பெண்களுக்கான எடை குறைப்பு முறைகள்
பெண்களின் கொழுப்பு செல்கள், ஆண்களின் கொழுப்பு செல்களில் இருந்து வேறுபட்டவை. எந்தவித பஞ்சத்திலும் வயிற்றில் உள்ள கருவிற்கு வேண்டிய உணவுப்பொருட்கள் குறைவு படக்கூடாது என இறைவன் அருளிய வரம் இது. ஆகவே சாப்பிடும் உணவு, உடனே உடல் கொழுப்பாகும். ஆனால் உடல் கொழுப்பு, கரைய குறைந்தது 10 மாதங்கள் ஆகும். ஆம். வயிற்றில் குழந்தை உள்ள காலம் இது! ஆனால் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பெண்கள் ஹார்மோன்கள் உடல் கொழுப்பு கரைய உதவுகின்ற சில குறிப்பிட்ட திரவங்களை சுரக்காமல் தடுக்கும். ஆகவே பெண்கள் எடை குறைய முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் வெற்றி கிட்டும்.
பெண்கள் உடல் பருமனாவது, குறிப்பிட்ட சில காலங்களில் அதிகரிக்கும். சுமார் 16 முதல் 20 வயது வரை ஹார்மோன்களினால் உடல் எடை அதிகரிக்கும். திருமணம் ஆன உடனேயும், வயிற்றில் குழந்தை இருக்கும்பொழுதும் பால் ஊட்டும் பொழுதும், சாப்பிடுகின்ற அதிக உணவால் எடை ஏறும். குழந்தை பிறந்த உடனேயே எடை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடாவிட்டால், ஏறிய எடை நின்று விடும். சிறுதீனிகள் சாப்பிட்டு கொண்டே இருந்தாலும் எடை அதிகரிக்கும். பெண்கள் எடை குறைப்பு முறைகளில் முக்கியமானவை வீட்டு வேலைகள். குறிப்பாக கூட்டுவதும், பெருக்குவதும் நல்ல உடற்பயிற்சிகள். மூன்று வேளை உணவில் ஒருவேளை மிக குறைத்து உண்ணவும் அல்லது விரதம் இருக்கவும். மாமிச உணவுகள் எண்ணெயை அதிகம் கொண்டவை. அதைத் தவிர்க்கவும். எண்ணெய் குறைத்து சமையல் செய்யவும். அரிசி சாதத்தின் அளவைக் குறைத்து சிறுதீனிகளை தவிர்த்து, சர்க்கரைக்கு பதிலாக சர்க்கரை மாற்று முறைகளை கையாண்டு வந்தால் எடை குறையும். ஆனால் பெண்கள் காத்திருக்க வேண்டும். நிச்சயம் முயற்சிகள் பலன் அளிக்கும். தளர வேண்டாம்.
ஆண்களுக்கான எடை குறைப்பு முறைகள்
ஆண்கள் எடை கூட மிக முக்கிய காரணங்களில் குறிப்பிட தகுந்தவை திரவ உணவுகளே! காபி, டீ என பகல் நேரத்திலும், மதுவினை இரவிலும் அருந்துவதால் மிக அதிக கலோரிகள் சேருகின்றன.. 1 காபி அல்லது டீ சுமார் 100-150 கலோரி கொண்டது. 1 பெக் அதாவது 60 மிலி கொண்ட விஸ்கியும், பிராந்தி போன்ற மதுபானங்கள் 200 கலோரி கொண்டது. இத்துடன் குளிர்பானங்களை சேர்த்து (100 மில் குளிர்பானம் 100 கலோரி) மேலும் சிறு தீனிகளைச் சேர்த்தால் சுமார் 800-1000 கலோரிகள் சுலபமாக சேர்ந்து, இது உடல் கொழுப்பாக மாறும். சிலர் நன்றாக நாங்கள் உடற்பயிற்சி செய்கிறோம் என்பார்கள். அரை மணிநேரம் நடந்தால் சுமார் 150 கலோரிதான் செலவாகும்.
ஆண்கள் எடை குறைக்க, முதலில் தாங்கள் உண்ணும் திட, திரவ பொருள்களின் கலோரிகளை அறிந்து கொள்ள வேண்டும். தங்கள் வயதிற்கேற்ற சுமார் 1500 முதல் 2000 வரை உண்ணலாம். உண்ணுவதை மற்றும் குடிப்பதை குறைப்பது தான் முதல் வழி!

உடற்பயிற்சியில் சுமார் 150 முதல் 300 கலோரி வரை குறைக்க வாய்ப்புண்டு. உடல் பயிற்சியினை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். அமர்ந்து வேலை செய்வோர் அமர்ந்தபடியே பயிற்சி செய்ய அநேக முறைகள் உண்டு. அவற்றைச் செய்யவும். குறிப்பாக கார், பைக் போன்றவற்றில் செல்லும் பொழுது பார்க்கிங் சற்று தள்ளி செய்துவிட்டு நடப்பது நல்ல பயனைத் தரும்.