முக்கியக் கட்டம்
மனிதன் என்பது – ஆசை, வேதனை, குறை, தவறு, கோபம், எரிச்சல், தயக்கம், ஏமாற்றம் போன்றவற்றின் கலவைதான்.

* நடந்தவை நடந்ததுதான். அதற்காக வருத்திக் கொள்ளாமல் மனதை நொந்துக் கொண்டு தண்டித்துக் கொள்ளாமல் நம்மீது அன்பு செலுத்துவதே முதல் கட்டம்.

* இனிமேல் விழிப்போடும், எச்சரிக்கையோடும் சரியானதை செய்ய தயாராகுதல்; சில சமயங்களில் அப்படியும் செய்ய முடியாமல் போகும் என்பதை ஏற்றுக் கொள்ளுதல் இரண்டாம் கட்டம்.

* எது நடந்தாலும் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு செய்வதை முடிந்த அளவுக்குச் சிறப்பாக செய்து, நம்மையே பாராட்டி ஊக்குவித்து முன்னேற்றப் பாதையில் தொடர்வது தான் மூன்றாவது முக்கிய கட்டம்.

உயர்வலிமை – ஆனந்தம்
மனிதர்களுக்கு
– சிலரோடு எப்போதும் இருப்பதில் மகிழ்ச்சி
– வேலைகளை அயராது செய்வதற்கு உற்சாகம்
-தொலைக்காட்சியுடன் நான் முழுவதும் கூட பொழுதை போக்க முடியும்.
-ரேடியோவில் பாட்டு கேட்டல் அல்லது செல்போனில் தொடர்ந்து உரையாடுதல் பிடிக்கும்.
– எதுவுமே இல்லாவிட்டால் பேப்பரை எடுத்து எல்லாவற்றையும் படிப்பர்.
– சிலருக்கு வேலை ஓய்வு பெற்றால் மனச் சோர்வாகி விடும்.
– சிலரோ தனியாக இருக்கும் போது புகையை ஊதி ஊதி தள்ளுவர். இதெல்லாம் எதனால்?
-எல்லாவற்றிலும் ஈடுபாடு கொண்டு இருக்க முடிந்த மனிதனால் தன்னோடு தானே இருக்க முடியாமை தான் காரணம்.
– ‘சும்மா இரு’ என்றால் பெரும்பாலும் மனிதர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையாகிவிடும். அதற்காகவே பலர் பதவியை, வேலைகளை, பிற நண்பர்களைத் தேடுகிறார்கள்.

– தனிமையில் வேதனையில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கற்றுக் கொண்டால் அது ஒரு உயர்ந்த மனப்பக்குவம் : வலிமை : ஆனந்தம்.

நிரந்தர மகிழ்ச்சி
எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் தானாக மகிழ்ச்சி பொங்க வேண்டும். அதற்கு எதன்மீது ஆழ்ந்த வெறி இருக்கக் கூடாது.

மனம் – எந்த ஒன்றையும் ஆவேசமாக நினைக்காமலும் எதனாலும் துரத்தப்படாமலும் செயல்பட வேண்டும்.

இத்தகைய நிலையே ஆனந்தம். நிரந்தர மகிழ்ச்சி.

உலக நடைமுறைகள் எல்லாம் நாம் நினைப்பதைப் போல நூறுசதம் நடக்க எதிர்பார்க்கிறோம். வெளிச் சூழல்களை மனிதன் ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.மனிதனால் முழுமையாக கட்டுப்படுத்த முடிந்த ஒன்று அவரவர் மனமே. அதையே கட்டுப்படுத்த முடியாத போது வெளியில் உள்ள எதுவும் நீடித்த மகிழ்ச்சியை தரமுடியுமா?

எப்படி இருக்கிறீர்கள்?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

இக்கேள்வி எல்லோரும் கேட்பது.

இதற்கு ‘நான் புதுமையாக… செய்து கொண்டிருக்கி றேன்’ என்று சொன்னால் பலருக்கு உள்மனதிற்குள் பிடிப்பதில்லை. “நேற்றுவரை ஒண்ணுமில்லாம இருந்தவன் இன்னைக்கு பெருசா பேசறான். என்ன ஆகுதுன்னு பாப்போம்” என்று குறை சொல்ல காத்திருப்பார்கள்.

எனக்கு “எதுவும் சரியில்லை; ஒரே சோகம்தான்” என்று சொன்னால், ‘அவன் ஒரு அறுவை: அவன்கிட்ட ஏன் பேசினோம்?” என்று விலகி ஓடுவார்கள்.

பொதுவாக மனிதர்கள், தானே புத்திசாலி என்ற கோணத்தில் பேசுபவரை விரும்புவதில்லை.

பிறருடைய அறிவுரைகளை கேட்க விரும்புவதில்லை.

எப்படி இருக்கிறீர்கள்? என்றால் ‘நலம்’ என்று சொன்னால் போதுமானது.

எது விவேகம்
மனிதர்கள் தங்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள்?
– தனக்கு வயது அதிகமாகும் போது அறிவும் அதிகமாகிறது.
– தான் இளமையாக இருக்கும்போது முதுமை என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடியது.
– தவறுகள் நடந்தால் அதிக குற்ற உணர்வும் கோபமும் அடைவது.
இப்படித்தான் பலருடைய மனநிலை.
– பொதுவாக வயதாகும் போது அனுபவம் அதிகமாகும். அறிவு அதிகமாகும் என்பதில்லை.
– முதுமை எல்லோருக்கும் பொதுவானது. அதை ஏற்க வேண்டியது தான்.
– புதியவற்றை செய்யும்போது தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதனால் தவறு செய்யும்போது வீணாக வருந்திக்கொள்ள வேண்டியதில்லை. காலம் எல்லா காயங்களையும் ஆற்றிவிடும். விவேகம் என்பதே தவறுக்குப் பின் மனம் பாதிக்கப்படாமல் அதிருந்து

இதுதான் உண்மை

நான் எவ்வளவு புத்திசாலி என்று என் பெற்றோருக்கு தெரிவதில்லை. இது பிள்ளைகளின் புலம்பல். என்னுடைய அறிவை அனுபவத்தை, ஆலோசனையை என் பிள்ளை கேட்பதில்லை – இது பெற்றோர்களின் புலம்பல்.எங்கப்பா, அம்மா அந்த காலத்து மனிதர்கள். நவீன நாகரிகத்தைப் பற்றி அவங் களுக்கு புரியாது – இது பிள்ளைகளின் மனக் குமுறல்.பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளைப் பேசுவர். பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர்களின் குறைகளைப் பேசுவர். உண்மையில் எல்லா மனிதர்களிடமும் குறைகள் இருக்கவே செய்யும்.

குறைகளே இல்லாதவரா நீங்கள்! அப்போதும் ஏதாவது ஒன்றைச் சொல்லி “குறையே இல்லாத அதிபுத்திசாலினு நினைப்பு” என்று குறை சொல்லத்தான் போகிறார்கள் – இதுவும் உண்மை.

தலைமுறைக்கு தலைமுறை அறிவு வளருவதுதான் நியதி. பிள்ளைகள் பெற்றோர் ஆகும்போது தன்னுடைய பெற்றோர்களின் உணர்வுகளை ஒப்புக் கொள்வார்கள். குறையுடை யவர்களாய் இருந்தாலும் பெற்றோரை குறைச் சொன்னாலும் தங்களுடைய நன்றியை செய்வார்கள். இதுதான் உண்மை.

படிப்பா? ஞானமா?
படிப்பு தொழில் திறமைகளை வளர்க்கும்
ஞானம் எதிர்காலத்தை உணர்த்தும்
படிப்பு ஆணவத்தை அதிகரிக்கும்
ஞானம் அடக்கத்தைக் கொடுக்கும்
படிப்பு பிறரை ஆள நினைக்கும்
ஞானம் அன்பு செய்யும்
படிப்பு ஆரவாரத்தைத் தரும்
ஞானம் அமைதியுடனே இருக்கும்.

பல சிப்பிகளைத் திறந்தால் ஒருமுத்து
ஒரே வேலையைச் செய்கின்ற இருவரில் ஒருவர் பெரிய அளவில் வளர்கிறார். மற்றவரோ சராசரி வாழ்க்கைகாகப் போராடுகிறார். இது ஏன்?
அவருக்கு அதிர்ஷ்டமா?
உண்மையில் அவர் முன்னர் செய்த வெளியில் தெரியாத செயல்களின் பலனாக இருக்கும்.
அவருக்கு பின்னடைவு வராதா?
வரவே செய்யும். இருந்தாலும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டிருப்பதால் சிலவற்றில் உயர்வு ஏற்படுகிறது, சிலவற்றில் பின்னடைவு வந்தாலும் சமப்படுத்தி விடுகிறது.
முயற்சி பலனை தராத போது எப்படி தொடர்ந்து செயல் படுவது?
எந்த முயற்சி எந்த வகை பலனைத் தரும் என்று எல்லா இடங்களிலும் தெரியாது. அது மட்டுமில்லாமல் பலனை எதிர் பாராமல் செயலாற்றுவது தான் மனப்பாதிப்பைத் தவிர்க்கும்.
பிடித்தமான செயலை நன்றாக செய்தாலும் பலன் கிட்டாவிட்டால் என்ன செய்வது?
சிலருக்கு ஓவியம் வரைதல், சிலருக்கு நடிப்பு சிலருக்கு பேச்சு, சிலருக்கு விளைôட்டு என்று வெவ்வேறு விதமான பிடித்தமான விஷயங்கள் இருக்கும். அதைச் செய்வதில் லாபம் பெரிதாக இல்லாவிட்டாலும் மனதிருப்தி நிறைய இருக்கும்.

அவமானமே இல்லை
ஜென் குருவிடம்
“பிறர் கோபமாக திட்டினால் அவமானப்படுத்தினால் எப்படி செயல்பட வேண்டும்? – சீடன் கேட்டான்.
“நீ கழுதையா? எருமையா? குதிரையா? எதைப்போல செயல்படுவது என்பதை முடிவு செய்” – குரு.
– கழுதையை அடித்தால் பின்னங் காலால் உதைக்கும்.
– எருமையை அடித்தால் எதுவும் செய்யாது. அப்படியே இருக்கும்.
– குதிரையை அடித்தால், அதையே கட்டளையாக எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கும்.
பிறர் நம்மை கோபமூட்டும்போது – அதை மனதிற்குள் தூக்கி வைத்து உடலுக்குள் ஊடுருவி மனச்சோர்வு, மனக்கசப்பு அடைந்து மற்றவரிடம் கத்தலாம்; திட்டலாம்; கேவலப் படுத்தலாம். இது பின்னோக்கி செல்தல்.
மாறாக – அதையே ஒதுக்கித் தள்ளி விட்டு, மனதிலும் மறந்துவிட்டு குறிக்கோளை நோக்கி வேகமாக ஓடவும் செய்யலாம். இது தான் முன்னோக்கிச் செல்தல்.