ஆழியாரில் அறிவு திருக்கோயில் அமைத்த அருட்தந்தை ‘வேதாந்திரி மகிரிஷி” அவர்கள் ஒரு இல்லத்திற்கு விஜயம் செய்தார். அந்த இல்லத்தில் வசித்த கணவனும், மனைவியும் அவரை வரவேற்றனர். மகிரிஷி அவர்கள் உள்ளே செல்லாமல் வாசற் படியிலேயே நின்றுவிட்டார். கணவனும் மனைவியும் அருகே வந்தனர். வீட்டின் உள்ளே செல்ல நினைத்தவர் சற்று தயங்கி வெளியில் நிற்கலானார். மகிரிஷியின் இந்த செயல் பார்ப்பவர்களுக்கு வியப்பைத் தந்தது.
பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி ஏதோ ஜபம் செய்து தண்ணீரை அந்த வீட்டின் சுவர்களில் தெளித்து உள்ளே சென்றார். அந்த வீட்டில் வசிக்கும் கணவன், மனைவியை அழைத்து ஏன் எப்பொழுதும் கடுமையான வார்த்தைகளை பேசி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்? என்றார். அப்பொழுது அந்த கணவன், மனைவிக்கு வியப்பும், பயமும் சூழ்ந்து கொண்டது.
மகிரிஷி தொடர்ந்தார். நீங்கள் போடும் சண்டை, கூச்சல்கள், பேசிய வார்த்தைகள் எல்லாம் இந்த வீட்டின் சுவர்களில் பதிவாகி உள்ளது. அந்த பதிவுகளே பிரதிபலிக்கும்.. இது எல்லா வீடுகளுக்கும் பொருந்தும். வெறும் செங்கல், மணல் என்று நினைத்துவிட வேண்டாம். ஒலிகளை பெருக்கும், பிரதி பலிக்கும் சக்தி அவைகளுக்கு உண்டு. ஆகையால் எல்லோரும் தங்கள் வீடுகளில் அன்பான சொல்லால், செயலால் உறவாடுங்கள் என்று கூறினார். அவர் இந்த வையகத்தின் மீதும் நம் மீதும் கொண்ட அன்பின் வெளிப்பாடே “வாழ்க வளமுடன்” என்றவாழ்த்து சொல். இந்த சொல்லை சொல்லும் நமக்கு வழங்கிய வேதாந்திரி மகிரிஷி அன்பில் ஓர் ஆசிரியன்.