதினர் அல்லது முதியோர்
* மலக்கல் அடைப்பு உள்ளவர்கள்
* குடல்வால் உட்பக்கம் உள்ளவர்கள்
* சர்க்கரை நோயினர்
* ஸ்டீராய்டு மருந்து, புற்றுநோய் மருந்து சாப்பிடுவோர் போன்றோருக்கு குடல்வால் வெடித்தல் அல்லது இரத்த ஓட்டம் பாதித்து அழுகுதல் போன்ற சிக்கல்கள் அதிகம்.
குடல்வால் அழற்சியின் சிகிச்சை முறைகள்:
* மருந்து முறை
– வலியைக் குறைக்க வலி நீக்கி மருந்து
– வாந்தி இருந்தால் – மெடாகுளோ புரமைடு..
– திரவ உணவுகள் மற்றும் குளுக்கோஸ் கலந்த திரவத்தை இரத்த சிரையில் செலுத்துதல்.
– ஆண்டிபயாடிக் மருந்துகள் மற்றும் மீட்ரனிட்சோல் (1 வாரத்திற்கு)
இத்தகைய சிகிச்சையில் வலிகுறைந்து முற்றிலும் இயல்பான அளவை குடல்வால் அடைந்து விட்டால் ஆறு வாரங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் குடல்வாலை அகற்றி விடலாம்.
ஒருவேளை வலி முற்றிலும் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் 35 சதவீதத்தினருக்கு ஒரு வருடத்திற்குள் மீண்டும் குடல்வால் அழற்சி ஏற்படும்.
குடல்வால் கட்டியை அறுவை சிகிச்சை செய்யலாமா?
உடனடியாக செய்வதில் சிரமம் உண்டு. மேலும் சிலருக்கு குடல் ஓட்டையாகி மலமானது வயிற்றின் தோல் வழியாக வெளியே வரும்,
எந்த வகை சிகிச்சை தேவை?
* லேப்ராஸ் கோபி முறையில் துவாரத்தின் மூலம் குடல்வாலை அகற்றுதல்.
* திறந்த அறுவை சிகிச்சை முறையில் குடல்வாலை அகற்றுதல்.
யாருக்கு அறுவை சிகிச்சை அவசியம்?
*கடுமையான அழற்சி
* மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற அழற்சி
* குடல்வாலில் புற்றுநோய் பாதிப்புகள் போன்ற வற்றிற்கு அறுவை சிகிச்சை உடனடியாக தேவை.
குடல்வால் சீழ் பிடித்தால்?
குடல்வாலை அகற்றும் போது அருகிலுள்ள பெருங்குடல் ஓட்டையாகின்ற ஆபத்து உள்ளதால் சீழ் வயிற்றிலிருந்து வெளியேற வடிகுழாய் டியூபை பொருத்த வேண்டும். குடல்வாலை அகற்ற முடியாதவர்களுக்கு சில வாரங்கள் கழித்து அகற்றி விடலாம்.
வயிற்று வலி ஏன்?

வயிறு என்பது பல்வேறு முக்கிய உறுப்புகளின் பெட்டகம். சாதாரண அஜீரணத்தில் தொடங்கி புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் வயிற்றுவலி ஏற்படும்.
ஆகையால் வலி – எந்த இடத்தில் எவ்வளவு நாட்கள், எந்த மாதிரி, எவ்வளவு நேரம், சாப்பாட்டிற்கு உள்ள தொடர்பு, மலம் கழிப்பதில் உள்ள தொடர்பு, வாந்தியுடன் உள்ளதா மற்ற இடங்களுக்கு பரவுகிறதா என்பதைப் பொறுத்து எதனால் உண்டாகிறது என்பதை அறியலாம்.
இரைப்பையின் பாதிப்பில் மேல் வயிற்றின் நடுப் பகுதியில் வலி ஏற்படும், குடல்வால் பாதிப்பில் தொப்புகளைச் சுற்றி ஆரம்பித்து கீழ்வயிற்றின் வலப்புறத்தில் தொடர்ந்து வலிக்கும்.
கல்லீரல் மற்றும் பித்தப்பையின் பாதிப்பில் மேல்வயிற்றின் வலப்புறத்தில் ஆரம்பித்து பின்புறமும் பரவும்.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையின் பாதிப்பில் இடுப்பிலிருந்து முன்புறமாக பரவி இன உறுப்பு வரை வலிக்கும்.
கருப்பை மற்றும் சினைப்பையின் பாதிப்பில் அடிவயிற்றின் ஒருபுறத்தில் அல்லது இரண்டு புறத்தில் வலிக்கும்.
இதை அறிய நோயுள்ளவரை எந்த இடத்தில் வலிக்கிறது என்பதை விரலால் தொட்டுக்காட்டச் சொல்லி அந்த இடத்தை மென்மையாக அழுத்திப் பார்த்தால் வலி அதிகமாவதை அறியலாம். எந்த இடத்தில் வலி அதிகமாக உள்ளதோ அந்த உறுப்பின் பாதிப்பு என ஊகிக்கலாம்.

குடல் அடைப்பு

நாம் உட்கொண்ட உணவு குடலில் சரியாக வெளியேறாமல் அடைத்து விடுவதையே குடல் அடைப்பு எனகிறோம்.
குடல் அடைப்பிற்கான காரணங்கள்
குடலில் சதை வளர்ந்து சிலருக்கு குடல் அடைப்பு உண்டாகும். சிலருக்கு ஹெர்னியாவில் குடல் சுருக்கம் ஏற்பட்டு அதனால் குடல் அடைப்பு ஏற்படும்.
குடல் நோய்கள் மற்றும் குடல் சவ்வு நோய்களிலும் குடல் அடைப்பு ஏற்படும்.
குடல் அடைப்பின் அறிகுறிகள்:
* வாந்தி எடுத்தல் (மஞ்சள் அல்லது பச்சை அல்லது காபி நிறத்தில் வாந்தியாகுதல்)
* மலச்சிக்கல்
* வயிறு உப்புதல்
* கடுமையான தொடர் வயிற்றுவலி
* குடல் சுருங்கி விரிவது குறைவதால் காற்று பிரியாமை
* தொடர் வாந்தியால் உடலின் நீரின் அளவு குறைந்து மயக்க நிலை உண்டாகுதல்
* குடல் அடைப்பு தொடர்ந்தால் குடல் சுவரில் கசிவு ஏற்பட்டு வயிற்றுக்குள் பாக்டீரியாக்களின் பாதிப்பு உண்டாகும். அதனால் வயிற்றில் சீழ் பிடிக்கும்.
சிகிச்சை முறை
குடல் அடைப்புள்ளவர்களுக்கு எக்ஸ்ரே மூலம் அடைப்பு உள்ளதை உறுதி செய்யலாம்,
குடல் அடைப்பை உறுதி செய்த பிறகு மூக்கின் வழியாக டியூபை செலுத்தி இரைப்பை மற்றும் குடலுக்குள் உள்ள திரவங்களை உறிஞ்சினால் சிலருக்கு அடைப்பு நீங்கும், இல்லையேல் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

குடலிறக்கம் (அ) ஹெர்னியா

அடி வயிற்றுப் பகுதியின் சுவர்கள் வலுவிழந்து அதன் வழியாக குடல் கீழே இறங்கி விடுவதையே குடலிறக்கம் (அ) ஹெர்னியா என்பர்.
மிகக் கனமான பொருட்களைத் தூக்குதல் , சிறுநீர் கழிப்பதில் சிரமப்படுதல் இடைவிடாத ஆஸ்துமா, உடல் பருமன், வயிற்றில் புற்றுநோய், பெண்களுக்கு பிரசவகாலத்திற்குப் பின் உண்டாகிற வயிற்று தசையின் தளர்வு போன்றவற்றால் வயிற்றின் தசைகள் விரிந்து அதில் புடைப்பு ஏற்படும். அதன் வழியாக குடல், வயிற்றின் கொழுப்பு, ஒமண்டம் போன்ற உறுப்புகள் கீழே இறங்கிவிடும். அதனால் வீக்கம் உண்டாகும். இதையே குடலிறக்கம் என்கிறோம்.
இந்த வீக்கமானது மல்லாந்து படுத்தவுடன் வயிற்றுக்குள் போய் விடும். எழுந்து நிற்கும் போதும் இருமலின் போதும் பெரிதாகிவிடும்.
ஹெர்னியா அடைத்துவிட்டால் சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற தொல்லைகள் உண்டாகும்,
சிலருக்கு குடல் சுருக்கம் ஏற்பட்டு பிறகு குடல் அடைப்பும் உண்டாகி குடல் அழுகி விடும்.
சிகிச்சை முறை:
மருந்து மற்றும் மாத்திரைகளினால் ஹெர்னியாவை குணப்படுத்த இயலாது.
அறுவை சிகிச்சையின் மூலமே குடலிறக்கத்தை குணப்படுத்தி முடியும்,
நவீன லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலம் இதன் சிகிச்சை மிகவும் எளியது,

பித்தப்பை கற்கள்

பித்தப்பை கற்கள் எப்படி உண்டாகின்றன? எப்படி சரி செய்யலாம்?
நாற்பது வயதிற்கு மேற்பட்ட (அதிலும் உடல் பருமனாக உள்ள) பெண்களுக்கே பித்தப்பை கற்கள் உண்டாகின்றன.
கல்லீரலின் அடிப்பகுதியில் உள்ள பித்தப் பையில் பித்தநீர் உள்ளது, இது குடலில் கலந்து உணவை ஜரணிக்க உதவுகிறது. பித்த நீரில் கொலஸ்டிரால், நிறக்காரணி மற்றும் பல்வேறு உப்புப் பொருட்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட விகிதமுறை மாறும்போது அதிலிருந்து கற்கள் உண்டாகின்றன.
கற்கள் உண்டாகக் காரணங்கள்:
உணவில் அதிக கொழுப்பை சாப்பிடு வோருக்கும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்டிரால் உண்டாகி அதனால் கற்கள் உருவாகின்றன.
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அளவிற் கதிமாக அழிக்கின்ற ஒரு வகை இரத்த சோகை நோயில் அழிக்கப்பட்ட சிவப்பணுக்களின் பொருட்கள் பித்தப்பை கற்களாக உருவா கின்றன.
பித்தநீர் வெளியேறுதலில் அடைப்பு உண்டாகும்போது பித்தப் பையில் பித்தநீர் தேங்கி விடுவதால் அதிலிருந்து கற்கள் உண்டாகின்றன.
அறிகுறிகள்:
பெரும்பாலும் பித்தப்பை கற்களினால் உடலில் எந்த அறிகுறிகளும் பலருக்கு உண்டாவதில்லை.
ஆனால் பித்தப்பையின் சுவர்கள் கிருமிகளால் பாதிப்படையும் போது அல்லது கற்களால் பித்தநீர்ப்பாதையை அடைக்கும்போதும் வலி உண்டாகும்.
இந்த வலி மேல் வயிற்றின் வலப்புறத்தில் ஏற்படும். சிலருக்கு நெஞ்சின் வலது புறமும் வலது தோள்பட்டையிலும் கடுமையான வலி ஏற்படும், அத்துடன் குமட்டல் வாந்தி ஏற்படும், குறிப்பாக கொழுப்பான உணவை சாப்பிட்டபின் இத்தொல்லை அதிகமாகும்.
சிலருக்கு குளிருடன் கூடிய காய்ச்சல் உண்டாகும். சிலருக்கு காமாலை ஏற்படும்,
சிகிச்சை முறைகள்
பெரும்பாலோருக்கு பித்தப்பை கற்களால் எந்த தொல்லையும் இராது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கொழுப்புப் பொருள் குறைவான உணவையே உட்கொள்ள வேண்டும். அடிக்கடி வலி மற்றும் குளிர் காய்ச்சல் தொல்லையுள்ளவர்களுக்கு பித்தப்பையை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும்.

குடல் புண்

இரைப்பை, டியோடினம், சிறுகுடல் போன்ற பகுதியில் ஏற்படுகின்ற புண்ணை பொதுவாக குடல்புண் என்போம்.
அதில் முக்கியமானது டியோடினத்தில் ஏற்படுகிற புண். இந்நோயின் போது பசியானால் அதிகமான வயிற்று வலி ஏற்படும். உணவு சாப்பிட்டால் வலி குறையும். ஆனால் இரைப்பை புண்ணில் பசியின் போது வலி இருக்காது. உணவு சாப்பிட்டால் கடுமையான வலி ஏற்படும்.
மேலும் வயிறு உப்புதல், குமட்டல், வாந்தி, சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இரைப்பையின் உட்பகுதியில் மியூக்கஸ் என்றமிருதுவான அறைபடிந்திருக்கும், பல்வேறு காரணங்களால் அந்த உறை பாதிக்கப்பட்டால் இரைப்பையில் சுரக்கின்ற அமிலங்கள் இரைப் பையை அரித்து குடல்புண் ஏற்படுகிறது, ஹெச் பைலோரி என்ற பாக்டீரியாவும் குடல் புண்ணை உண்டாக்கும்.
குடல்புண் அதிகமானால் சிலருக்கு இரத்த வாந்தி ஏற்படும், மேலும் அதிகமானால் இரைப்பையே ஓட்டையாகிவிடும்.
குடல்புண் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை
குடல் புண்ணிற்கு ஆன்டாசிட், ரேனிடின் மற்றும் ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப் படும், இரத்த வாந்தியினால் அதிக இரத்தம் வெளியானால் இரத்தம் செலுத்த வேண்டும். குடல் ஓட்டையானாலோ புண்ணால் இரைப்பை அடைத்தாலோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
குடல்புண் உள்ளவர்களுக்கு அமைதியான மன உளைச்சலில்லாத வாழ்க்கைமுறை, யோகா பயிற்சி போன்றவை நல்ல பலனளிக்கும்.
கடுமையான குடல் புண்ணிலிருந்து இரத்தம் கசிவானால் இரத்த வாந்தியும், கருப்புநிற மலமும் உண்டாகும்.
குடல்புண்ணிற்கு உணவு முறை
புண்ணை குணப்படுத்த உதவும் உணவுகள்
* பால், வெண்ணெய், ஓட்ஸ், வாழைப்பழம் போன்றவை புண்ணை ஆற்ற உதவும்.
*கடுமையான புண்ணும் வயிற்று வலியும் இருந்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் பாலைக் குடித்தால் நல்லது.
புண்ணிற்கு கெடுதல் இல்லாத உணவுகள்
*வேகவைத்த முட்டை, வேக வைத்த உருளைக்கிழங்கு, வாழைப் பழம், உப்பு கலந்த பிஸ்கட், ரொட்டி போன்ற உணவுகள் கெடுதல் இல்லாத உணவுகள் ஆகவே சாப்பிடலாம்.
குடல்புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
* மதுபானங்கள், காபி, புகைப் பழக்கம், மிளகு, காரவகைகள், பாட்டிலில் உள்ள பானங்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
ரேனிடிடின், ஓமிபிரசோல், ஆண்டாஸிட் போன்ற மருந்துகள் குடல் புண்னை குணப்படுத்த உதவும்.
இரைப்பை அடைப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

கல்லீரல் சுருங்குதல்

(பிரகாஷ், வயது 35, பத்தாண்டுகளாக மதுப் பழக்கம். வயிறு புரட்டியதைப் போன்ற உணர்வு, திடீரென இரத்த வாந்தி ஒண்ணறை லிட்டருக்கு மேல் இரத்தம் வெளியானதால் மயக்கமடைந்தார்.
அவருக்கு உடனடியாக நான்கு பாட்டில் இரத்தம் செலுத்தப்பட்டது. ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனைகளில் அவருக்கு ஈரல் பாதிப்பு நோயான சிர்ரோஸிஸ் கண்டுபிடிக்கப்பட்டது,. அதன் விளைவாக உணவுப் பாதையில் உண்டான வேரிஸெஸ் எனப்படுகிற இரத்தக் குழாயிலிருந்து ஏற்பட்ட இரத்தக்கசிவை எண்டாஸ் கோபியில் கண்டறிந்து அதை பேண்டிங் மூலம் அடைக்கப் பட்டது).
இரத்த வாந்தி காரணங்கள்
*இரைப்பையில் புண்
* உணவுப் பாதையில் புண்
*சிர்ரோஸிஸ் என்ற ஈரல் நோய்
* இரைப்பை புற்று நோய்
* மாறுபட்ட இரத்தக் குழாய்களினால் ஏற்படுகிற கசிவு போன்ற காரணங்களால் இரத்த வாந்தி ஏற்படும்.
கல்லீரல் சுருங்குதல் அல்லது சிர்ரோஸிஸ் என்ற நோய் நாற்பது வயதிற்கு மேலுள்ளவர்களையே பெரும் பாலும் பாதிக்கும்.உடற்சோர்வு, பசியின்மை, அஜீரணம் வயிற்றின் இடப்புறம் வலி போன்ற அறிகுறிகள் முதலில் தோன்றும்.நாளடைவில் உடல் மெலிந்து வரும். வயிறு வீக்கம், கால் வீக்கம் போன்றவை உண்டாகி வயிறு பெரியதாக புடைத்துவிடும்.சிலருக்கு காமாலை ஏற்பட்டால் கண்களும், தோலும். மஞ்சளாக காணப்படும்.
இந்நோயினர் புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமுள்ள உணவுகளைச் சேர்க்க வேண்டும்.உடல் வீக்கம் ஏற்பட்டவர்கள் உணவில் உப்பைக் குறைத்து சாப்பிட வேண்டும்.இந்நோயை பூரணமாகக் குணப்படுத்த முடியாது, மது அருந்துவோர் அதை விட்டுவிடுவதே இதைத் தடுக்கும் வழியாகும். பி.காமாலை தடுப்பு ஊசிகளை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.